சென்னை, அக்.2- தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடத் துறைகளைச் சேர்ந்த முக்கிய தயாரிப்பாளர் அமைப்புகள் ஒன்றிணைந்து தென்னிந்திய தொலைக்காட்சி மற்றும் ஓடிடி தயாரிப்பாளர்கள் சங்கம் என்ற ஒருங்கிணைந்த அமைப்பை உருவாக்கியுள்ளன. தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய நான்கு முக்கிய தென்னிந்திய மொழிகளின் தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் துறைகளில் செயல்பட்டு வந்த அமைப்புகள் தற்போது ஒரே குடையின் கீழ் இணைந்துள்ளன. இதன் மூலம், தென்னிந்திய தயாரிப்பாளர்களின் நலன்களுக்கான ஒற்றுமை மிக்க மற்றும் வலிமை வாய்ந்த அமைப்பு உருவாகியுள்ளது. தமிழக சங்கத்தின் கெளரவத் தலைவர் ராதிகா சரத்குமார் புதிய கூட்டமைப்பை தொடங்கி வைத்தார்.******
தொலைக்காட்சி துறையில் நீண்டகாலமாக நிலவி வரும் பல்வேறு பிரச்சினைகளுக்கு ஒருங்கிணைந்த தீர்வு காண்பது, கலைஞர்களின் கால்ஷீட் மற்றும் பணிநேரங்களை முறைப்படுத்துவது, தயாரிப்பாளர்களின் முதலீடுகளைப் பாதுகாப்பது மற்றும் தென்னிந்திய தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் துறைகளுக்கு இடையிலான ஒற்றுமையை மேலும் வலுப்படுத்துவது ஆகியவை இந்த புதிய சங்கத்தின் முக்கிய நோக்கங்களாகும்.
இதன் மூலம் நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் தயாரிப்பு நிறுவனங்களுக்கு இடையே ஒரு வலுவான பாலமாக இந்த அமைப்பு செயல்பட்டு, மாநில எல்லைகளைக் கடந்து நடைபெறும் தயாரிப்புப் பணிகள் சீரான முறையிலும், வெளிப்படைத்தன்மையுடனும், ஒழுங்குமுறையுடனும் நடைபெறுவதற்கு தேவையான ஆதரவை வழங்கும்.

