ஷைல்குமார் ராஜேந்திரன் தயாரிப்பில், சங்கர் சாரதி இயக்கத்தில் சேத்தன் சீனு, ஆஷ்னா ஜாவேரி, மனோபாலா, தீனா, பிரேம்குமார், கராத்தே ராஜா, மீசை ராஜேந்திரன் ஆகியோர் நடித்து வெளிவந்திருக்கும் படம் “வள்ளுவன்”. சேத்தன் சீனு சென்னையில் வீடுவீடாகச் சென்று உணவுப் பண்டங்களை விநியோகம் செய்யும் தொழிலை செய்து வருகிறார். ஆஷ்னா ஜாவேரி முதியோர் இல்லங்களில் தங்கியிருக்கும் முதியவர்களுக்கு சமூக சேவை செய்து வருகிறாள். இந்நிலையில் ஒரு அரசியல்வாதியாக நடித்திருக்கும் ராம்ஸ், அதன் பிறகு காவல்த்துறை உயர் அதிகாரி ராஜ் சிம்மன், மூன்றாவதாக வழக்கறிஞராக நடித்திருக்கும் கராத்தே ராஜா ஆகிய மூவரும் கொலை செய்யப்படுகிறார்கள். கொலை செய்யப்பட்டவர்களின் உடல்களில் “கொடிய குற்றம் செய்தவர்களுக்கு மரணமே தண்டனையாகும்” என்று சொல்லும் திருக்குறளின் வரிகள் ரத்தத்தால் எழுதப்பட்டிருக்கிறது. இந்த கொலைகளை செய்தவர் யார்? என்பதை புலனாய்வுதுறை ஆய்வாளர் பிரேம்குமார் கண்டுபிடித்தாரா? இல்லையா? எனபது ஒருபுறமிருக்க மறுபுறம் சேத்தன் சீனுவும் ஆஷ்னா ஜாவேரியும் காதலிக்கிறார்கள். இறுதியில் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி ஆஷ்னா, காதலன் சேத்தனிடம் கேட்கிறாள். ஆனால் சேத்தன் திருமணம் செய்துகொள்ள மறுக்கிறார். ஏன் மறுக்கிறார்? என்பதை மீதி படம் சொல்கிறது. சேத்தன் பகல் நேரத்தில் மோட்டார் சைக்கிளில் உணவு விநியோகம் செய்யும் போது காட்டும் எதார்த்தமான, சாதுவான புன்னகையும், காவல் அதிகாரி சந்தேகப்பட்டு விசாரிக்கும் போது காட்டும் அப்பாவியான முகபாவனையும் அற்புதமாக காட்டி நடித்துள்ளார். கவர்ச்சி காட்டுவதிலிருந்து முற்றிலும் வேறுபட்டு, அரிதாரப்பூச்சு அதிகமில்லாமல், ஆதரவற்ற முதியவர்களிடம் காட்டும் உண்மையான பாசத்தை வெளிப்படுத்தி நடித்து ரசிகர்களின் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கிறார் ஆஷ்னா ஜாவேரி. கொலை வழக்கின் மர்ம முடிச்சுகளை அவிழ்க்கத் துடிக்கும் உயர் போலீஸ் அதிகாரியாக பிரேம்குமார் மிக அழுத்தமான நடிப்பை வழங்கியுள்ளார். அரசியல்வாதி வரும் ராம்ஸ், போலீஸ் அதிகாரியாக வரும் ராஜ் சிம்மன் மற்றும் வழக்கறிஞராக வரும் கராத்தே ராஜா ஆகியோர் தங்களின் அதிகாரத் திமிரையும், கொடிய குற்றப் பின்னணியையும் தங்களின் மிரட்டலான வில்லத்தனத்தால் கச்சிதமாகக் காட்டியுள்ளனர். சாய் தீனா மற்றும் பாக்ஸர் தீனாவின் ஆக்ரோஷமான நடிப்பு, படத்தின் சண்டைக் காட்சிகளுக்குப் பெரும் பலம் சேர்த்துள்ளது. அஷ்வத்தின் பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய பலம். சுரேஷ் பாலாவின் ஒளிப்பதிவு நேர்த்தியாக உள்ளது.
“வள்ளுவன்” திரைப்பட விமர்சனம்
