தாம்பரம் மாநகராட்சியில் தெருக்களில் சுற்றித் திரிந்த 35மாடுகள் பிடிப்பு

தாம்பரம் மாநகராட்சி ஆணையர் ரா.சரண்யா, இ.ஆ.ப., உத்தரவின்படி, நவம்பர் மாதம் 06.11.2026 முதல் 14.11.2026 வரை மாநகராட்சியின் அனைத்து மண்டலங்களிலும் தெருக்களில் சுற்றித் திரிந்த மாடுகளை பிடிக்கும் தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தெருக்களில் சுற்றித் திரியும் மாடுகளால் பொதுமக்களுக்கு பெரும் இடையூறு ஏற்பட்டு வருகிறது. போக்குவரத்து நெரிசல், விபத்துகள் மற்றும் பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்படுவதை தடுக்க மாநகராட்சி சார்பில் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகள் இருசக்கர வாகன ஓட்டிகள் மீது மோதி விபத்து ஏற்படுத்துவதும், குழந்தைகள், முதியவர்கள் நடந்து செல்ல முடியாமல் அச்சுறுத்துவதும், கடைகள் முன் குப்பைகளை கிளறி சுகாதாரக் கேடு ஏற்படுத்துவதும் தொடர்ந்து புகாராக வந்து கொண்டிருந்தது. இதனைத் தொடர்ந்து மாநகராட்சி ஊழியர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டு, தெருக்களில் சுற்றித் திரியும் மாடுகள் பிடிக்கப்பட்டு வருகின்றன.

 பிடிக்கப்படும் மாடுகள் கோசாலைக்கு அனுப்பப்பட்டு, உரிமையாளர்களுக்கு விதிகளின்படி அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. மீண்டும் மீண்டும் மாடுகளை சாலையில் விடும் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

  இந்த நடவடிக்கையில் மொத்தம் 35 மாடுகள் பிடிக்கப்பட்டன. இதில் 21 மாடுகள் கட்டணம் செலுத்திய பின் விடுவிக்கப்பட்டன. மீதமுள்ள 14 மாடுகள் பராமரிப்பு மையத்தில் வைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் மொத்தம் ரூ.55,000 அபராதம் வசூலிக்கப்பட்டது. மாடு வளர்ப்போர் தங்கள் மாடுகளை சாலையில் விடாமல், பாதுகாப்பான இடத்தில் கட்டி வைத்து பராமரிக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறது.