“டபுள் ஆக்குபென்சி” திரைப்பட விமர்சனம்

குஷ்பு சுந்தர் தயாரிப்பில் அஸ்வின் கந்தசாமி இயக்கத்தில் சந்தோஷ், ரேஷ்மா, சம்புக்தா, வினோத் கிஷன், விடிவி கணேஷ், பகவதி பெருமாள், விச்சு விஷ்வநாத், போஸ் வெங்கட், வினோதினி வைத்தியநாதன் ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “டபுள் ஆக்குபென்சி”. பகல் நேரத்தில் பெண்ணாகவும், இரவு நேரத்தில்  ஆணாகவும் மாறி வாழ்கிறார் நாயகன். ஒரே வாழ்க்கையை இரண்டு வேறு ஆளுமைகள் பகிர்ந்து கொள்வதால் பல்வேறு சிக்கல்கள் ஏற்படுகின்றன. ஆரம்பத்தில் இயல்பாக நகரும் இந்த வாழ்க்கையில் காதல் நுழையும்போது பிரச்சனைகள் அதிகரிக்கின்றன. பெண்ணாக இருக்கும் போது ஒரு வாழ்க்கை, ஆணாக இருக்கும்போது இன்னொரு வாழ்க்கை என நகரும் சூழலில், தனது ரகசியத்தை மறைத்து வாழும் அவர்கள் பல எதிர்பாராத சம்பவங்களை சந்திக்கிறார்கள்.  இறுதியில் இந்த இரட்டை வாழ்க்கையின் பின்னணியில் இருக்கும் மர்மம் என்ன? காதல் அவர்களது வாழ்க்கையை எப்படி மாற்றுகிறது? இறுதியில் இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைத்ததா? என்பதே படத்தின் மீதிக்கதை. ஆணாக  நடித்திருக்கும் சந்தோஷ், கதாபாத்திரத்திற்கு தேவையான நடிப்பை கொடுத்திருக்கிறார். குறிப்பாக தனது வாழ்க்கையில் நடக்கும் குழப்பங்களையும், காதலால் ஏற்படும் உணர்வுகளையும் இயல்பாக வெளிப்படுத்தி கவனம் ஈர்க்கிறார். பெண்ணாக  நடித்திருக்கும் ரேஷ்மா, தனது கதாபாத்திரத்தை நம்பும்படியாக நடித்திருக்கிறார். ஒரே வாழ்க்கையின் இரண்டு முகங்களாக சந்தோஷ் மற்றும் ரேஷ்மா இருவரும் நடித்திருப்பது படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது.  சம்யுக்தா மற்றும் வினோத் கிஷன் ஆகியோர் தங்களது கதாபாத்திரங்களுக்கு தேவையான பங்களிப்பை சரியாக வழங்கியிருக்கிறார்கள். வி.டி.வி. கணேஷ் வழக்கமான நகைச்சுவை பாணியில் வந்து சில இடங்களில் சிரிக்க வைக்கிறார். பகலில் பெண்ணாகவும், இரவில் ஆணாகவும் வாழும் ஒரு வித்தியாசமான நபரின் வாழ்க்கையை மையமாக வைத்து படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் அஸ்வின் கந்தசாமி. மிகவும் வித்தியாசமான ஒரு கற்பனையை தேர்வு செய்து அதை எளிமையாக சொல்ல முயற்சித்திருக்கிறார். கதையின் அடிப்படை கருவை தேவையற்ற விளக்கங்கள் இல்லாமல் நகர்த்தியிருப்பது பாராட்டுக்குரியது. முதல் பாதி விறுவிறுப்பாக நகர்வதோடு, அடுத்து என்ன நடக்கப்போகிறது என்ற ஆர்வத்தையும் ஏற்படுத்துகிறது. அதே நேரத்தில், இரண்டாம் பாதியில் உணர்வுப்பூர்வமான காட்சிகள் அதிகமாக இடம்பெறுவதால் திரைக்கதை சற்று தடுமாறுகிறது. காதல், நகைச்சுவை, குடும்ப உணர்வு, சோகம் என பல விஷயங்களை சொல்ல முயற்சித்து இருக்கிறார். இவ்வளவு சுவாரஸ்யமான கதைக்களத்திற்கு இன்னும் வலுவான உச்சக்கட்ட காட்சி  இருந்திருக்கலாம் என்ற எண்ணத்தையும் ஏற்படுத்துகிறது. சாந்தகுமார் சக்ரவர்த்தி ஒளிப்பதிவும், சாம் சி. எஸ் பின்னணி இசையும் பலம் சேர்த்துள்ளன. குறிப்பாக ஃபேண்டஸி கதைக்களத்தை ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளும் வகையில் காட்சிகளை அமைத்திருக்கிறார்கள். வினோதமான படங்களை பார்க்கும் ரசிகர்களுக்கு டபுள் ஆக்குபென்சி சர்க்கரை பொங்கல் போன்றது.