“இம்மார்டல்” திரைப்படம் ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை வழங்கும் – ஜி.வி.பிரகாஷ்

எ.கே.பிலிம் ஃபேக்ட்ரி சார்பில் அருண்குமார் தனசேகரன் தயாரிப்பில், ஜிவி பிரகாஷ் மற்றும் கயாது லோஹர் நடிப்பில், மாரியப்பன் சின்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “இம்மார்டல்” திரைப்படத்தின் முன் வெளியீட்டு நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் ஜி.வி.பிரகாஷ் குமார் பேசியதாவது: “இது மிகவும் வித்தியாசமான படம். இந்திய சினிமாவிற்கு புதிதான வாம்பயர் ஜானரில் உருவாகியுள்ள இந்தப் படம், ரசிகர்களுக்கு ஒரு புதிய அனுபவத்தை வழங்கும். சுமார் ஒரு வருடம் உழைத்து சிஜி மற்றும் மான்ஸ்டர் காட்சிகளை உருவாக்கியுள்ளோம். இது ஒரு சர்வைவல் திரில்லராகவும் இருக்கும். சுமார் நான்காயிரம் ஆண்டுகள் வாழும் ஒரு கதாபாத்திரத்தைச் சுற்றியும் கதை நகர்கிறது. இந்தப் படத்தின் தயாரிப்பாளர் அருண்குமார் தனசேகரன் கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்தப் படத்தை மிகுந்த அர்ப்பணிப்புடன் கொண்டு சென்றுள்ளார். புதிய தயாரிப்பாளர் மற்றும் புதிய இயக்குநர் இணைந்து பெரிய கனவுடன் உருவாக்கியுள்ள இந்தப் படத்திற்கு அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும். இயக்குநர் மாரியப்பன் சின்னா கூறிய கதை ஹாலிவுட் தரத்தில் இருந்ததால் எனக்கு மிகவும் உற்சாகமாக இருந்தது. இது எந்தப் படத்தின் காப்பியும் இல்லை; முற்றிலும் புதிய அனுபவத்தை ரசிகர்களுக்கு வழங்கும் முயற்சி.********

கயாது லோஹர் இந்தப் படத்தில் தனது சிறந்த நடிப்பை வழங்கியுள்ளார். அவரது ரசிகர்கள் நிச்சயம் இந்தப் படத்தை ரசிப்பார்கள். மற்ற நடிகர்களும் சிறப்பாக நடித்துள்ளனர். குறிப்பாக கார்த்தி அவர்களின் கதாபாத்திரம் திரையரங்கில் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும்.

தயாரிப்பாளர் அருண்குமார் தனசேகரன் பேசியதாவது: “இந்தக் கதையை இயக்குநர் மாரியப்பன் சின்னா முதன்முதலில் என்னிடம் கூறியபோது, ‘இது ஹாலிவுட் படம் போன்று இருக்கிறது. இதை எப்படி சாத்தியப்படுத்த முடியும்?’ என்ற எண்ணம்தான் எனக்கு ஏற்பட்டது. குறிப்பாக, அவர் கூறிய விஷுவல் கிரியேஷன்கள் மிகப் பெரிய சிஜி பணிகளைக் கொண்டதாக இருந்தன. ஆனால், இயக்குநர் சுமார் ஏழு மாதங்கள் வெளிநாட்டில் உள்ள ஸ்டூடியோவில் பணியாற்றி, படத்தின் விஷுவல் மாடலைத் தயாரித்து என்னிடம் கொண்டு வந்தார். ‘சார், நீங்கள் இதுவரை பார்த்த சாதாரண தமிழ் படம் போல் இது இருக்காது. ஹாலிவுட் தரத்தில் இதை உருவாக்க முடியும்’ என்ற அவரது நம்பிக்கையே என்னையும் இந்தப் படத்தை தயாரிக்கத் தூண்டியது.

இயக்குநர் மாரியப்பன் சின்னா பேசியதாவது. “இந்தக் கதையை உருவாக்கியதில் இருந்து படமாக்குவது வரை ஏராளமான சவால்களை சந்தித்தோம். இது வழக்கமான திரைப்படம் அல்ல என்பதால், ஒவ்வொரு காட்சியையும் புதிதாக யோசித்து உருவாக்க வேண்டியிருந்தது. இந்தப் படத்தின் மீது நம்பிக்கை வைத்து, எனக்கு முழு சுதந்திரத்தையும் ஆதரவையும் வழங்கிய தயாரிப்பாளர் அருண்குமார் தனசேகரனுக்கு முதலில் நன்றி. ஜி.வி. பிரகாஷ் சார் கதையைக் கேட்டதும் நம்பிக்கை வைத்து இந்தப் படத்தில் இணைந்தார். ஒளிப்பதிவாளர் அருண் ராதாகிருஷ்ணன் ஒவ்வொரு காட்சியையும் மேலும் சிறப்பாக உருவாக்குவதற்காக அதிகம் யோசித்து உழைத்தார். எடிட்டர் சான் லோகேஷ், பின்னர் இணைந்த ராஜேஷ் ஆகியோரும் படத்தின் உருவாக்கத்தில் முக்கிய பங்களிப்பை வழங்கியுள்ளனர்.