ஓய்வெடுத்துக் கொண்டிருந்த புலியும் மீண்டும்
ஒய்வின்றித் தொண்டுசெய்து தமிழைக் காக்கப்
பாய்ந்தெழுந்து வருவதுபோல் *மூர்த்தி* இன்று
பலநண்பர் துணையுடனே வந்து விட்டார் !
சாய்கின்ற மலர்ச்செடியாய் *எஸ் . பி . எம்* . இன்
*தமிழ்-தமிழின் இலக்கியத்தின்* வாட்டம் போக்கப்
பாய்நீராய் ஆகிவிட்ட கல்வி யாளர் –
பாங்கர்களை ஒருங்கிணைத்தே உள்ளார் மூர்த்தி !
தமிழ்த்தொடக்கப் பள்ளிகட்கே எத்த னையோ
சங்கடங்கள் இருந்தாலும் பெருந்து யர்கள்
தமிழ்ப்பள்ளி ; அதில்கற்கும் மாண வர்கள்
தமக்கில்லை இன்றுவரை ; என்றிட் டாலும்
தமிழ்ப்பள்ளி யைத்தாண்டி *இடைநி லையில்*
தமிழ்மொழியை – இலக்கியத்தை எளிதாய்க் கற்கத்
தமிழ்மாணாக் கர்களென்றும் காணும் தொல்லை
தமைச்சொல்ல வார்த்தைகளே இல்லை ஐயோ !
தொடக்கமுதல் பல்கலைகள் வரைக்கும் இன்று
தூய்தமிழைக் கற்பதற்கே அனும திக்கும்
நடைமுறையை அரசென்றும் கொண்டே உள்ளார் !
நமக்கெல்லாம் இதுதெரியும் ; மேலும் ஒன்றாம் ,
இடைநிலையில் *தமிழ்மொழியோ(டு) இலக்கி யத்தை*
இருபாடம் எனத்தமிழில் படித்திட் டாலும்
தடையின்றிப் பிறபாடம் அனைத்தி னையும்
தனித்து *மலாய் , ஆங்கிலத்தில்* கற்கின் றார்கள் !
இதனால்நம் மாணவர்கள் தமிழைக் கற்றால்
இடைநிலையில் நிச்சயமாய்ப் பிறபா டங்கள்
எதனிலுமே தோல்வியையே முழுதும் காண்பார்
எனப்பெற்றோர் தவறாகக் கருது கின்றார் ;
அதனால்தான் இடைநிலையில் தம்பிள் ளைகள்
அருந்தமிழைக் கற்பதற்கு ஒப்பா துள்ளார் !
இதுசரியா ? தமிழ்தவிரப் பிறபாடம் மலாயில் மற்றும்
இகமொழியாம் ஆங்கிலத்தில் கற்கும் போது….
எப்படித்தான் *இடைநிலையில், பல்க லையில்*
இந்தியமா ணாக்கர்களும் தோல்வி காண்பர் ?
அப்படித்தான் ஆராய்ந்து பார்த்தி டாமல்
அரைவேக்காட்(டு) அறிவோடு தமிழைத் தள்ளும்
தப்பைத்தான் ஐம்பதுக்கும் மேலே உள்ள
சதவிகித இந்தியர்கள் செய்கின் றார்கள்
துப்பளிக்கா விட்டாலும் தமிழர் யார்க்கும்
*சூடு,சொர ணை* தமிழும் தரவா இல்லை ?
தமிழ்-தமிழப் பள்ளியெலாம் உயர வேண்டில்
தமிழ்கற்கும் மாணவர்கள் பெருக வேண்டும்
தமிழ்கற்கும் மாணாக்கர் அதிக ரிக்கத்
தமிழ்ப்பெற்றோர் பிள்ளைகளை அனுப்ப வேண்டும்
தமிழ்ப்பள்ளிக்(கு) அவரிதனைச் செய்யா விட்டால்
தமிழ்ப்பெற்றோர்- அவர்பிள்ளை *மூளை* தம்மைத்
தமிழுக்காய்ச் *சலவை* செய்தே ஆக வேண்டித்
தனித்து *மனோ தத்துவர்கள் படையே* வேண்டும் !
*பாதாசன்*
*அரும்பொருள் விளக்கம் :-*
பாங்கர்களை – நண்பர்களை
இகமொழி – உலக மொழி
துப்பளிக்கா – உணவளிக்கா

