ரவி தேஜா நடிப்பில் ‘இருமுடி’ திரைப்படம், வரும் ஆகஸ்ட் 21ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. சிவா நிர்வாணா இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் இருந்து ஏற்கனவே வெளியான துணுக்குகள் மற்றும் பாடல்கள் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இந்நிலையில், படத்தின் தெலுங்கு மற்றும் தமிழ் மொழிகளில் முன்னோட்டக் காணொளிக் காட்சிகள் வெளியானது. ரவி தேஜாவின் மனைவி கதாபாத்திரத்தில் பிரியா பவானி ஷங்கர் சிறப்பாக நடித்துள்ளார். தந்தை, மகள் உறவின் அன்பை பேபி நக்ஷத்ரா அழகாக வெளிப்படுத்தியுள்ளார்.சாய் குமார், குரு சுவாமியாகவும், நடிகை ஸ்வாசிகா எதிர்மறை கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.***********
ரவி தேஜா நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த குடும்பத் தலைவராக நடித்துள்ளார். தனது மனைவி மற்றும் மகளை மிகவும் அன்புடன் கவனித்துக் கொள்ளும் அவர், தனது குடும்பத்தினரிடம் மட்டுமின்றி தனது கிராமத்தில் உள்ள ஒவ்வொரு பெண்ணையும் தனது மகளாகவே கருதி அன்பு செலுத்துகிறார். அவர்களில் யாருக்காவது ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால், அவர்களைப் பாதுகாக்க ஆக்ரோஷத்தின் எல்லைக்கே செல்ல தயாராக இருக்கிறார் என படத்தின் மையக்கதையை தற்போது வெளியாகியுள்ள டிரெய்லர் தெளிவாகக் காட்டுகிறது.
அதேவேளையில், மதுப்பழக்கம் அவரது மிகப்பெரிய பலவீனமாக உள்ளது. ஆண்டுதோறும் அவர் ஐயப்ப மாலை அணிந்து விரதம் மேற்கொள்கிறார். அந்த காலகட்டத்தில் முற்றிலும் மாறுபட்ட, அமைதியான மனிதராக மாறுகிறார். இந்நிலையில், கிராமத்தில் அடுத்தடுத்து சில பெண்கள் மர்மமான முறையில் கொலை செய்யப்படுகின்றனர். இந்த கொலைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க ரவி தேஜாவால் முடிந்ததா என்பதே படத்தின் கதை.

