எம்.ஜி.ஆரின் 109 வது பிறந்தநாள் விழாவை இதயக்கனி மாத இதழின் ஆசிரியர் விஜயன் மற்றும் ராஜாவின் கானம் ஆகியோர் சென்னையில் நடத்தினார்கள். அதைத் தொடர்ந்து புதுவை மாநிலம் ஆரோவில் “யாத்ரா கலை பண்பாட்டு மையம்” சார்பில் கலை நிகழ்ச்சி நடந்தது . இம்மூன்று நிகழ்வுகளிலும் மலேசியா பாடகர்கள் மேகநாதன், மதியழகன், சிவமணி, பார்வதி, சிங்கப்பூரை சேர்ந்த அருள்மொழி ஆகிய ஐந்து பேர்களும் தமிழகத்தில் பாடினார்கள். முதல் நிகழ்வாக இதயக்கனி மாத இதழ் நடத்திய எம்.ஜி.ஆரின் 109 வது பிறந்த நாள் விழாவிலும், அடுத்த நாள் ராஜாவின் கானம் நடத்திய எம்.ஜி.ஆரின் பிறந்த நாள் விழாவிலும் கலந்து கொண்டு பாடிய பாடகர்கள், மூன்றாம் நாள் நிகழ்ச்சியாக புதுவை “யாத்ரா கலை பண்பாட்டு மையம்” நடத்திய கலை விழாவிலும் கலந்து கொண்டு பாடினார்கள். பாடியதுமட்டுமல்ல ஆடிக் கொண்டே பாடினார்கள்.

மதியழகன் “நாளை நமதே” என்ற படத்தில் எம்.ஜி.ஆருக்காக எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய “என்னை விட்டால் யாருமில்லை கண்மணியே உன் கை அணைக்க” என்ற பாடலை ரசித்தபடியும் அதற்கேற்ற உடல் நயனத்துடனும் பாடியது ரசிகர்களின் வரவேற்பை பெறற்து.

அவரை தொடர்ந்து பாடவந்த மேகநாதன், நாடோடி படத்தில் “உலகம் எங்கும் ஒரே மொழி உள்ளம் பேசும் காதல் மொழி” என்று பார்வதி பாடியதும், “பொன் அழகு பெண் முகத்தில் கண்ணிருந்தால் என்னாகும்” என்று மேகநாதன் பாடிக்கொண்டே கேள்வி கேடபதுபோல் கையை பார்வதியிடம் நீட்டி பாடிய காட்சி இளைஞர்களை ஏங்க வைத்தது. இதை டி.எம்.சௌந்தரராஜன் குரலில் அச்சு பிசகாமல் அப்படியே பாடினார். அவர் பாடும்போது கூட்டத்தில் இருந்த ரசிகர் ஒருவர் எம்.ஜி.ஆர். ஆடுவது போன்றே ஆடினார், இல்லை மேகநாதன் ஆட வைத்தார். அவ்வளவு இனிமையாக இருந்தது.
பிறகு பார்வதி பாட வந்தார். அவர் பாடிய ஆயிரத்தில் ஒருவன் படத்தில், ஜெயலலிதாவுக்காக சுசிலா அம்மையார் பாடிய “பருவம் எனது பாடல் பார்வை எனது ஆடல் கருணை எனது கோயில் கலைகள் எனது காதல்” என்ற பாடலை துல்லியமாக யாவரும் ரசிக்கும்படி வாய் மொழியாலும் உடலின் அசைவுகளாலும் அருமையாக பாடி முடித்தார்.

அதன் பிறகு எங்கள் வீட்டுப்பிள்ளை படத்தில் எம்.ஜி.ஆருக்காகவும் சரோஜாதேவிக்காகவும் டி.எம்.சௌந்தரராஜன், பி.சுசிலா ஆகியோர் பாடிய “குமரிப் பெண்ணின் உள்ளத்திலே குடியிருக்க நான் வரவேண்டும் குடியிருக்க நான் வருவதென்றால் வாடகை என்ன தரவேண்டும்” என்ற பாடல் வரியை மதியழகன் கண்ணை சிமிட்டிக் கொண்டு பார்வதியை பார்த்து கேள்வி கேட்பது போல் பாடுவார். அதை புரிந்து கொண்ட பார்வதி ஏக்கத்துடன் “குமரிப் பெண்ணின் கைகளிலே காதல் நெஞ்சை தர வேண்டும் காதல் நெஞ்சை தந்துவிட்டு குடியிருக்க நீ வரவேண்டும்” என்று வெங்கத்துடனும் நாணத்துடனும் சரோஜாதேவியின் சாயலில் அப்படியே பாடுவார்.

