“கொம்புசீவி” திரைப்படம் விமர்சனம்

தங்கமுகையதீன்

ஸ்டார் சினிமாஸ் முகேஷ், டி.செல்லையா தயாரிப்பில் பொன்ராம் இயக்கத்தில் சரத்குமார், சண்முகப் பாண்டியன் விஜயகாந்த், தர்னிகா, காளி வெங்கட், ஜார்ஜ் மரியான், முனிஷ்காந்த், கல்கி ராஜா, சுஜித் சங்கர், மதன் பாப் ஆகியோர் நடித்துள்ள படம் ” கொம்புசீவி”. மதுரை மாவட்டம் வைகை அணையின் ஓரத்திலுள்ள ஒரு கிராமம் வெள்ளப்பெருக்கில் தண்ணீரில் மூழ்கிவிடுகிறது. பலர் அந்த வெள்ளத்தில் மூழ்கி இறந்து விடுகிறார்கள். அதில் சண்முகப்பாண்டியனின் தாய் தந்தையும் இறந்து விடுகிறார்கள். சிறுவனாக இருக்கும் சண்முகப்பாண்டியனை சரத்குமார் தனது பாதுகாப்பில் வளர்த்து வருகிறார். சரத்குமாரை சண்முகப்பாண்டியன் மாமா என்று கூப்பிடுகிறார். சரத்குமார் ஊர்மக்களுக்காக போராடும் ஒரு போராளியாக மட்டுமல்லாமல் போக்கிரியாக வாழ்ந்து வருகிறார். அவருக்கு பக்கபலமாக சண்முகப்பாண்டியனும் போக்கிரியாக வளர்ந்து வாலிப வயதை அடைகிறார். இருவரும் கஞ்சா செடி வளர்த்து அதை விற்று ஊர்மக்களுக்களின் வாழ்வாதாரத்துக்கு பாடுபடுகிறார்கள். அவ்வூரிலுள்ள காவல்நிலையத்தில் காவலாளிகளாக காளிவெங்கட்டும் ஜார்ஜ் மரியானும் இருக்கிறார்கள். அந்த காவல்நிலையத்திற்கு. புதிய காவல்த்துறை ஆய்வாளாராக தர்னிகா பொறுப்பேற்கிறார். அவர்மீது சண்முகப்பாண்டியன் காதல் வசப்படுகிறார். ஆனால் கஞ்சா விற்கும் சண்முகப்பாண்டியனை கைதுசெய்து சிறையில் வைக்கிறார் தர்னிகா. இதைக் கேள்விபட்ட சரத்குமார் காவல்நிலையத்துக்கு தீ வைத்துவிட்டு சண்முகப்பாண்டியனை சிறையிலிருந்து விடுவிக்கிறார். இதைக் கேள்விப்பட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுஜித் சங்கர், சரத்குமாரையும் சண்முகப்பாண்டியனையும் அடித்து அவமானப்படுத்துகிறார். அந்த அவமானத்துக்கு கண்காணிப்பாளரை எப்படி பழிதீர்த்தார்கள்? ஆய்வாளர் தர்னிகாவின்மீது காதல்வசப்பட்ட சண்முகப்பாண்டியன் அவரை திருமணம் செய்தாரா? இல்லையா? என்பதை ஒரு உண்மைச் சம்பவத்தை தழுவி ஆக்ரோஷ்மாகவும் நகைச்சுவையாகவும் சொல்லியிருக்கிறார் இயக்குநர் பொன்ராம். படத்தின் முதல் பாதி நகைச்சுவையுடன் படமாக்கப்பட்டிருக்கிறது. இரண்டாம்பாதி ஆக்ரோஷமான கதைக்களத்துடன் முடிவடைகிறது. சரத்குமார் வயதுக்கேற்ற நடிப்பை பிரதிபலித்திருக்கிறார். வீராப்பாக பேசிவிட்டு வெள்ளைவேட்டியை உருவி காவல்த்துறைக்கு சமாதானக் கொடி அசைக்கும் காட்சியில் சிரிக்க மறந்தவன்கூட சிரித்துவிடுவான். படம் முழுக்க அட்டகாசம் செய்திருக்கிறார் சரத்குமார். இதுவரைபார்த்த சரத்குமாரை வேரொரு கோணத்தில் இப்படத்தில் பார்த்து ரசிக்கலாம். சண்முகப்பாண்டியனுக்கு நகைச்சுவை காட்சிகள் கைகொடுக்கவில்லை என்றாலும் அதிரடிக்காட்சிகளில் அப்படியே அவரது தந்தை விஜய்காந்தை நினைவுபடுத்துகிறார். உச்சக்கட்ட காட்சியில் பார்வையாளர்களை தனது துள்ளலான நடிப்பால் கட்டிப்போட்டுவிட்டார். புதுவருடத்திலிருந்து திரைவானில் மின்னும் நட்சத்திரமாக சண்முகப்பாண்டியன் ஜொலிப்பார் என்றே சொல்லலாம். இப்படத்தின. மூலமாக இயக்குநர் பொன்ராம் சண்முகப்பாண்டியனை நட்சத்திர நடிகராக மாற்றியிருக்கிறார். ஆய்வாளர் வேடத்தில்வரும் தர்னிகா, சண்முகப்பாண்டியன்மீதுள்ள காதலை காக்கிச்சட்டைக்குள் மறைத்துவைத்து அவ்வப்போது வெளிப்படுத்தும் அவரின் உடல்மொழி ரசிக்க வைக்கிறது.  காளிவெங்கட், ஜார்ஜ் மரியான், முனிஷ்காந்த் இம்மூவரும் தங்களது அனுப்பவ நடிப்பை அழகாக வெளிப்படுத்தியுள்ளார்கள். கண்காணிப்பாளராகவரும் சுஜித் சங்கரின் எதிமறை கதாநாயகனுக்குறிய அந்தஸ்தை இப்படத்தின்மூலம் பெற்றிருக்கிறார். இப்படத்திற்கு மிகவும் பக்கபலமாக யுவன்சங்கர்ராஜாவின் இசை அமைந்திருக்கிறது. கிராமத்துப்பாடல்கள் பார்வையாளர்களை தாளம்போட வைத்திருக்கிறது. அத்தனைப்பாடல்களும் ரசிக்கும்படியுள்ளது. மண்வாசனையோடு படம்பிடித்திருக்கும் ஒளிப்பதிவாளர் பாலசுப்பிரமணியம் பாராட்டுதலுக்குறியவர். கொம்புசீவிவிட்ட காளையாக சண்முகப்பாண்டியன் திரைக்களத்தில் சீறிப்பாயும் படம் இது…..