“ஏன் என்னை ஏதோ செய்தாய்” செப்.4ல் வெளியீடு

ஆண்டனி அடெலியர் நிறுவனம் சார்பில்  எழுதி, இயக்கி, தயாரித்து, டி.ஆண்டனி, கதாநாயகனாகவும் நடித்துள்ள திரைப்படம் “ஏன் என்னை ஏதோ செய்தாய்”. மனதை வருடும்  திரைப்படமாக உருவாகியுள்ள “ஏன் என்னை ஏதோ செய்தாய்”  படம்  வரும் செப்டம்பர் 4ஆம் தேதி திரைக்கு வருகிறது., ஆண்டனி, மதுமிதா தாஸ், ஆலம் ஷா, நவ்யா சுஜி, ஜீவா ரவி ஆகியோர் நடித்துள்ளார்கள். இப்படத்தின் அறிமுக நிகழ்வில் இயக்குநர், தயாரிப்பாளர் மற்றும் கதாநாயகன் டி. ஆண்டனி பேசியதாவது. “படத்திற்கான தலைப்பை நீண்ட நாட்களாக தேடிக்கொண்டிருந்தபோது, ‘ஏன் என்னை ஏதோ செய்தாய்’ என்ற தலைப்பை கார்த்திக் நேத்தா சார் கொடுத்தார். முதல் வரியிலேயே அந்த மேஜிக் நடந்தது. பலரும் தலைப்பு மிகவும் கவித்துவமாக இருப்பதாக பாராட்டினர்.  தனஞ்செயன் சார் செய்த உதவியை மறக்க முடியாது. இரண்டு வாரங்களுக்கு முன்பு வரை படம் வெளியாகுமா என்ற நம்பிக்கையே எனக்கு இல்லை. விநியோகம் தொடர்பான பிரச்சனையை அவரிடம் சொன்னதும், உடனடியாக உதவி செய்து அதை சரி செய்தார். அவருடைய உதவி இல்லையென்றால் இந்த நிகழ்வே நடந்திருக்காது. சினிமா குறித்து அவர் பகிரும் காணொளிகள் மூலம் ஒரு புதுமுகமாக நான் நிறைய விஷயங்களைக் கற்றுக்கொண்டிருக்கிறேன்.********

இந்தப் பயணம் மிகவும் கடினமானதாகவும், பல விஷயங்களை கற்றுக்கொடுத்ததாகவும் இருந்தது. இன்று இந்தப் படத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வந்திருப்பது மிகப்பெரிய மகிழ்ச்சி. இந்தப் பயணத்தில் எனக்கு துணையாக இருந்த என் குடும்பத்தினர் மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி.”

கதாநாயகி மதுமிதா தாஸ் பேசியதாவது:  “இது என்னுடைய முதல் திரைப்படம். என்னுடைய அறிமுகப் படம் என்பதால் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன். முதலில், இந்தக் கதாபாத்திரத்தின் மீது நம்பிக்கை வைத்து, அதை என்னால் செய்ய முடியும் என்று நம்பி இந்த வாய்ப்பை வழங்கிய இயக்குநரும் தயாரிப்பாளருமான டி.ஆண்டனி சாருக்கு நன்றி. பொதுவாக அதிகம் பேசப்படாத ஒரு கதாபாத்திரத்தை மையமாக வைத்து நடித்திருப்பது எனக்கு மிகவும் சவாலான மற்றும் சிறப்பான அனுபவமாக இருந்தது. காணொளியில் அந்தக் கதாபாத்திரத்தின் பெங்காலி பின்னணியும், அதற்கான எஸ்சென்ஸும் அழகாக வெளிப்பட்டிருப்பதை பார்க்க முடிந்தது.

தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசியதாவது: “சில வாரங்களுக்கு முன்பு ஆண்டனியின் படத்தின் பதாகையை பார்த்து, படத்தை பார்க்க வேண்டும் என்று அவரை தொடர்புகொண்டேன். உடனடியாக பிரிவியூ ஏற்பாடு செய்து படத்தை பார்க்க வைத்தார். குறுகிய காலத்தில் உருவாகியிருந்தாலும், ‘ஏன் என்னை ஏதோ செய்தாய்’ ஒரு அழகான, கவித்துவமான காதல் கதையாக உருவாகியுள்ளது.

ஆண்டனி, மதுமிதா தாஸ் இருவரின் நடிப்பு சிறப்பாக இருக்கிறது. ஆலம் ஷா, நவ்யா சுஜி, ஜீவா ரவி உள்ளிட்ட அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர். கார்த்திக் நேத்தாவின் பாடல் வரிகள், அசோக் ஸ்ரீதரன் மற்றும் ஜெய்கார் ஹரிநாத்தின் இசை, ஒளிப்பதிவு என அனைத்தும் படத்தின் தரத்தை உயர்த்தியிருக்கிறது. குறிப்பாக சிங்க் சவுண்டில், டப்பிங் இல்லாமல் படத்தை உருவாக்கியிருப்பது பாராட்டுக்குரியது. இவ்வளவு குறுகிய காலத்தில் தரமான படத்தை உருவாக்கியதற்கு சிறப்பான முன்தயாரிப்பே காரணம். சிறு படங்களுக்கு ஊடகங்களின் ஆதரவு மிகவும் அவசியம். பெரிய படங்களுக்கு மட்டுமல்லாமல், இதுபோன்ற சிறு படங்களுக்கும் ஊடக நண்பர்கள் ஆதரவு தர வேண்டும்.

தற்போது செப்டம்பர் 1ஆம் தேதி முதல் புதிய படங்களின் படப்பிடிப்பு மற்றும் வெளியீடு தொடர்பாக தயாரிப்பாளர்கள் சங்கம் வேலைநிறுத்தம் அறிவித்துள்ளது. இதுகுறித்து நாளை அனைத்து தயாரிப்பாளர்களுடனும் ஆலோசனை நடைபெறுகிறது. வெளியாகி 8 வாரங்கள் ஆன படத்தை ஓடிடி வாங்குவதில்லை, அது சம்பந்தமாக பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு அரசும் பிரச்சனையை கவனத்தில் கொண்டு, அனைவரும் கலந்தாலோசித்து தொழில்துறையை பாதிக்காத வகையில் முடிவு எடுக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.  எனவே நல்ல முடிவு கிடைக்கும் என்று நம்புகிறோம். ஆண்டனி விரும்புவது போல இந்தப்படம் செப்டம்பர் 4ஆம் தேதி படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.”