விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் தயாரிப்பில், மீரா விஜய் ஆண்டனி வழங்கும் திரைப்படம் ‘அப்பா குட்டி’. ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’, ‘கண்ணை நம்பாதே’, ‘பிளாக்மெயில்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய மு. மாறன் இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார். விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தில் ப்ரீத்தி அஸ்ராணி கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், பேபி லிதன்யா, பகவதி பெருமாள், ஹரிப்ரியா, அருவி மதன், சித்ரா லட்சுமணன், ஸ்ரீஜா ரவி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தந்தைக்கும் மகளுக்கும் இடையிலான அன்பு, பாசம், பிணைப்பு மற்றும் உணர்வுபூர்வமான உறவை மையமாகக் கொண்டு குடும்பப் பொழுதுபோக்கு திரைப்படமாக இப்படம் உருவாகியுள்ளது. இப்படத்திற்கு விஜய் ஆண்டனி இசையமைத்துள்ளதுடன் படத்தொகுப்புப் பணிகளையும் மேற்கொண்டுள்ளார். ராஜீவ் ராஜேந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஊட்டி மற்றும் சென்னையில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ள இப்படம் நவம்பர் 20ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.*******
இந்நிலையில், ‘அப்பா குட்டி’ திரைப்படத்தின் முன் வெளியீட்டு விழா நிகழ்வு நேற்று கோலாகலமாக நடைபெற்றது. இதில் விஜய் ஆண்டனி, இயக்குநர் மு. மாறன், ப்ரீத்தி அஸ்ராணி உள்ளிட்ட படக்குழுவினருடன் திரையுலகைச் சேர்ந்த பல்வேறு பிரபலங்களும் கலந்துகொண்டனர். இந்நிகழ்வில் பேசிய திரைப்பிரபலங்கள் படத்தின் உருவாக்க அனுபவங்கள், கதைக்களம், நடிகர்களின் நடிப்பு, தொழில்நுட்பக் கலைஞர்களின் பங்களிப்பு மற்றும் படத்தின் சுவாரசியமான தகவல்கள் குறித்து தங்களது கருத்துகளைப் பகிர்ந்துகொண்டனர்.

