நேதாஜி புரொடக்ஷன்ஸ் சோலா சக்ரவர்த்தி, ஜி.எம். ஃபிலிம் கார்ப்பரேஷனுடன் இணைந்து தயாரித்த ‘திரௌபதி 2’ திரைப்படம் 14 ஆம் நூற்றாண்டின் தென்னிந்தியாவில் வேரூன்றிய காலகட்டக் கதையை திரையில் கொண்டுவரவுள்ளது. இத்திரைப்படத்தில் ரிச்சர்ட் ரிஷி கதாநாயகனாகவும், ரக்ஷனா இந்துசூடன் கதாநாயகியாகவும், நட்டி நடராஜ், ஒய்.ஜி.மகேந்திரன் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். இப்படத்தின் அறிமுக நிகழ்வில் இயக்குநர் மோகன் ஜி பேசியதாவது: வரலாற்றுப் படம் இது என்பதால் முதல் படம் போலவே கடுமையாக வேலை பார்த்தேன். ரிச்சர்ட் சார் இல்லாமல் ‘திரெளபதி2’ இல்லை. இந்தப் படத்திற்காக இன்னும் ஒரு ரூபாய் சம்பளம் கூட அவர் வாங்கவில்லை. குதிரை பயிற்சி, கத்தி சண்டை என ஒரு வருடமாக இந்தப் படத்திற்காக ஒரு நாளில் 16 மணி நேரம் உழைத்துள்ளார். நம்முடன் சகோதரர்களாக வாழ்ந்து வரும் இந்திய இஸ்லாமியர்களை இந்தப் படம் எந்த வகையிலும் காயப்படுத்தவில்லை. அவர்களின் தொடக்கம் எது என்று இந்தப் படம் புரிய வைக்கும். வீரபாண்டிய கட்டபொம்பன், சிறை, மதரசாப்பட்டிணம் போன்ற படங்களில் பிரிட்டிஷ்காரர்களை காட்டும்போது மத, அடையாளங்கள் இல்லாமல் அவர்களை பிரிட்டிஷ்காரர்களாக மட்டுமே எப்படி ஏற்றுக்கொண்டீர்களோ அதேபோல இந்தப் படத்தை துருக்கியில் இருந்து நம் நாட்டை கைப்பற்ற வந்த அந்நியர்களாக எண்ணிதான் கதையை நான் எழுதியுள்ளேன். அவர்களின் வாழ்க்கையை மத அடையாளங்களோடு தொடர்புபடுத்தி பார்க்காதீர்கள். இந்த நாட்டை அடிமைப்படுத்த துருக்கியில் இருந்து படை எடுத்து வந்தவர்கள் பற்றிய கதை. மூன்று வில்லன்கள் படத்தில் உள்ளனர். ஐந்து மொழிகளில் இந்தப் படம் உருவாகியுள்ளது.*******
என்னை நம்பிய தயாரிப்பாளர்களுக்கு இதுவரை நஷ்டம் வந்ததில்லை. வீர வல்லாள மகாராஜா வரலாற்றை வெளியே கொண்டு வருவது எனக்கு பெருமை. உங்கள் அனைவரையும் ‘திரெளபதி2’ திருப்திப்படுத்தும்” என்றார்.
நிகழ்வில் பேசிய நடிகர் YG மகேந்திரன், “இந்தப் படத்தில் என்னுடைய கதாபாத்திரம் சிறியது என்றாலும் கதை கேட்ட போதே வைப் நன்றாக இருந்தது. படத்தின் பாடல்களையும் ட்ரைலரையும் தற்பொழுது பார்க்கும் பொழுது மோகன் படத்தை அடுத்த லெவலுக்கு எடுத்து சென்றுள்ளார் என தெரிகிறது. ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர் என படத்தில் பணிபுரிந்த அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் வாழ்த்துக்கள். இந்தக் கதை இன்னொரு ‘பாகுபலி’. இன்றைய இளைஞர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சரித்திர சான்றுகளோடு அற்புதமாக எடுக்கப்பட்ட படம் இது. தேசிய உணர்வோடு பாரம்பரியத்தையும் இந்த கதை சொல்லும். ராம நாமி என்ற கதாபாத்திரத்தில் நான் நடித்திருக்கிறேன். நிறைய ஆராய்ச்சி செய்து மோகன் இந்த படத்தை எடுத்திருக்கிறார் படம் நிச்சயம் வெற்றி பெறும்” என்றார்.

