சஜித் கிதுஷ்ணன் தயாரிப்பில் மாதவ் ராமதாசன் இயக்கத்தில் சரத்குமார், இந்திரஜித், தேவிகா சந்தோஷ், வையாபுரி, ஶ்ரீஜித் ரேவி, பிர்லா போஸ், தாமரைச் செல்வி, சர்ஜின், மைதிலி சத்யராஜ், பினிஸ்பாபு ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “ஆழி”. மீன்பிடி படகுகளின் பழுது நீக்கும் தொழிலை செய்யும் சரத்குமார், போதைப் பொருட்கள் கடத்தும் குற்ற வேலையையும் செய்து வருகிறார். சரத்குமாரின் மகளாக நடித்திருக்கும் தேவிகா சதீஷ் தன்னுடன் கல்லூரியில் படிக்கும் இந்திரஜித்தை காதலிக்கிறார். ஏழையான இந்திரஜித்தை தனது மருமகனாக ஏற்றுக் கொள்ளாத சரத்குமார், இந்திரஜித்தை கொலை செய்ய ஒரு மீன்பிடி படகில் ஏற்றிக் கொண்டு கடலுக்குச் செல்கிறார். சரத்குமாரிடமிருந்து இந்திரஜித் தப்பித்து உயிருடன் கரை சேர்ந்தாரா? இல்லையா? என்பதுதான் கதை. படத்தின் முழுக்கதையையும் கடலுக்குள்ளேயே எடுக்கப்பட்டுள்ளது. ஒரு மீன்பிடி படகு, அதில் இரண்டு கதாபாத்திரங்கள், அவர்களுக்கு இடையிலான மனம் மற்றும் உடல் ரீதியான போராட்டங்களை வைத்துக் கொண்டு இரண்டு மணி நேரத்தை இயக்குநர் மாதவ் ராமதாசன் கடத்தியிருக்கிறார். அப்பா வேடம் சரத்குமாருக்கு புதிதல்ல என்றாலும், அதில் முடிந்தவரை புதுமையை வெளிக்காட்ட முயற்சித்திருக்கிறார். வழக்கமான பாசக்கார அப்பா ஒரு பக்கம் என்றால், மறுபக்கம் கொடூரமான வில்லன், என்று சரத்குமார் ஏற்கனவே நடித்த கதாபாத்திரத்தின் சாயல் இருப்பதால், அதிக தலைமுடி, ஒட்டு தாடி என்று தோற்றத்தில் வேறுபாட்டை காட்டியிருக்கிறார். இந்திரஜித் ஜெகஜித், வித்தியாசமான தோற்றத்தில், மரண பயத்தை காட்டிய காதலியின் தந்தை சரத்குமாரிடமிருந்து தப்பிப்பதற்காக அவர் மேற்கொள்ளும் முயற்சிகளில் இருக்கும் விறுவிறுப்பு விறுவிறுப்பின்றி மிதானமானதாக இருக்கிறது. தேவிகா சதீஷ்க்கு கொடுக்கப்பட்ட வேலையை சிறப்பாக செய்து முடித்திருக்கிறார். வையாபுரி, ஸ்ரீஜித் ரவி, பிர்லா போஸ், தாமரை செல்வி, சர்ஜின், மைதிலி சத்யராஜ், பினிஷ் பாபு, பிஜு மவுங்கல் வர்கீஸ், டீனா பாட்டியா ஆகியோர் சிறு சிறு வேடங்களில் தலைகாட்டி கதாபாத்திரங்களோடு ஒன்றியிருக்கிறார்கள். ஆனந்த் என்.நாயரின் ஒளிப்பதிவு கடலின் சீற்றத்தையையும் தாண்டும் வகையில் படம்பிடித்திருக்கிறார். ஜாஸி கிப்ட் இசையில் பாடல்கள் மனதில் தங்கவைக்க இன்னும் கொஞ்சம் அவர் மெனக்கிட்டிருக்க வேண்டும். ரசூல் பூங்குட்டியின் ஒலி வடிவமைப்பில் தனித்துவம் தெரிகிறது. இரு கதாபாத்திரங்களுக்கு இடையே நடக்கும் கதை என்றாலும், அதை சுவாரஸ்யமாக நகர்த்தி செல்லும் வகையில் படத்தொகுப்பாளர் கே.ஸ்ரீநிவாஸ் காட்சிகளை தொகுத்திருக்கிறார். எழுதி இயக்கியிருக்கும் மாதவ் ராமதாசன், ஆழகடலில், உயிருக்கு போராடும் இருவரது பயணத்தை பரபரப்பாக சொல்ல முயற்சித்திருக்கிறார். இறுதிக் காட்சியில் சரத்குமார் உடலில் வழியும் இரத்தம் மூலம் நாயகன், தனது பெயரையும், காதலி பெயரையும் எழுதி தன் காதலின் தீவிரத்தை நிரூபிக்க, அதற்கு பதிலடியாக சரத்குமார், தன் நெஞ்சில் பச்சைக் குத்தியிருக்கும் மகள் பெயரை காட்டும் காட்சி, திடீரென்று மலர்ந்த காதலை காட்டிலும், தந்தை – மகள் இடையே இருக்கும் அன்பும், உறவும் பெரியது என்பதை வெளிக்காட்டும் அந்த காட்சி புதிதாகவும், ரசிக்கும்படியும் உள்ளது.
“ஆழி” திரைப்பட விமர்சனம்
