கணேஷ் விநாயகன் இயக்கத்தில் அருள்நிதி, ஆரவ், ரம்யா பாண்டியன், பேபி கிரிடிகா, ஜான் விஜய், காளி வெங்கட், வி.டி.வி.கணேஷ் ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “அருளாளன்”. தேனி மாவட்டம் கேரளா எல்லையிலிருக்கும் மலைக்கிராமத்தின் முகட்டில் தமிழும் மலையாளமும் கலந்த ஒரு பாஷை பேசும் மலைவாழ் மக்கள் படிப்பறிவு இல்லாமல் வாழ்கிறார்கள். இதை பயன்படுத்தி மேல்குடி மக்கள் இவர்களுக்கு கடன் கொடுத்து பத்திரங்களில் கை நாட்டு வைத்து அவர்களின் வாழ்வாதார நிலங்களை அபகரித்து கொள்கிறார்கள். இக்கொடுமையிலிருந்து தப்பிக்க வேண்டுமென்றால் படிப்பறிவு தேவையென உணர்ந்து தனது பேத்தி பேபி கிரிடிகாவை படிக்க வேண்டும் என்று சத்தியம் வாங்கி தற்கொலை செய்து கொள்கிறார் அக்கிராமத்து நாட்டாமைக்காரர். தாத்தா விரும்பியபடி பேபி கிரிட்டிகா படித்தாரா? இல்லையா? என்பதுதான் மீதிக்கதை.
பார்வையாளர்களை சோர்வடையாமல் பார்த்துக் கொண்டவர் ஒளிப்பதிவாளர் எம்.சுகுமார்தான். மலையின் அழகை சிதைக்காமல் அப்படியே தத்ரூபமாக படம் பிடித்திருக்கிறார். மலையின் உச்சி முகட்டில் இருக்கும் அந்த கிராமத்தை கண்சிமிட்டாமல் அப்படியே நிலைகுத்தி இருக்க பார்க்க வைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் சுகுமார். அக்கிராமத்தை மேகங்கள் சூழ்ந்து கொள்ளும் அழகே தனிதான். விமானம் பறக்கும் உயரத்தில் அம்மலை கிராமம் உள்ளது. அங்கேயே நாமும் குடியிருந்துவிடலாம் என்று எண்ணாத் தோன்றுகிறது. மாவட்ட ஆட்சியராக நடித்திருக்கும் அருள்நிதி ஆட்சியராகவே படத்தில் வாழ்ந்திருக்கிறார். ஆட்சியரின் அதிகார வரம்பை திரையில் கொட்டி தீர்த்திருக்கிறார் அருள்நிதி. ஆட்சியரின் கடமை எது என்பதையும், ஆசிரியரின் பணி எத்தகைய உயர்வான பணி என்பதையும் தனது உயிரோட்டமான நடிப்பால் உணர்த்தியிருக்கும் அருள்நிதி பாராட்டுக்குரியவர். பேபி கிரிட்டிகாவுக்கு திரைவானில் சிறகடித்து பறக்க வாய்ப்பு அதிகமிருக்கிறது. சில காட்சிகளே வந்து போனாலும் காளி வெங்கட் நமது கண்களை ஈரமாக்கிவிடுகிறார். ஒருபடம் வெற்றிபெற வேண்ட்மென்றால் அழுத்தமான வில்லன் இருக்க வேண்டும். அதை நிறைவு செய்திருக்கிறார் ஜான் விஜய். ஆதவ், ரம்யா பாண்டியனின் வி.டி.வி.கணேஷ் ஆகிய மூவரும் கதைக்கு ஓரவஞ்சனை செய்யாமல் நடித்திருப்பது பாராட்டத்தக்கது. ஜி.வி.பிரகாஷ் குமாரின் இசை கதையோடு பின்னி பிணைந்திருக்கிறது. பாடல்கள் பார்வையாளர்களை தாளம்போட வைக்கிறது. மொத்தத்தில் ஆட்சியாளர்களுக்கும் ஆசியர்களுக்கும் இப்படத்தின் மூலம் பெருமை சேர்த்திருக்கிறார் இயக்குநர் கணேஷ் விநாயகன்.

