(தங்க முகையதீன்)
—————
முத்தியால்பேட்டை பகுதியில் காணாமல் போன 65 வயது மாற்றுத்திறனாளி பெண், காவல் கரங்கள் குழுவினர் மூலம் மீட்கப்பட்டு, காவல் ஆணையாளர் வழிகாட்டுதலின் பேரில், விசாரணைக்குப் பின்னர், கூடுதல் காவல் ஆணையாளர் மூலம் பரிதவித்த அவரது குடும்பத்தாருடன் மீள ஒப்படைக்கப்பட்டார். தாம்பரம் காவல் ஆணையரக செம்மஞ்சேரி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பேருந்து நிலையம் அருகில் வாய் பேச முடியாமல் ஆதரவற்ற நிலையில் மூதாட்டி ஒருவர் இருப்பதாக காவல் கரங்கள் உதவி எண்ணிற்கு மூதாட்டியின் புகைபடத்துடன் விவரங்கள் அனுப்பி மூதாட்டியை மீட்குமாறு தகவல் கொடுத்ததின் பேரில், சென்னை பெருநகர காவல் கரங்கள் தன்னார்வலர் குழு மூதாட்டி இருக்கும் இடத்திற்கு சென்று மூதாட்டியை விசாரித்து அவருக்கு வாய்பேச முடியாத மற்றும் காது கேட்காததால், விபரங்கள் தெரியாததால், பாதுகாப்பு கருதி அவரை மீட்டு அவர் வைத்திருந்த பணம் ரூ.2,368/- உடன் செம்மஞ்சேரி காவல் நிலைய நமூனா மூலம் முடிச்சூரில் உள்ள கை கொடுப்போம் முதியோர் காப்பகத்தில் தங்க வைத்து நல்ல முறையில் பராமரிக்கப்பட்டு வரப்பட்டது. மேலும், அவரது புகைபடத்தை காவல் கரங்கள் குழுவினர் மூலம் அனைத்து காவல் நிலையங்களுக்கும் அனுப்பி, காணாமல் போன நபர்கள் பற்றி விசாரணை செய்துவரப்பட்டது. விசாரணையில், மீட்கப்பட்ட மூதாட்டியின் பெயர் மும்தாஜ், பெ/வ.65 என்பதும், காது கேட்காத, வாய் பேச முடியாத மற்றும் சற்று மனநலம் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளி என்பதும், இவரது கணவர் இறந்துவிட்ட நிலையில், கடந்த 07.12.2025 அன்று முத்தியால்பேட்டை பகுதியிலிருந்து, கொடுங்கையூர், எஸ்.ஏ.காலனி 10வது தெருவில் உள்ள இவரது சகோதரி மகன் வீட்டிற்கு செல்லும்போது, காணாமல் போனதால், முத்தியால்பேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டு, 12.12.2025 அன்று பெண் காணவில்லை பிரிவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, காவல் குழுவினர் தேடி வந்ததும் தெரியவந்தது. அதன்பேரில், காவல் கரங்கள் குழுவினர் மூதாட்டியின் சகோதரி மகன் ஷபிக் என்பவருக்கு தகவல் தெரிவித்து, (18.12.2025) வேப்பேரி, காவல் ஆணையரகத்தில், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆ.அருண் அறிவுரையின்பேரில், கூடுதல் காவல் ஆணையாளர் (தலைமையிடம்) விஜயேந்திர பிதாரி, மீட்கப்பட்ட மூதாட்டி மும்தாஜ் அவர் வைத்திருந்த ரூ.2,368/- பணத்துடன் பரிதவித்து தேடி வந்த அவரது குடும்பத்தாருடன் நல்ல முறையில் மீள சேர்த்து வைக்கப்பட்டார். மும்தாஜை பத்திரமாக மீட்டு ஒப்படைத்த சென்னை பெருநகர காவல் அதிகாரிகள், காவல் கரங்கள் குழுவினர் மற்றும் தன்னார்வலருக்கு மும்தாஜ் குடும்பத்தினர் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர். இந்நிகழ்வில் காவல் உதவி ஆணையாளர் (மக்கள் தொடர்பு அதிகாரி) முனைவர். எம்.எஸ்.பாஸ்கர், காவல் கரங்கள் காவல் ஆய்வாளர், மேரி ரஜு மற்றும் காவல் கரங்கள் தன்னார்வலர் உடனிருந்தனர்.

