வேல்ஸ் பல்கலைக்கழகம், திருவான்மியூரில் இந்தியாவின் முதல் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) ஒருங்கிணைந்த செங்குத்து பல்கலைக்கழக வளாகத்தை திறந்து வைத்து, உயர்கல்வித் துறையில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. இவ்வளாகத்தை ஜோகோ நிறுவனத்தின் இணை நிறுவுநரும் தலைமை விஞ்ஞானியுமான பத்மஸ்ரீ ஸ்ரீதர் வேம்பு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு திறந்து வைத்தார். இந்நிகழ்வில் ஐக்கிய அரபு அமீரகத்தின் கூட்டாட்சி தேசிய கவுன்சில் உறுப்பினரும், எமிரேட்ஸ் ஏர்லைன் ஃபவுண்டேஷன் இயக்குநர் குழு உறுப்பினருமான அஹ்மத் மீர் ஹாஷிம் அஹ்மத் கூரி கவுரவ விருந்தினராக கலந்து கொண்டார். மேலும், துபாயைச் சேர்ந்த எக்னாமிக் குரூப் ஹோல்டிங் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் எம். எப். ராவூஃப் அலியும் சிறப்பு விருந்தினராக நிகழ்ச்சியில் பங்கேற்றார். விழாவிற்கு வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் நிறுவனர்-வேந்தர் டாக்டர் ஐசரி கே. கணேஷ் தலைமை தாங்கினார். வேல்ஸ் கல்வி நிறுவனங்களின் துணைத் தலைவர் டாக்டர் ப்ரீத்தா கணேஷ் முன்னிலை வகித்தார்.*******
இந்நிகழ்வில் உரையாற்றிய வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் நிறுவனர்-வேந்தர் டாக்டர் ஐசரி கே. கணேஷ், உலகின் வேகமான தொழில்நுட்ப மாற்றங்களுக்கு ஏற்ப கல்வியும் மாற்றமடைய வேண்டிய காலகட்டத்தில் நாம் இருப்பதாகக் குறிப்பிட்டார். திருவான்மியூரில் தொடங்கப்பட்டுள்ள இந்த ஏ.ஐ. ஒருங்கிணைந்த செங்குத்து பல்கலைக்கழக வளாகம், புதுமை, ஆராய்ச்சி, தொழில்முனைவு மற்றும் எதிர்காலத் திறன்களுடன் மாணவர்களை உருவாக்கும் நவீன கல்வி வளாகமாக அமையும் என்றார்.
மேலும், திண்டிவனத்தில் 350 ஏக்கர் பரப்பளவில் ஒருங்கிணைந்த பல்கலைக்கழக வளாகம், பெரியபாளையம் மருத்துவ வளாக விரிவாக்கம், அடையாறு மற்றும் ஹைதராபாத் வளாகங்களின் மேம்பாடு உள்ளிட்ட வேல்ஸ் நிறுவனத்தின் எதிர்கால வளர்ச்சித் திட்டங்களையும் அவர் அறிவித்தார். தரமான உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சியை நாடு முழுவதும் விரிவுபடுத்துவதில் வேல்ஸ் நிறுவனம் உறுதியாக செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
மேலும், தொழில்நுட்பம், புதுமை மற்றும் தேச முன்னேற்றத்தில் பத்மஸ்ரீ ஸ்ரீதர் வேம்பு ஆற்றி வரும் பங்களிப்புகளைப் பாராட்டிய அவர், இந்திய ராணுவத்துடன் இணைந்து செயல்பட்டு வரும் Zoho நிறுவனத்தின் “Nation First” கொள்கையையும், தமிழரின் பாரம்பரிய உடையான வேட்டியை உலக அரங்கில் பெருமையுடன் அணிந்து தமிழர் பண்பாட்டை உயர்த்தி வருவதையும் சிறப்பாகக் குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் ஐக்கிய அரபு அமீரகத்தின் கூட்டாட்சி தேசிய கவுன்சில் உறுப்பினரும், எமிரேட்ஸ் ஏர்லைன் ஃபவுண்டேஷன் இயக்குநர் குழு உறுப்பினருமான மேதகு அஹ்மத் மீர் ஹாஷிம் அஹ்மத் கூரி கவுரவ விருந்தினராக கலந்து கொண்டார். அவருக்கு தனது நன்றியைத் தெரிவித்த டாக்டர் ஐசரி கே. கணேஷ், இந்தியா–ஐக்கிய அரபு அமீரகம் இடையிலான கல்வி மற்றும் விமானப் போக்குவரத்து ஒத்துழைப்பு மேலும் வலுப்பெற வேண்டும் என்றார்.
வரவேற்புரையாற்றிய வேல்ஸ் கல்வி நிறுவனங்களின் துணைத் தலைவர் டாக்டர் ப்ரீத்தா கணேஷ், “மாணவர்களுக்கு உலகத் தரத்திலான கற்றல் சூழலை உருவாக்குவதே எங்கள் நோக்கம். இத்தகைய சிறப்புமிக்க கல்வி வளாகத்தின் திறப்பு விழாவில் உலகப் புகழ்பெற்ற ஆளுமைகள் பங்கேற்பது எங்களுக்கு பெருமை அளிக்கிறது. அவர்களின் சாதனைகளும் வாழ்க்கைப் பயணமும் நமது மாணவர்களுக்கு என்றென்றும் உத்வேகமாக அமையும்,” என்றார்.

