“நானும் ஜெய்யும் இன்னொரு பெரிய வெற்றிக்காகக் காத்திருக்கிறோம்”. – சத்யராஜ்

யுவராஜ் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் பி.யுவராஜ் தயாரிப்பில், இயக்குநர் பிரதாப்  இயக்கத்தில், நடிகர் சத்யராஜ், ஜெய், பிரக்யா நக்ரா, யோகிபாபு நடிப்பில், குடும்பங்களோடு கொண்டாடும் கலக்கலான நகைச்சுவை படமாக உருவாகியுள்ள படம் “பேபி – பேபி”. இபடத்தின் அறிமுக நிகழ்வில் நடிகர் சத்யராஜ் பேசும்போது கூறியதாவது:  “இந்தப்படம் மிக மிக நல்ல அனுபவமாக இருந்தது. இப்படத்தில் நிறைய நடிகர்கள், ஆனால் இத்தனை பேரை ஒருங்கிணைத்து மிக அழகாக எடுத்துள்ளார்கள். தயாரிப்பாளர் எளிமையாக அவரது மொழியில் பேசியது மகிழ்ச்சியாக இருந்தது. இப்படித்தான் நமக்கு வரும் மொழியில் பேச வேண்டும். நானும் ஜெய்யும் இன்னொரு பெரிய வெற்றிக்காகக் காத்திருக்கிறோம். ராஜா ராணி வந்து 13 வருடங்கள் ஆகிவிட்டது. பார்டி படம் இன்னும் வரவில்லை, மதகதராஜா போல் அந்தப்படம் வந்தால் கண்டிப்பாக வெற்றி பெறும். இந்தப்படத்தில் அஜித் விஜய்யுடன் ஜோடியாக நடித்த கீர்த்தனா எனக்கு ஜோடி.  நாமளும் இன்னும் இளைஞர் தான். தயாரிப்பாளர் அப்பாவி போல் இருந்தாலும், ரொம்பவும் விவரமானவர். பிரதாப் இத்தனை நடிகர்களை வைத்து, வெகு அழகாக வெகு சீக்கிரமாக திட்டமிட்டுப் படத்தை எடுத்துள்ளார் வாழ்த்துக்கள். நானும் இப்படத்திற்காக ஆவலோடு காத்திருக்கிறேன் நன்றி.*******

நடிகர் ஜெய் பேசியதாவது… இயக்குநர் கதை சொல்ல வந்த போது, சத்யராஜ் சார், யோகிபாபு டார்லிங் எல்லாம் ஓகே சொல்லிவிட்டார்கள் என்றவுடனே நானும் ஒகே சொல்லிவிட்டேன். ஷூட்டிங்கில் பட்டினியாக நடித்தது கஷ்டமாகத் தெரியவில்லை.  பட ஷூட்டிங்கில் சத்யராஜ் சார், யோகிபாபு என எல்லோரும் வயிறு வலிக்க வலிக்கச் சிரிக்க வைத்து விடுவார்கள் அது தான் கஷ்டமாக இருக்கும். இயக்குநர் பக்காவாக திட்டமிட்டு எடுத்தார்,  ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பெரிய ஆர்டிஸ்ட் இருப்பார்கள், ஆனால் அதை மிக அழகாக எடுத்துள்ளார். இரத்தம் வெட்டுக் குத்து இல்லாமல், மனம் விட்டுச் சிரித்து மகிழும் படமாக இப்படம் இருக்கும்.  பார்த்து விட்டுச் சொல்லுங்கள் நன்றி.

தயாரிப்பாளர் யுவராஜ் பேசியதாவது… எனக்கு தொழில் சினிமா இல்லை, ஆனால்  சினிமா மீது  சிறுவயதிலிருந்தே எனக்கு ஆர்வம். இயக்குநர் பிரதாப் சொன்ன கதை,  எனக்கு மிகவும் பிடித்திருந்தது,  உடனே தயாரிக்கலாம் என இறங்கினோம். படத்தில் வேலை பார்த்த அனைவருக்கும் என் நன்றிகள். ஒரு நல்ல படத்தை தமிழ்த்திரைத்துறைக்கு கொடுத்துள்ளோம் எனத் திருப்தியாக உள்ளது. இமான் சார் அற்புதமாக இசையமைத்துள்ளார். அவருக்கு இப்படத்தில் இசை வள்ளல் எனப் பட்டம் தந்துள்ளோம். ஜெய் சார், சத்யராஜ் சார், யோகிபாபு சார் என எல்லோரும் மிகவும் ஆதரவாக இருந்தார்கள். வெளியிலிருந்து பார்க்க சினிமா ஈஸியாக தெரிகிறது. திரைத்துறைக்குள் வந்த பின் தான், இங்குள்ள கஷ்டம் தெரிகிறது. பிரதாப் சொன்ன கதையால் தான் இந்தப்படம் நடந்தது. அவருக்கு நன்றி.  பிப்ரவரி 14 ஆம் தேதி இப்படத்தைத் திரைக்குக் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளோம். புதிதாக உங்களை நம்பி திரைக்கு வந்துள்ளோம், அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி.

இயக்குநர் பிரதாப் பேசியதாவது…இந்தக்கதையை எழுதியவுடன் யோகிபாபு சாரிடம் தான் முதலில் போனேன். அவருக்குக் கதை பிடித்திருந்தது. பின் பல தயாரிப்பாளர்களிடம் போனேன், இறுதியாக யுவாராஜ் சாரை சந்தித்தேன். அவர் கதை கேட்டு, மிகவும் ஆர்வமாகி இந்த கதாப்பாத்திரத்துக்கு இவரை போடலாம், அல்லது இவரைப் போடலாம் என,  அவர் தான் எல்லா நடிகர்களையும் ஒருங்கிணைத்தார். நான் தான் பட்ஜெட் பற்றிக் கவலைப்பட்டேன். இந்தக்கதையை  சத்யராஜ் சாரிடம் சொன்னதும் அவர் ஒத்துக்கொண்டார்,  அவர் படத்திற்குள் வந்ததும் படமே மாறிவிட்டது. ஜெய் சார் இப்படத்திற்காக அவ்வளவு உழைத்தார். ரம்ஜான் நோம்பினில் மூன்று வேளை சாப்பிடாமல் நடித்தார். யோகிபாபு சார்,  அவர் தான் இந்தப்படம் நடக்கக் காரணம். கீர்த்தனா மேடம் முதலில் அம்மாவாக நடிக்க மாட்டேன் என்றார் ஆனால் சத்யராஜ் சார் ஜோடி என்றதும் உடனே ஓகே சொல்லிவிட்டார். பிரக்யா நல்ல ஒத்துழைப்பைத் தந்தார். ஒளிப்பதிவாளர் மிக அருமையாகச் செய்து தந்துள்ளார். நான் இமான் சார் இசையமைக்க வேண்டும் என ஆசைப்பட்டேன், தயாரிப்பாளரும் அவரையே சொன்னார். அவர் கதை கேட்டு உடனே ஒத்துக்கொண்டார்.  அவர் இசையில் எல்லாப்பாடல்களும் அனைவருக்கும் பிடிக்கும். கண்டிப்பாக இந்தப்படம் அனைவருக்கும் பிடிக்கும். படம் நன்றாக எடுத்துள்ளோம்.