‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்’ திரைப்படம் அக்.2ல் வெளியீடு

அர்கா மீடியா ஒர்க்ஸ், ஷோயிங் பிசினஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் ஷோபு யெர்லகடா – எஸ். எஸ். கார்த்திகேயா ஆகியோரின் தயாரிப்பில் ஷஷாங்க் யெலெட்டி இயக்கத்தில் பகத் பாசில் நடிப்பில் இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி வழங்கும் ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்’ திரைப்படம் – அக்டோபர் 2 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்தப் படத்தை தமிழகத்தில் சக்தி பிலிம் பேக்டரி நிறுவனம் சார்பில் விநியோகஸ்தர் சக்திவேலன் வெளியிடுகிறார். இப்படத்தின் அறிமுக நிகழ்வில் எஸ்.எஸ். ராஜமௌலி, எஸ்.எஸ். கார்த்திகேயா,  ஃபஹத் பாசில், சாரா சச்தேவ், பிரவீண் ஆண்டனி, விநியோகஸ்தர் சக்திவேலன் ஆகிய படக்குழுவினருடன்  நடிகர் சூர்யா மற்றும் தயாரிப்பாளர் ஐசரி கே.கணேஷ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.********

நடிகர்  ஃபஹத் பாசில் பேசுகையில், ”இந்தக் கதையை கேட்ட தருணத்திலிருந்து எனக்குள் இரண்டு விசயங்கள் மட்டும் தான் எப்போதும் நினைவில் இருக்கிறது. அதை மட்டும் பகிர்ந்து கொள்கிறேன். தயாரிப்பாளர் கார்த்திகேயா எனக்கு குறுஞ்செய்தி அனுப்பி இருந்தார். அதில் ‘இரண்டு கதைகளை மட்டும் அனுப்பி இருக்கிறேன்.‌ இந்த இரண்டில் எந்தக் கதையை நீங்கள் தேர்வு செய்தாலும் எங்களுக்கு ஓகே’ என குறிப்பிட்டிருந்தார். அதன் பிறகு அவரை சந்தித்தேன். இரண்டு கதைகளையும் கேட்டேன். இரண்டு கதைகளும் பிடித்திருந்தது. இரண்டு கதைகளிலும் நடிக்கிறேன் என்றேன். அப்போதுதான் அவர், ‘நான் தான் தயாரிக்கிறேன்’ என்றார். அது எனக்கு சந்தோஷமாக இருந்தது. அதன் பிறகு ஒரு விசயம் சொன்னார். ‘இந்த படத்தை ராஜமௌலி தான் வழங்குகிறார்’ என்றார். அப்படி சொன்னவுடன் என்னை விட வேறு சிறந்த நடிகர்களை வைத்து தயாரிக்கலாமே..! என சொன்னேன். இதுவரை எனக்கு தெலுங்கில் நல்லதொரு ஓபனிங் இருந்ததில்லை என நினைக்கிறேன். இந்தப் படம் அதனை மாற்றும் என்று நம்புகிறேன். இதற்காக தயாரிப்பாளருக்கும் ராஜமௌலிக்கும் நன்றி.

தயாரிப்பாளர் கார்த்திகேயா இப்படத்தின் நிகழ்விற்கு சூர்யா வருகை தருகிறார் என்று சொன்னார். அதைக் கேட்டவுடன் எனக்கு இன்னும் மகிழ்ச்சி அதிகமாகியது. ஏனென்றால் அவர் எனக்கு சகோதரர். அவர் இன்று இங்கு வருகை தந்ததற்கும், வாழ்த்துவதற்கும் நன்றி. நான் இதுவரை இப்படி ஒரு கதையை கேட்டதும் இல்லை, இப்படி ஒரு படத்தை பார்த்ததும் இல்லை. இப்படி ஒரு கதாபாத்திரத்திலும் நான் நடித்ததில்லை. இது மிகவும் புதிது. அதனால் தான் இதில் நடிப்பதற்கு உடனே சம்மதம் தெரிவித்தேன். நாங்கள் இந்தப் படத்திற்காக 100, 120 நாட்கள் படப்பிடிப்பு நடத்தினோம். இப்படத்தினை அண்மையில் பார்த்தபோது வியந்தேன்.  படத்தில் பணியாற்றிய இயக்குநர் ஷஷாங்க் யெலெட்டி, ஒளிப்பதிவாளர் பிராட் பிரான்சிஸ்,  தயாரிப்பு வடிவமைப்பாளர் சந்தீப், மோகன், இசையமைப்பாளர் காலா பைரவா, படத்தொகுப்பாளர் பிரவீண் ஆண்டனி ஆகிய அனைவருக்கும் நன்றி. தயாரிப்பாளர் எஸ் எஸ் கார்த்திகேயாவிற்கு நன்றி. ஹைதராபாத்தில் ஒரு அரங்கத்தில் ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்’ படத்தின் படப்பிடிப்பு நடைபெறும். அடுத்த அரங்கத்தில் ‘வாரணாசி’ படத்தின் படப்பிடிப்பு நடைபெறும். இரண்டிற்கும் அவர்தான் தயாரிப்பாளர். ஆனால் அவர் எப்போதும் எங்கள் படக் குழுவுடன் தான் இருப்பார். அதற்காக அவருக்கு நன்றி.

என்னை எப்போதும் ஆச்சரியப்படுத்திய குழந்தை என்றால் அது சாரா தான். படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் போது ஒரு காட்சியில் என்னிடம் இப்படி பேசலாமே..! என என்னுடைய வசனத்தையும் அவள் சொல்லிக் காட்டுவாள். என்னுடன் இவ்வளவு அர்ப்பணிப்புடன் இணைந்து பணியாற்றிய சக நடிகர்கள் யாருமில்லை என்று சொல்லலாம். அந்த அளவிற்கு அற்புதமான சக நடிகை தான் சாரா. நாங்கள் இருவரும் இணைந்து இந்த படத்தில் அற்புதமான மேஜிக்கை நிகழ்த்தி இருக்கிறோம். நாங்கள் இருவரும் இணைந்து இந்த படத்தை அனைவரும் அக்டோபர் 2ம் தேதி திரையரங்கில் காண வேண்டும் என அழைப்பு விடுக்கிறோம். மிகவும் சிறப்பான படம்.‌ இந்தப் படத்தை நீங்கள் குடும்பத்தினருடனும்… நண்பர்களுடனும்… விருப்பத்திற்குரியவர்களுடனும்…. பார்க்கலாம். இந்தப் படம் உங்களை சிரிக்க வைக்கும், அழ வைக்கும், அந்த அளவிற்கு அழகான அற்புதமான படம்” என்றார்.