துல்கர் சல்மான், ஜோம் வர்கீஸ் தயாரிப்பில், நஹாஸ் ஹிதாயத் இயக்கத்தில், துல்கர் சல்மான், கயாடு லோஹர், மிஷ்கின், ஆண்டனி வர்கீஸ், விக்னேஷ், சம்யுக்தா, வினய் ஃபோர்ட், கதிர் ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “ஐஅம் கேம்”. துல்கர் சல்மான் கோடீஸ்வரர். சூதாட்டப்பிரியர். சூதாட்டத்க்தில் தன் சொத்தை எல்லாம் இழந்து 2 கோடி ரூபாய் கடனாளியாகிறார். கடைசியாக அவரது அம்மா ரூ.70 லட்சம் கொடுத்து தொழில் செய்ய சொல்கிறார். ஆனால் துல்கர் சல்மான் அந்தப் பணத்தையும் மட்டைப்பந்தாட்ட சூதாட்டத்தில் பந்தயம் வைத்து தோற்றுவிடுகிறார். அதனால் விரக்தியடைந்த அவர், சூதாட்ட மேஜையிலிருக்கும் பணத்தை எல்லாம் வாரி எடுத்த்குக் கொண்டு வெளியே ஓடிவருகிறார். அப்போது எதிபாராத விதாமாக விபத்தில் சிக்கி தனது வலது கையை இழந்து விடுகிறார். அவருக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், இறந்துபோன வேறு ஒருவரின் வலது கையை எடுத்து துல்கர் சல்மானுக்கு பொறுத்துகிறார்கள். ஆனால் அந்தக் கை அவருக்கு கட்டுப்படாமல் தன்னிச்சையாக செயல்படுகிறது. குறிப்பிட்ட சிலரை அந்த கை கொலைவெறியுடன் தாக்குகிறது. அந்தக் கை ஏன் சிலரை தாக்குகிறது? அந்த கை யாருடையது? அந்தக் கையின் பின்னணி என்ன? என்பதை விறுவிறுப்புடன் சொல்வதுதான் மீதிக்கதை.
தன் கையே தனது கட்டுப்பாட்டில் இல்லாமல் தன்னுடன் மல்லுக்கட்டும் காட்சிகளில் துல்கர் சல்மானின் தவிப்பும் ஏக்கமும் பார்வையாளர்களை கவர்கிறது. ஆண்டனி வர்கீஸ் தனது கதாபாத்திரத்திற்கு ஏற்ற நடிப்பால் கவனம் ஈர்க்கிறார். மட்டைப்பந்தாட்ட குழுவின் தலைவராக கதிர் வழக்கம்போல் தனது இயல்பான மௌனமான நடிப்பை தந்து செல்கிறார். மட்டை பந்தாட்டத்தின் உரிமையாளாராக வரும் மிஷ்கின் வில்லத்தனத்தின் உச்சத்தை திரையில் காட்டி பார்வையாளர்களை மிரள வைக்கிறார். அவரின் நடிப்பு நடிகவேள் எம்.ஆர்.ராதாவை நினைவு கொள்ள வைக்கிறது. மருத்துவர் கதாபாத்திரத்தில் கயாடு லோஹர் மற்றும் சம்யுக்தா ஆகியோரின் நடிப்பும் கதைக்கு பக்கபலமாக துணை செய்கிறது. தன் மூளைக்கு கட்டுப்படாமல் தன்னிச்சையாக செயல்படும் கை படங்கள் சில வந்தாலும் இப்படத்தில் ஒரு வித்க்தியாசமான கதைக்களத்தில் பயணிக்க வைத்திருக்கிறார் இயக்குநர் நஹாஸ் ஹிதாயத். மட்டைப்பந்த்காட்ட மோசடிகளை வெட்ட வெளிச்சமாக மட்டைப் பந்தாட்ட ரசிகர்களுக்கு திரையில் காட்டியிருக்கும் அவரின் சமூக சிந்தனையை அல்லது சமூக அக்கறையை பாராட்ட வேண்டும். இசையும் ஒளிப்பதிவும் தந்த ஜேக்ஸ் பிஜாய், ஜிம்சி காலித் இருவரும் கதைக்களத்தோடு பயணித்திருக்கிறார்கள்.

