“கட்டா குஸ்தி 2” திரைப்பட விமர்சனம்

வேல்ஸ் இண்டர்நேஷ்னல் நிறுவனமும் விஷ்ணு விஷாலும் இணைந்து தயாரித்திருக்கும் படம். கட்டா குஸ்தி”. இப்படத்தை செல்வா அய்யாவு இயக்கி இருக்கிறார். முதல் பாகத்தின் தொடர்ச்சியாக பயணிக்கும் கதையில், குழந்தை பிறந்த பிறகும் குஸ்தி விளையாட்டில் சாதிக்க வேண்டும் என்ற கனவுடன் இருக்கும் ஐஸ்வர்யா லட்சுமிக்கு, அவரது கணவர் விஷ்ணு விஷால் முழு ஆதரவாக இருக்கிறார். வீட்டையும், குழந்தையையும் கவனித்துக் கொண்டு மனைவியின் கனவை நனவாக்கும் முயற்சியில் ஈடுபடும் அவர், ஐஸ்வர்யா லட்சுமியை தேசிய அளவிலான போட்டிக்கு தயார்படுத்துகிறார். இதற்கிடையே, அவர்களது மகளின் படிப்பு மற்றும் எதிர்காலம் தொடர்பாக கணவன் – மனைவிக்குள் கருத்து வேறுபாடு ஏற்படுகிறது. மகளையும் சிறந்த குஸ்தி வீராங்கனையாக மாற்ற வேண்டும் என்று ஐஸ்வர்யா லட்சுமி நினைக்க, குழந்தையின் விருப்பத்திற்கே முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று விஷ்ணு விஷால் கருதுகிறார்.

இந்த சிறிய கருத்து வேறுபாடு குடும்ப வாழ்க்கையில் பெரிய பிளவை ஏற்படுத்தி, விவாகரத்து வரை செல்லும் சூழ்நிலையை உருவாக்குகிறது. இறுதியில் விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லட்சுமி மீண்டும் இணைந்தார்களா? குடும்பமும் கனவும் இரண்டையும் காப்பாற்ற முடிந்ததா? என்பதே படத்தின் மீதிக்கதை.

படத்தில் நாயகனாக நடித்து இருக்கும் விஷ்ணு விஷால், மனைவியின் வெற்றிக்காக தனது வாழ்க்கையையே அர்ப்பணிக்கும் கணவராக மிக இயல்பாக நடித்திருக்கிறார். குடும்பத்தை கவனிக்கும் பொறுப்பான கணவராகவும், தேவையான இடங்களில் விறுவிறுப்பாகவும் சுறுசுறுப்பாகவும் நடித்து  திரையில் கவனம் ஈர்க்கிறார். குறிப்பாக மனைவி மீது வைத்திருக்கும் அன்பு, மகளுடனான பாசம் மற்றும் குடும்பத்திற்காக போராடும் காட்சிகளில் தனது அனுபவமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

நாயகியாக நடித்திருக்கும் ஐஸ்வர்யா லட்சுமி, முதல் பாகத்தை விட இந்த முறையில் இன்னும் பலமான கதாபாத்திரத்தில் அசத்தியிருக்கிறார். குஸ்தி களத்தில் முரட்டுத்தனமாக மோதும் வீராங்கனையாகவும், குடும்ப வாழ்க்கையில் உணர்ச்சிவசப்படும் மனைவியாகவும் இரு பரிமாணங்களிலும் சிறப்பாக நடித்திருக்கிறார். குறிப்பாக உச்சக்கட்ட  குஸ்தி காட்சிகளில் அவரது உழைப்பு திரையில் தெளிவாக தெரிகிறது.

தம்பதியின் மகளாக நடித்திருக்கும் குழந்தை நட்சத்திரம் சாரா, தனது சுட்டித்தனமான நடிப்பால் பல காட்சிகளில் கைதட்டல் பெறுகிறார். கருணாஸ் வழக்கம்போல் தனது பாணியிக் சிரிக்க வைக்கிறார். மோக்‌ஷா, முனிஷ்காந்த், காளி வெங்கட், கருணாகரன், லிஸி ஆண்டனி, கஜராஜ், ஸ்ரீஜா ரவி ஆகியோர் கதையின் ஓட்டத்திற்கு தேவையான அளவில் பங்களித்திருக்கிறார்கள். சிறப்பு தோற்றத்தில் வரும் ரம்யா கிருஷ்ணன் மற்றும் யோகி பாபுவின் வருகையும் படத்திற்கு கூடுதல் பலம். முதல் பாகத்தைப் போலவே இந்த முறையும் இயல்பான நகைச்சுவையுடன் குடும்ப உறவுகளின் முக்கியத்துவத்தை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார் இயக்குநர் செல்லா அய்யாவு.

குடும்ப உறவுகள், கணவன்-மனைவி புரிதல், குழந்தை வளர்ப்பு போன்ற சமகால பிரச்சனைகளை நகைச்சுவை கலந்து சொல்லியிருக்கும் இயக்குநர் செல்லா அய்யாவு, திரைக்கதையை சுவாரஸ்யமாக நகர்த்தியிருக்கிறார். சில காட்சிகள் முன்கூட்டியே யூகிக்கும்படி இருந்தாலும், கதாபாத்திரங்களின் இயல்பான நடிப்பும், நகைச்சுவையும் படத்திற்கு பெரிய பலம் சேர்த்து இருக்கிறது.

படத்த்கின் ஆரம்பம் முதல் இறுதிவரை நகைச்சுவைக்கு முக்கியத்துவம்  கொடுத்து படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குநர்.  சிரிக்க

மறந்தவன்கூட சிரித்து மகிழும் விதமாக படம் சலிப்புத் தட்டாமல் செல்கிறது. பாடல்கள் அனைத்தும் பார்வையாளர்களை தாளம்பொட வைத்திருக்கிறது. பள்ளி ஆசிரியை இடுப்பில் தூக்கிக் கொண்டு விஷ்ணு விஷால் ஆடும் காட்சி நகைச்சுவையின் உச்சம். குடும்பத்த்குடன் சென்று கண்டுகளிக்க வேண்டிய சிறந்த படம் “கட்டா குஸ்தி 2”,