(தங்க முகையதீன்)
செவன் ஸ்டுடியோ எஸ்.எஸ்.லலித்குமார் தயாரிப்பில் தமிழ் எழுதிய கதைக்களத்தில், சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில் விக்ரம் பிரபு, ஆனந்தா தம்பிராஜா, அக்ஷய் குமார், அனிஷ்மா, மூணாறு ரமேஷ், சமுத்திரக்கனி, சுஹாசினி மணிரத்னம், தலைவாசல் விஜய் ஆகியோர் நடித்துள்ள படம் “சிறை”. வேலூரில் தலைமை காவலராக வேலை பார்க்கிறார் விக்ரம் பிரபு. அதே வேலூர் சிறைச்சாலையில் 5 வருட இஸ்லாமிய விசாரணைக் கைதியாக இருக்கிறார் அக்ஷய் குமார். அவரை அழைத்துக் கொண்டு சிவகங்கை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திவிட்டு மீண்டும் வேலூர் சிறைக்கு அக்ஷய் குமாரை கொண்டுவர வேண்டும். இந்த பணியை நிறைவேற்ற விக்ரம் பிரபு அக்ஷய் குமாரை அழைத்துக் கொண்டு அரசு பேரூந்தில் சிவகங்கைக்குச் செல்கிறார். வழியில் பேரூந்து ஒரு சாலையோர டீக் கடையில் நிற்கிறது. அங்கு தகராறு நடக்கும் கூட்டத்தை கலைக்க விக்ரம் பிரபு கீழே இறங்கி செல்கிறார். இந்த சந்தர்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு கைதி அக்ஷ்ய் குமார் போலீஸ் துப்பாக்கியுடன் தப்பித்துவிடுகிறார். தப்பிச் சென்ற கைதி அவ்வூரிலுள்ள காவல் நிலையத்தில் சரண்டாகிவிடுகிறார். தப்பிச் சென்ற கைதி ஏன் காவல் நிலையத்தில் சரண்டரானார்? அவர் ஏன் விசாரணைக் கைதியாக 5 வருடங்களாக சிறைச்சாலையில் இருக்கிறார்? அவரை நீதிமன்றம் விடுதலை செய்ததா? இல்லையா? பணியின்போது கைதியை தப்பிக்கவிட்ட விக்ரம் பிரபு மீது சட்டம் பாய்ந்ததா இல்லையா?. விளிம்பு நிலையிலிருக்கும் பொதுமக்களுக்கு சட்டம் பாதுகாப்பு அளிக்கிறதா இல்லையா? இதுபோன்ற கேள்விகளுக்கு மிகத்துள்ளியமாகவும் துணிச்சலாகவும் இப்படத்தின் மூலம் விடை சொல்லியிருக்கிறார் இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி. சிறுபான்மை இனத்தவர்களும் இந்தியர்களே என்ற நியதியை எடுத்துச் சொல்லும் இயக்குநரின் சமுதாய அக்கறை இப்படத்தின் மூலம் வெட்டவெளிச்சமாகிறது. காவல்த்துறை ஆய்வாளராக நடித்திருக்கும் மூணாறு ரமேஷின் வசனம் திரையரங்கில் பார்வையாளர்களை எழுந்துநின்று கைத்தட்ட வைக்கிறது. காவல்த்துறையின் கண்ணியத்தை காப்பாற்றும் கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கும் விக்ரம் பிரபு, சட்டத்தின் முன் அனைவரும் சமமே என்ற தோரணையில் நடிக்கவில்லை வாழ்ந்து காட்டியிருக்கிறார். கருணை என்ற நூலில் நெய்திருப்பதுதான் காக்கிச்சட்டை என்று இப்படத்தின் மூலம் நிரூபித்திருக்கிறார் விக்ரம் பிரபு. கைதியாக நடித்திருக்கும் அக்ஷய குமாரும் அவரின் காதலியாக நடித்திருக்கும் அனிஷ்மாவும் அறிமுக நடிகர்களாக தெரியவில்லை. அனுபவமிக்க நடிகர்களாக ஜொலிக்கிறார்கள். பாடல்கள் ரசிக்கவில்லை என்றாலும் பின்னணி இசையில் பிரமாதப்படுத்தியிருக்கிறார் இசை அமைப்பாளர். பாராட்டுதலுக்குறிய படத்தை தந்திருக்கிறார் இயக்குநர் சுரேஷ் ராஜமுமாரி.

