“ஓ பட்டர்பிளை” திரைப்பட விமர்சனம்

வெங்கி, ஆனந்த் எஸ் ஷா, விஜய் ரங்கநாதன், நிஷா பாட்டியல் ஆகியோரின் தயாரிப்பில், விஜய் ரங்கநாதனின் எழுத்து மற்றும் இயக்கத்தில், நிவேதிதா சதிஷ், சிபி சந்திரன், அதுல், நாசர், லட்சுமி பிரியா சந்திரமௌலி, கீதா கைலாசம் ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “ஓ பட்டர்பிளை”. கைம்பெண்ணான நிவேதிதா சதிஷ், மனதளவில் பாதிக்கப்பட்டு தற்கொலை செய்து கொள்ள தீர்மானிக்கிறார். இந்நிலையில் மரயுரி தறித்த அவரது சகோதரி லட்சுமி பிரியா அவரை சமாதானப்படுத்துகிறார். ஆனால் தன் கணவரை நான்தான் கொலை செய்தேன் என்று நிவேதிதா சதீஷ் கூறி அதிர்ச்சியளிக்கிறார். அவர் அப்படி சொல்வது ஏன்?, அவரது கணவர் இறப்பின் உண்மை பின்னணி என்ன ? என்பதே படத்தின் மீதிக்கதை. கதையின் நாயகியாக நடித்திருக்கும் நிவேதிதா சதிஷ், பலம் வாய்ந்த கதாபாத்திரத்தில் மிக சாதாரணமாகவே நடித்திருக்கிறார். ஒரு பக்கம் ஏமாற்றிய முன்னாள் காதலன், மறுபக்கம் கணவர் என்று இறுதலைக் கொல்லி எறும்பு போல் தவிக்கும் இடத்தில் தன் நடிப்பை வெளிபடுத்தியிருக்கிறார். நிவேதிதாவின் முன்னாள் காதலராக நடித்திருக்கும் சிபி சந்திரன், கணவராக நடித்திருக்கும் அதுல் இருவரும் தங்களது வேலையை குறையின்றி செய்திருக்கிறார்கள். சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் தனது அனுபவம் வாய்ந்த நடிப்பின் மூலம் படத்திற்கு பெரும் அடையாளமாக நாசர் பயணப்பட்டிருக்கிறார். லட்சுமி பிரியா சந்திரமெளலி குழப்பம் நிறைந்த மனங்களை தெளிவுப்படுத்தும் பணியை சிறப்பாக செய்திருக்கிறார். கீதா கைலாசம் கதாபாத்திரமும் கவனம் ஈர்க்கிறது. வைசாக் சோமநாத் இசையில் பாடல்கள் எதுவும் மனதிலும், நினைவிலும் நிற்கவில்லை. பின்னணி இசை காட்சிகளுக்கு ஏற்ப பயணித்திருக்கிறது. எழுதி இயக்கியிருக்கும் விஜய் ரங்கநாதன், அனைத்து செயல்களும் தற்செயலாக நடக்கிறதே தவிர அதற்கு யாரும், எந்த வகையிலும் காரணமாக இருக்க முடியாது என்பதையும், ஒரு உயிர் போவதற்கு காரணமாக இருக்கும் சம்பவமே, மற்றொரு உயிர் பிழைப்பதற்கும் காரணமாக அமையும், என்ற தத்துவத்தை காட்சிகள் வாயிலாக விவரித்திருக்கிறார்.