“ஏன் என்னை ஏதோ செய்தாய்” திரைப்பட விமர்சனம்

டி.அந்தோணி தயாரித்து கதை வசனம் எழுதி இயக்கி கதாநாயகனாகவும் நடித்திருக்கும் படம் “ஏன் என்னை ஏதோ செய்தாய்”. இப்படத்தில் மதுமிதா தாஸ், ஜீவா ரவி, ரெஜின் ரோஸ், நவ்யா சுஜி ஆகியோரும் நடைத்திருக்கிறார்கள். சிறுவயதிலேயே தாயை இழந்த அந்தோணி குடிகார தந்தையை பிரிந்து தனியாக வாழ்கிறார். எப்போதும் புகைப்பதும் குடிப்பதுமாக இருக்கும் அந்தோணி விலைமாதுவாக நடித்திருக்கும் மதுமிதா தாசுடன் நெருக்கமாக பழகுகிறார். அந்த விலைமாதுவை உயிருக்கு உயிராக காதலிக்கிறார். இருவரும் திருமணம் செய்து கொண்டார்களா? இல்லையா? என்பதுதான் கதை.

அன்பிற்காக ஏங்கும் தனிமை விரும்பி இளைஞனாகத் தனது முதல் படத்திலேயே அழுத்தமான தடம் பதித்து, பாசப் போராட்டத்தையும் ஏக்கத்தையும் அசல் மனிதனின் மெய்யான பாவனைகள் மூலம் மிக எதார்த்தமாகக் கடத்தியிருக்கிறார் இயக்குநர் அந்தோணி. போதையின் இருளில் மூழ்கிக் கிடக்கும் காட்சிகளில் இவரது வெளிப்படையான ஆளுமையும் இயல்பான தோற்றமும் கதாபாத்திரத்திற்குத் தகுந்த உயிரோட்டத்தைத் தருகின்றன. சவாலான எஸ்கார்ட் பாத்திரத்தில் நேர்த்தியான வெளிப்பாட்டையும் பெண்மையின் மென்மையையும் ஒருசேர பிரதிபலித்து, தன் காந்தப் பார்வையாலும் பக்குவமான அணுகுமுறையாலும் திரையில் தனித்து மிளிர்கிறார் மதுமிதா தாஸ். காதலனின் மனமாற்றத்தைப் புரிந்து கொள்ளும் காட்சிகளிலும், மனக்கசப்பால் விலகும் தருணங்களிலும் இவரது அமைதியான வெளிப்பாடு பார்வையாளர்களின் அனுதாபத்தை அள்ளுகிறது. ஜீவா ரவி தனது அனுபவமிக்க முகபாவனைகளால் விரக்தியடைந்த தந்தையின் மனவேதனையை எதார்த்தமாகக் கடத்திச் சட்டென்று கவனத்தை ஈர்க்கிறார். ரெஜின் ரோஸ் நட்பின் ஆழத்தை உடல்மொழியால் அளந்து இருக்கிறார். கனமான பாத்திரத்தை உணர்ந்து நேர்த்தியாகச் செயல்பட்டுள்ள நவ்யா சுஜி கதையின் திருப்புமுனைகளுக்கு வலிமை சேர்த்திருக்கிறார். கவித்துவமான ஒளிப்பதிவை கையாண்டிருக்கிறார் பியட்ரோ வில்லானி. மெல்லிசையான மெட்டமைப்பால் ஆன்மாவைக் கிளறும் இசையை வழங்கியுள்ளார் இசையமைப்பாளர் ஜோயி ரெடா. மொத்தத்தில் இலக்கிய காதலை திரையில் காணமுடிகிறது. உச்சக்கட்ட காட்சி கண்களை ஈரமாக்குகிறது.