பிறகு மேகநாதனும் பார்வதியும் சேர்ந்து ரகசியபோலீஸ் 115 என்ற படத்தில் எம்.ஜி.ஆருக்காகவும் வெண்ணிற ஆடை நிர்மலாவுக்காகவும் டி.எம்.சௌந்தரராஜன், எல்.ஆர்.ஈஸ்வரி பாடிய “கண்ணில் தெரிகின்ற வானம் கைகளில் வாராதோ துள்ளித் திரிகின்ற மேகம் தொட்டு தளுவாதோ” என்று வானத்தை நோக்கி கைகளை நீட்டி வெண்ணிற ஆடை நிர்மலா பாடுவதைப் போலவே பார்வதியும் தனது வலது கையை வானத்தை நோக்கி நீட்டிக் கொண்டு பாடியது பார்வையாளர்களை பரவசப்படுத்தியது. அப்போது அவ்விழாவுக்கு சிறப்பு விருந்தினராக வருகை தந்து முதல் வரிசையில் அமர்ந்திருந்த வெண்ணிற ஆடை நிர்மலாவும் தான் நடித்த பாடலை கேட்டு பாடலை முணுமுணுத்தபடியே ரசித்துக் கொண்டிருந்தார். இது பாடகி பார்வதிக்கு பெருமையாக இருந்தது.

இதைத் தொடர்ந்து மேகநாதனுடன் சிங்கப்பூர் அருள்மொழி பாடவந்தார். குடியிருந்த கோயில் படத்தில் எம்.ஜி.ஆருக்காகவும் ராஜஸ்ரீக்காகவும் டி.எம்.சௌந்தரராஜனும் எல்.ஆர்.ஈஸ்வரியும் பாடிய “துள்ளுவதோ இளமை தேடுவதோ தனிமை” என்ற எல்.ஆர்.ஈஸ்வரியின் பாடலை அருள்மொழி பாடினார். பாடமட்டுமா செய்தார், ஐய்யகோ மேடை முழுவதிலும் ஆடினார். படத்தில் ராஜஸ்ரீ மான்குட்டி போல துள்ளித் துள்ளி ஆடியது போன்றே அருள்மொழியும் மேடையில் துள்ளித்துள்ளி ஆடினார். அத்துடன் வி ட்டாராயென்றால் அதுவும் இல்லை. பாவம் மேகநாதனை சுற்றிச்சுற்றி வந்து பாடினார். அவரின் ஆடலுக்கு நடுவே பாடசாலை மாணவன் போல் நின்று கொண்டிரந்தார் மேகநாதன். பிறகு மேகநாதன் பாடும் வேலை வந்தது. மனிதன் துள்ளி எழுந்தார். “ஹோய் பப்பா ஹோய் பப்பா” என்று மேகநாதன் பாடியபோது அருள்மொழியின் ஆடலுக்கு சவால்விடும் விதமாக பார்வையாளர்கள் பகுதியிலிருந்தும் ஒருவர் “ஹோய் பப்பா ஹோய் பப்பா” என்று பாடத் தொடங்கிவிட்டார். அந்த மனிதர் அருள் மொழியின் ஆடலுக்கு கிறங்கி போய் இருந்திருப்பார் போலிருக்கிறது. சரி இனி மேடைக்கு வருவோம். அருள்மொழி பாடி முடித்ததும் மேகநாதன், “தேன் ஊரும் பாவை பூ மேடை தேவை” என்று எம்.ஜி.ஆர்.பாணியில் கையை அசைத்துக் கொண்டு பாடினார். உற்சாகம் அடைந்த மேடையின் கீழ் இருக்கும் எம்ஜிஆரின் ரசிகர்களின் விசில் சத்தம் காதை பிளந்தது. தொடர்ந்து பாடிய மேகநாதன் “நானாக அள்ளவா நானாக அள்ளவா” என்று ஜெர்மனியில் காளையை அடக்கும் வீரரைப் போன்று மேகநாதன் துள்ளிக் கொண்டே இருக்கும் அருள் மொழிக்கு ஈடுகொடுத்து பாடுவார். மொத்தத்தில் எம்ஜிஆரின் ரசிகர்களுக்கு மலேசியா பாடகர்கள் இசை விருந்து கொடுத்தார்கள்.
————-

