கதாநாயகன் அவதாரம் எடுக்கும் ரவி மரியா

ராம் தேவ் பிக்சர்ஸ் நிறுவனத்தின் மூன்றாவது தயாரிப்பாக உருவாகும்  திரைப்படத்தில் ராதா ரவி – ரவி மரியா ஆகியோர் கதையின் நாயகர்களாக நடிக்கிறார்கள்.  இந்த கூட்டணியின் அரசியல் நகைச்சுவை தர்பார் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தும் என படக் குழுவினர்  தெரிவித்திருக்கிறார்கள்.  ராம்தேவ் இயக்கத்தில் உருவாகும் பெயரிடப்படாத இந்த திரைப்படத்தில் ராதா ரவி, ரவி மரியா, , கஞ்சா கருப்பு, இயக்குநர் பேரரசு ,நிழல்கள் ரவி , பழ. கருப்பையா, நாஞ்சில் சம்பத் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். ******

கார்த்திக் நாயர் ஒளிப்பதிவு செய்து வரும் இந்த படத்திற்கு துர்காஸ் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறார்.  கலை இயக்கத்தை குணசேகரன் கவனிக்கிறார். அரசியலும் , நகைச்சுவையும் கலந்து தயாராகும் இந்த திரைப்படத்தை ராம் தேவ் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் – இயக்குனர் ராம்தேவ் தயாரிக்கிறார். மேலும் இந்தத் திரைப்படத்தை கண்ணகி மைந்தன் கிரியேஷன்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது.

படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், ” தற்போது தமிழக அரசியல் களம் அடுத்த ஆண்டு நடைபெறும் பொது தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள்? என்ற கருத்துக்கணிப்புகளால் அனல் பறந்து கொண்டிருக்கிறது. அதற்கு ஏற்ற வகையில் ராதா ரவி மற்றும் ரவி மரியா ஆகிய இருவரும் கதையின் நாயகர்களாக இணைந்து திரையில் தோன்றி அரசியல் காமெடி தர்பார் நடத்துகிறார்கள். இது ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும். அத்துடன் சமூகத்திற்கு தேவையான கருத்துக்களை மையப்படுத்தியும் இப்படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டிருக்கிறது ” என்றார். மேலும் கூறுகையில் ரவி மரியாவுக்கு கதாநாயகி தேடுதல் படலம் இந்திய மாநிலங்களில் மட்டுமல்ல உலக அளவில் கதாநாயகி தேடும் படலம் முடுக்கி விடப்பட்டுள்ளது என்றார்

இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்து இருக்கிறது. இரண்டாம் கட்ட படப்பிடிப்பு எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் வாரத்தில் தேனியில் தொடங்குகிறது.  இதனிடையே இயக்குநரும், நடிகருமான ராம் தேவ் இயக்கத்தில் புதுமுகங்கள் நடிப்பில் வெளியான ‘பழகிய நாட்கள்’, ‘மூன்றாம் மனிதன்’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் சமூக வலைதள பக்கத்தில் வெளியாகி, பத்து கோடிக்கும் மேற்பட்ட பார்வைகளை பெற்று பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது என்பதும், இவரது இயக்கத்தில் வெளியான ‘பழகிய நாட்கள்’ மற்றும் மூன்றாம் மனிதன் திரைப்படத்தில் இடம் பிடித்த வசனங்களை சமூக வலைதளத்தில் ரீல்ஸ்களாக வெளியிடப்பட்டு, பல மில்லியன் பார்வைகளை குவித்து சாதனை படைத்திருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.