சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கு தமிழ்நாடு அமைச்சரவை ஒப்புதல்! – எஸ்டிபிஐ கட்சி வரவேற்பு

இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில பொறுப்புத் தலைவர் அச.உமர் பாரூக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் மாநில அரசின் சார்பில் ‘சமூக நீதி சர்வே’ எனப்படும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கும், அதற்கென பிரத்யேக ஆணையம் அமைப்பதற்கும் தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டிருப்பதை எஸ்டிபிஐ கட்சி கட்சி சார்பில் மனதார வரவேற்கிறேன்.

பீகார் உள்ளிட்ட மாநிலங்களைப் போல தமிழகத்திலும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பதை எஸ்டிபிஐ கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதற்காக தமிழக அரசை வலியுறுத்தி கடந்த செப்டம்பர் மாதம் 12 ஆம் தேதியன்று தலைமைச் செயலகம் நோக்கி பிரம்மாண்ட பேரணியையும் எஸ்டிபிஐ கட்சி நடத்தியது. இந்த நிலையில், தமிழக அரசு இத்தகைய முடிவை எடுத்திருப்பது எங்களது போராட்டத்திற்கும் கோரிக்கைக்கும் கிடைத்த வெற்றியாகும். சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் கடந்த பின்னரும் கல்வியிலும், வேலைவாய்ப்பிலும், அரசியல் பிரதிநிதித்துவத்திலும் உரிய இடங்களைப் பிற்படுத்தப்பட்ட பிரிவினர் பெற முடியாத நிலை தொடர்ந்து வருகிறது. இது மாபெரும் சமூக அநீதியாகும். 1990-இல் வி.பி. சிங் அரசால் மண்டல் கமிஷன் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்பட்ட போதிலும், அது 1931-ஆம் ஆண்டின் சாதிவாரித் தரவைக் கொண்டுதான் அமல்படுத்தப்பட்டது. தற்போதைய மக்கள் தொகைக்கேற்ப தரவுகள் புதுப்பிக்கப்படாமலேயே இடஒதுக்கீடு உள்ளிட்ட சமூகநீதித் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. இதனால் பிற்படுத்தப்பட்ட சமூகங்கள் உட்பட அனைத்து சமூக மக்களுக்குமான உரிய சமூகநீதி கிடைக்கப் பெறாத நிலையே நீடிக்கிறது. முறையான, துல்லியமான சாதிவாரித் தரவுகள் மட்டுமே உண்மையான ‘சமூக நீதி’ மற்றும் ‘அனைவருக்குமான வளர்ச்சி’ ஆகியவற்றைச் சாத்தியமாக்கும். ஆகவே, தமிழக அரசின் இந்த முடிவு மிகவும் வரவேற்கத்தக்கது. அறிவிப்போடு நிறுத்திவிடாமல், இதற்கான ஆயத்த பணிகளைத் தமிழக அரசு எந்தவித தாமதமுமின்றி உடனடியாகத் தொடங்கிட வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.