“பத்தா” திரைப்பட விமர்சனம்

முராத் கெதானி, பிரியா அட்லீ, அலோக் ஜெயன், அஜித் அந்தாரே ஆகியோரின் தயாரிப்பில், பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, லிஜோமோல் ஜோஸ், சாய் பிரித்வி ராஜ், சஹஸ்ரா, அர்ஜூன் சிதம்பரம், ஹரிகிருஷ்ணன், சாண்டி பாலச்சந்தர், விஷ்ணு கோவிந்த், பாலமுருகன் ஆகியோரின் நடிப்பில்  வெளி வந்திருக்கும் படம் “பத்தா”. விஜய் சேதுபதி சாராயம் காய்ச்சி விற்பனை செய்யும் தாதாவாக இருக்கிறார். தனக்கு எதிராக செய்ல்படும் எதிர் வீட்டுகாரர் அர்ஜூன் சிதம்பரத்தை அடித்து கையை ஒடித்து விடுகிறார். இதை  சாய் பிரித்வி ராஜ் என்ற சிறுவன் பார்த்து பயந்து நடுங்குகிறான். விஜய் சேதுபதியை   பார்த்தாலே  ஊர்மக்கள் அனைரும் நடுங்குவார்கள். இப்படியிருக்கும்போது ஒருநாள் விஜய் சேதுபதி அவ்வூரின் பாடசாலை கழிப்பறைக்கு செல்கிறார். அப்போது  வெளியிலிருந்து ஒருவன் கதவை வெளிப்பக்கமாக தாழ்ப்பாள் போட்டுவிட்டு ஒடிவிடுகிறான். பாடசாலைக்கு  இரண்டு வாரம் விடுமுறை என்பதால் கதவை யாரும் திறக்கவில்லை. கதவை உடைத்து வெளியே வர விஜய் சேதுபதியாலும் முடியவில்லை.  8 நாட்கள் வெளியே வரமுடியாமல் கழிவறைக்குள்ளேயே தவிக்கும் விஜய் சேதுபதி முடிவில் என்ன ஆனார்?. கழிப்பறை கதவை யார் வெளிப்பக்கமாக பூட்டியது? என்பதை  சொல்வது தான் இப்படத்தின் கதை.

விஜய் சேதுபதி நடிக்கும் ரவுடித்தனமும் பிறகு கழிவறைக்குள் தவிக்கும் உடல்மொழியுடன் கூடிய நடிப்பிலும் படம் முழுக்க பரவசமடைய வைக்கிறது. படத்தின் பின்பாதியில் விஜய் சேதுபதி பார்வையாளர்களின் மனதில் தங்கிவிடுகிறார். உச்சக்கட்ட காட்சியில் பார்வையாளர்களின் கண்கள் ஈரமாகிவிடுகிறது. லிஜோமோல் ஜோஸ் எதார்த்த நடிப்பை கொட்டி வியக்க வைத்துள்ளார். குடும்பத்தலைவிக்கேற்ற கதாபாத்திரத்துக்கு பொருத்தமானவர். இப்படத்தின் மற்றொரு கதாநாயகன் சிறுவன் சாய் பிரித்விராஜ்தான். அற்புதமாக தன் உடல்மொழியால் கதையோடு ஒன்றிபோய்விட்டான். உச்சக்கட்ட காட்சியின் நெருக்கத்தில் விஜய்சேதுபதியிடம் அழுதுகொண்டே உண்மையை திக்கித்திக்கி பேசுகின்ற காட்சி திரையரங்கத்தையே மௌனமாக்கி விடுகிறது. அற்புதமான நடிப்பு. விஜய் சேதுபதியின் மகளாக வரும் சிறுமி சகஸ்ராவின் எதார்த்த நடிப்பும் மனதில் பதிகிறது. அஜய் கோஷ், சாந்தி பாலச்சந்திரன், அர்ஜுன் சிதம்பரம் உள்ளிட்ட அனைவருமே தங்களது கதாபாத்திரத்தை உணர்ந்து அருமையாக நடித்துள்ளார்கள். எஸ் கே செல்வகுமாரின் ஒளிப்பதிவுவும் சாய் அபயங்கரின் இசையும் திரைக்கதைக்குள் பார்வையாளர்களையும் பயணிக்க வைக்கிறது. அடிதடி வாழ்க்கையல்ல, அன்பு ஒன்றுதான் வாழ்க்கை என்பதை இப்படத்தின் மூலம் இயக்குநர் பரணிதரன் முரசு கொட்டுகிறார்