சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில் நடிகர் விஷாலின் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் படம் “மகுடம்”. விஷால் மருந்து விற்பனையாளராக வேலை பார்க்கும் ஒரு நடுத்தர குடும்பஸ்தர். அவரது மனைவி துஷ்ரா குடும்பத்தலைவி. இவர்களுக்கு ஒரு மகளும் மகனும் இருக்கிறார்கள். விஷாலின் நீண்டநாள் ஆசை சொந்தமாக கார் வாங்கி அதில் தனது குடும்பத்துடன் பயணம் செய்ய வேண்டும் என்பதுதான். அதற்காக சிறிது சிறிதாக பணம் சேர்த்து ஒரு பழைய காரை விலைக்கு வாங்குகிறார் விஷால். அந்த காரில் தனது குடும்பத்துடன் பயணம் செய்கிறார். அவகளை ஒரு ரவுடிக் கும்பல் வழி மறித்து விஷாலின் மனைவி துஷ்ராவையும் அவரது மகளையும் கொலை செய்துவிட்டு தப்பிவிடுகிறார்கள். உயிர்தப்பொய விஷால் கொலையாளியை கண்டுபிடித்து பழிவாங்க துடிக்கிறார். அந்த கொலையை செய்தவர் ரவுடிக் கும்பலின் தலைவனாக இருக்கும் விஷாலின் தந்தைதான் என்பது விஷாலுக்கு தெரியவருகிறது. மகனின் குடும்பத்தை கொலை செய்ய காரணம் என்ன? தன் மனைவியையும் மகளையும் கொன்ற தந்தையை விஷால் பழி தீர்த்தாரா? இல்லையா? என்பதுதான் மீதிக்கதை. தந்தை, மகன் என இரு கதாபாத்திரங்களிலும் (இரட்டை வேடம்) விஷால் சிறப்பான வித்தியாசம் காட்டி சிறப்பாக நடித்திருக்கிறார். சாதுவான, குடும்பத்திற்காக போராடும் மகன் கதாபாத்திரத்தில் அனுதாபத்தை அள்ளும் அவர், மறுபுறம் மிகப்பெரிய ரவுடி கதாபாத்திரத்தில் மிரட்டலாக நடித்து அவரின் ரசிகர்களுக்கு விருந்தளித்துள்ளார். குறிப்பாக விறுவிறுப்பான காட்சிகளில் விஷாலின் வேகம், உடல்மொழி, அதிரடி என அனைத்தும் ரசிகர்களை கவர்கின்றன.
துஷாரா விஜயனின் நடிப்பு படத்திற்கு கூடுதல் பலம். உணர்ச்சிகரமான காட்சிகளில் தனது நடிப்பால் கவனம் ஈர்க்கிறார். அஞ்சலி தனக்கான இடத்தை அழுத்தமாக பதிவு செய்கிறார். அவரது முடிவு பரிதாபத்தை வரவழைக்கிறது. பல படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் பார்வையாளர்களின் வெறுப்பை சம்பாதித்த ஜான் விஜய் இந்தப் படத்தில் மாறுபட்ட கதாபாத்திரத்தில் அவரது நடிப்பு படத்திற்கு உயிரோட்டமாக உள்ளது. ஜெய பிரகாஷின் நடிப்பு படத்துக்கு கூடுதல் பலத்தை தந்துள்ளது. ரிச்சர்ட் எம். நாதன் மற்றும் அபிநந்தன் ராமானுஜம் ஆகியோரின் ஒளிப்பதிவு படத்தின் பிரமாண்டத்தையும் ஆக்ஷன் காட்சிகளை அழகாக பதிவு செய்திருக்கிறது. ஜி.வி. பிரகாஷ் குமாரின் இசை கதையோடு இணைந்து பயணித்து ரசிகர்களை தாளம்போட வைக்கிறது. தந்தை-மகன் மோதல், பழிவாங்கும் கதை என்ற பழக்கமான களமாக இருந்தாலும், அதில் புதுமையான காட்சிகளையும் அதிரடியான திரைக்கதையையும் இணைத்து படத்தை சுவாரசியமாக நகர்த்தியிருக்கிறார் விஷால். இயக்குநருக்கான மகுடம் அவர் கையில்தான் இருக்கிறது. அதை தலையில் சூடிக்கொள்ள இன்னும் கொஞ்சம் அவர் முயற்சிக்க வேண்டும்.

