தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த விவசாயி ஒருவர் தனது ஆபரேஷனுக்காக வைத்திருந்த பணத்தை எலி சாப்பிட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.* தெலுங்கானா மாநிலம் மெகபூப் நகர் பகுதியை சேர்ந்த ரெட்டியா நாயக் என்பவர் விவசாயம் செய்து வருகிறார். இவர் தனது விளைநிலத்தில் உற்பத்தியாகும் காய்கறிகளை மற்றவர்களிடம் விற்று அதன் மூலம் பணத்தை சம்பாதித்து சேர்த்து வைத்துள்ளார். இவர் மிகவும் வறுமையானவர். இவருக்கு திடீரென்று வயிற்றுவலி ஏற்பட்டதால் மருத்துவரை அணுகிய போது அவருக்கு குடல் இறக்கம் ஏற்பட்டதாகவும், அதற்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என கூறியுள்ளனர். இதனால் தனது அறுவை சிகிச்சைக்காக சிறிது சிறிதாக தனது வீட்டில் உள்ள ஒரு பெட்டியில் பணத்தை சேர்த்து வைத்துக் கொண்டிருந்தார். அந்த பணம் பத்தாது என சிலரிடம் கடன் வாங்கி அந்த பணத்தையும் சேர்த்து வைத்திருந்தார். மேலும் பணம் சேர்ப்பதற்காக அவர் முயற்சி செய்து கொண்டிருந்தார். ஒரு நாள் இவர் பணம் வைத்திருந்த பெட்டியை திறந்து பார்க்கும்போது பணத்தை எல்லாம் எலி கடித்திருந்தது தெரியவந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த நாயக் செய்வதறியாமல் திகைத்து நின்றார். அவர் 500 ரூபாய் நோட்டுகளாக வைத்து சுமார் இரண்டு லட்சம் பணத்தையும் எலி கடித்து நாசம் செய்தது. இதையடுத்து பணத்தை எடுத்துக் கொண்டு வங்கிக்கு சென்றுள்ளார். ஆனால் வாங்கியும் இவரது பணத்தை மாற்றி தரவில்லை. ரிசர்வ் வங்கியிடம் இதுகுறித்து முறையிட்டு அவரிடம் நேரடியாக மாற்றிக் கொள்ளும்படி கூறியுள்ளனர். இந்த ஏழை விவசாயி அது எப்படி செய்வது என்பது தெரியாமல் தவித்து வந்துள்ளார். இந்த செய்தி வெளிவந்ததை அடுத்து தெலுங்கானா பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் சத்தியவதி ரத்தோடு விவசாய அறுவை சிகிச்சைக்கு அவர் விரும்பும் மருத்துவமனையில் செய்துகொள்ள ஏற்பாடு செய்வதாக தெரிவித்தார்.