ஏ.எஸ்.ரமண பாலாஜி, பத்மாவதி காந்தி ஆகியோரின் தயாரிப்பில், கே.வி.கதிர்வேலு இயக்கத்தில் யோகி பாபு, வேல ராமமூர்த்தி, எம்.எஸ். பாஸ்கர், மரியா வின்சென்ட், சார்ம்ஸ், ஆர்த்தி கணேஷ், மனோபாலா, கல்கி, மாரிமுத்து, படவா கோபி, சென்ட்ராயன், டி.எஸ்.ஆர், தீபா சங்கர், சபிதா ராய், ஜாவா சுந்தரேசன், கே.எம். கணேஷ்கர் ஆகியோர்கள் நடிதிருக்கும் படம் “சிங்காரம்”. இக்கதை 1990 ஆம் ஆண்டு காலகட்டத்தில் நடப்பதாக சித்தரிக்கப்பட்டுள்ளது. கதைப்படி நரிக்குறவரான யோகிபாபு, தனது தந்தை எம்.எஸ்.பாஸ்கர், அம்மா தீபா, மற்றும் தனது இனத்தவர்களுடன் கோயம்புத்தூர் யானைமலை பகுதிக்கு ஊசி பாசிமணிகளை விற்க வருகிறார். அங்கு உயர் இனத்தை சேர்ந்த சென்றாயனால் அவமானப்படுத்தபடுகிறார். மானமரியாதையோடு வாழ்வதற்கு அவமானங்களை சுமந்துகொண்டு வாழ்க்கையை தள்ளவேண்டியதாய் இருக்கிறது. இந்நிலையில் லாட்டரி சீட்டு மூலம் யோகிபாபு கோடீஸ்வரராகிறார். செல்வந்தராக மாறியதும் அவருக்கும் அவரது இனத்தவருக்கும் மரியாதை கிடைத்ததா? இல்லையா? என்பதுதான் மீதிக்கதை.
சிறிதும் நகைச்சுவையே இல்லாமல் ஒரு சமூகத்தின் அவமானங்களை தாங்கிக்கொள்ளும் உணர்வுபூர்வமான நடிப்பை கனகச்சிதமாக வெளிப்படுத்தி நடித்திருக்கிறார் யோகிபாபு. ஒரு புதிய பரிணாமம் அடைந்தவராக அடையாளப் படுத்தப்படுகிறார். ஏனைய நடிகர்கள் அனைவரும் கதாபாத்திரமாகவே வாழ்திருக்கிறார்கள். பிரசன்னாவின் ஒளிப்பதிவு உயிரோட்டமாக அமைந்திருக்கிறது. கதைக்கு தகுந்த இசையை கொடுத்து படத்துக்கு பலம் சேர்த்திருக்கிறார் சாம்.சி.எஸ். இக்கதை உண்மையாக நடந்த ஒரு சம்பவத்தை திரைக்கதையாக்கி, இனபாகுபாட்டால் ஏற்படும் மனவலியை சமுதாய சுந்தனையோடு பதிவு செய்திருக்கும் இயக்குநர் கே.வி.கதிர்வேலு போற்றப்பட வேண்டியவர்.

