முன்னணி நடன இயக்குநர் ஸ்ரீதர் மற்றும் அவரது மகள் அக்ஷதா ஸ்ரீதர் தலைமையில் சென்னையில் பல்வேறு இடங்களில் நடனப் பயிற்சி வழங்கி வரும் கலைமாமணி ஸ்ரீதர் ஏஆர்எஸ் டான்ஸ் அகாடமி, தங்கள் மாணவர்களை ஊக்குவிக்கவும், இதர கலைஞர்களை கௌரவிக்கவும் நிகழ்ச்சிகளை அவ்வப்போது நடத்தி வருகிறது. இதன் தொடர்ச்சியாக, ‘டான்ஸ் டான் 2’ என்ற நிகழ்ச்சியை கலைமாமணி ஸ்ரீதர் ஏஆர்எஸ் டான்ஸ் அகாடமி நடத்தியது. 1973ம் ஆண்டு முதல் 2026ம் ஆண்டு வரை திரைத்துறையில் பங்காற்றி வரும் 125 நடன இயக்குநர்கள் மற்றும் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் 38 நடனப் பள்ளி ஆசிரியர்கள் ‘டான்ஸ் டான் 2’ நிகழ்ச்சியில் கௌரவிக்கப்பட்டார்கள்.. இதனுடன், கலைமாமணி ஸ்ரீதர் ஏஆர்எஸ் டான்ஸ் அகாடமி மாணவர்களின் கண்கவர் நடன நிகழ்ச்சிகளும் நடைபெற்றது******
இது குறித்து பேசிய நடன இயக்குநர் ஸ்ரீதர் மாஸ்டர், “இத்தனை வருடங்களாக திரைத்துறையில் பணியாற்றி வரும் எனக்கு, நமக்கு முன்னர், நம்முடன் மற்றும் நமக்குப் பின்னர் நடன இயக்குநர்களாக அறிமுகமாகி பங்காற்றியவர்கள் குறித்த ஒரு தேடலைத் தொடங்கினேன். இவர்கள் குறித்து பல்வேறு ஆதாரங்களைச் சேகரித்தபோதுதான், 1973 முதல் நடனம் அமைத்த கலைஞர்கள் 125 பேர் தற்போது உள்ளார்கள் என்ற ஆச்சரியமான தகவல் தெரியவந்தது.
இவர்களில் சிலர் முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெ. ஜெயலலிதா ஆகியோருடன் பணியாற்றியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களை அனைவரையும் ஒரே மேடையில் ஒன்றிணைத்து, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் நடனப் பள்ளிகளை நடத்தி வரும் 38 ஆசிரியர்களையும் கௌரவித்து வருகிறோம்,” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “இந்த 125 பேரில் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு தற்போது வாய்ப்புகள் இல்லை. அதேபோல், நடன ஆசிரியர்கள் கடும் நெருக்கடிகளுக்கு மத்தியில் தங்களது நடனப் பள்ளிகளை தொடர்ந்து நடத்தி வருகிறார்கள். இந்த நிகழ்ச்சியின் மூலம் நடன இயக்குநர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைத்து, நடனப் பள்ளி ஆசிரியர்களுக்கு வெளிச்சமும் ஊக்கமும் கிடைத்தால் பெரிதும் மகிழ்ச்சியடைவேன்,” என்றார்.

