நடிகர் ஜோஜு ஜார்ஜ் எழுதி இயக்கும் புதிய படமான ‘பரிபாடி’ படத்தின் பதாகை வெளியிடப்பட்டுள்ளது. காவ்யா ஃபிலிம் கம்பெனி சார்பில் வேணு குன்னப்பள்ளி தயாரிப்பில் இப்படம் உருவாகியுள்ளது. ஜோஜு ஜார்ஜ் கதாநாயகனாக நடிப்பதோடு, சுமார் 100 புதிய முகங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் அறிமுகமாகின்றனர். இப்படம் வருகிற டிசம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. திரிசூரை பின்னணியாக கொண்டு, முக்கியமாக சாலக்குடியில் படமாக்கப்பட்டுள்ள இப்படத்திற்காக, புதிய நடிகர்கள் சுமார் நான்கு மாத காலம் சிறப்பு பயிற்சிக்கு பிறகே கேமராவுக்கு முன்பு களமிறங்கினர். இப்படத்தில் நடிக்கும் சுமார் 100 புதிய முகங்களும் வசனம் பேசும் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்றுள்ளனர். பிரபல தமிழ் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். இதன் மூலம் அவர் மலையாள திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.*********
ரசிகர்களுக்கு முற்றிலும் மாறுபட்ட திரையரங்க அனுபவத்தை தரும் வகையில் இப்படம் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டு வருகிறது. தற்போது படத்தின் போஸ்ட்-புரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்திய சினிமாவின் முன்னணி தொழில்நுட்ப கலைஞர்கள் பலரும் இப்படத்தில் இணைந்துள்ளனர். புகழ்பெற்ற ஒளிப்பதிவாளர் ராஜீவ் ரவி ஒளிப்பதிவு செய்ய, மேலும், தென்னிந்தியாவின் பிரபல சண்டை பயிற்சி இயக்குநர்களான அன்பறிவ் மாஸ்டர்ஸ் சண்டைக் காட்சிகளை வடிவமைத்துள்ளனர். இவர்களுடன் படத்தொகுப்பாளர் மனு ஆண்டனி மற்றும் சவுண்ட் டிசைனர் அஜயன் அதத் ஆகியோரும் தொழில்நுட்ப குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

