யுவராஜ் கணேசன் தயாரிப்பில் விக்னேஷ் ஶ்ரீகாந்த் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ், அதிதி ஷங்கர், சோனா ஒலிக்கல், டிராவிட் செல்வம், அனுஷா பிரபு, ஜகபர், ஸ்ரீநாத், வர்ணிகா வரத், நியாஸ் முஹம்மது, சித்ரா லட்சுமணன், தேவதர்ஷினி ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “ஒன்ஸ்மோர்”.‘ காதல் கதையை வித்தியாசமாகச் சொல்ல நினைத்த இயக்குநர் தடுமாற்றத்த்குடன் சொல்லியிருக்கிறார். காதல், மனநிலை, கடந்தகால நினைவுகள், மீட்பு என பல விஷயங்களை ஒன்றாகக் கலந்து சொல்ல முயன்றிருக்கும் இயக்குனர், அவற்றை சுவாரஸ்யமான திரைக்கதையாக மாற்றுவதில் முழுமையாக வெற்றி பெற்றாரா? என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். படத்தின் முன்பகுதி முழுவதிலும் அர்ஜுன் தாஸ் இறுகிய முகத்துடனே நடித்திருப்பது படத்தின் ஓட்டத்துக்கு தடை கல்லாக இருக்கிறது. அழகிய தேரோட்டமாக செல்ல வேண்டிய காதல் கதையை, முட்டுக்கால் கொடுத்து வேறுபக்கம் திரைக்கதை செல்கிறது. அர்ஜூன் தாஸின் குன்றாத குரல்வளம் ரசிக்க முடிகிறது. ஆனால் உடல்மொழி கதாநாயகனுக்குறியதாக இல்லை. படத்தின் பின்பகுதி முன்பகுதிக்கு முற்றிலும் மாறாக நடித்து ரசிகர்களை கவர்கிறார் அர்ஜூன் தாஸ்.
அதிதி ஷங்கர் உற்சாகமாகவும் துடிப்பாகவும் நடித்து சோர்வடைந்த ரசிகர்களை தட்டி எழுப்புகிறார். அசைவற்று கிடக்கும் உடலுக்கு உயிரோட்டமாக இருப்பவர் அதிதி ஷங்கர்தான். துடிப்பான நடிப்பைக் கொடுத்து தோள்தட்டி நிற்கிறார் அதிதி ஷங்கர். திரைக்கதை வலுவாக இல்லாததை உச்சக்கட்ட காட்சியின் மூலம் படத்தின் குறையை நிவர்த்தி செய்துள்ளார் இயக்குநர். படத்தின் ஒளிப்பதிவில் கதாபாத்திரங்களின் மனநிலையை பிரதிபலிக்க முயற்சி செய்திருப்பது பாராட்டுக்குரியது. அர்ஜூன் தாஸின் இறுக்கமான கதைக்களம் கௌதம் மேனனை நினைவுக்கு கொண்டு வருகிறது. அதிதி ஷங்கரின் கதைக்களம் சுந்தர் சியை நினைவுபடுத்துகிறது. அர்ஜுன் தாஸ் இப்படத்தில் இறுக்கமான மனிதராக இருக்கும் போதும் காதலில் சிக்கிக் கொள்ளும்போதும் தனது நடிப்பில் நல்ல வித்க்தியாசத்தை கொடுத்துள்ளார். ஹேஷமின் இசையும் பின்னணி இசையும் படத்தின் உணர்வுகளை தூக்கிப்பிடிக்க உதவுகின்றன. படத்தை ஒருமுறை பார்த்தாலே போதும்.‘ஒன்ஸ்மோர்’ கேட்க முடியவில்லை.

