“மம்முட்டியான் ஸ்டார்ஸ்” திரைப்பட விமர்சனம்

சிங்கார வேலன் தயாரிப்பில் சவிர் சுதாகர் இயக்கத்தில் வைபவ் முருகேசன், லாவண்யா அன்பழகன், வெங்கட பாலமுரளி, ஜகபர் சாதிக், நான் கடவுள் ராஜேந்திரன், விவேக் பிரசன்னா, சம்பத் ஆகியோரின் நடிப்பில் ஜீ5 இணைய தளத்தில் வெளிவந்திருக்கும் படம் “மம்முட்டியான் ஸ்டார்ஸ்”.  தமிழகத்திலுள்ள ஒரு கிராமத்தில் வைபவ் முருகேசன் “மம்முட்டியான் ஸ்டோர்ஸ்” என்ற மட்டை பந்தாட்ட அணியின் தலைவராக இருந்து கிராமத்தில் நடக்கும் கோயில் திருவிழாக்களில் நடக்கும் மட்டை பந்தாட்ட போட்டிகளில் கலந்து கொள்கிறார். இவரது அணியிலுள்ள வெங்கட பாலமுரளி, ஜகபர் சாதிக், மட்டைப்பந்தாட்ட ரசிகையாக இருக்கும் லாவண்யா ஆகிய நால்வரும் “தல” என்று அழைக்கப்படும் மட்டை பந்தாட்ட வீரரின் (டோனி) பரம ரசிகர்களாக இருக்கிறார்கள். சென்னையில் நடக்கவிருக்கும் ‘தல’யின் கடைசி மட்டைப் பந்தாட்ட போட்டியை நேரில் கண்டு களிக்க சென்னைக்கு செல்ல திட்டமிடுகிறார்கள். நுழைவுச் சீட்டு வாங்க பணமில்லாததால் மொட்டை ராஜேந்திரனின் அலுவலகத்திலிருந்து ரூ.40 ஆயிரத்தை திருடிக் கொண்டு நால்வரும் சென்னைக்கு செல்கிறார்கள். ஆனால் விளையாட்டுப் போட்டியின் நுழைவுச் சீட்டு முழுவதும் விற்று தீர்ந்துவிட்டதால் வெளியில் ரூ.40 ஆயிரத்தையும் கொடுத்து 4 சீட்டுகளை வாங்கி மைதானத்துக்குள் செல்கிறார்கள். மைதான நுழைவு வாயிலில் அந்த 4 சீட்டுகளும் போலியானது என்று கண்டுபிடிக்கப்படுகிறது. அதனால் நால்வரும் வெளியேற்றப்படுகிறார்கள். ஆனாலும் மட்டைப் பந்தாட்டப் போட்டியை நேரில் பார்த்த பிறகுதான் கிராமத்துக்கு செல்ல வேண்டும் என்பதில் நான்கு பேரும் உறுதியாக இருந்து நுழைவு சீட்டுக்கு பணம் சம்பாதிக்க முயற்சிக்கிறார்கள். பணம் சம்பாத்கிக்க என்னென்ன வேலைகள் செய்தார்கள்? பணம் கிடைத்ததா? இல்லையா? இறுதியில் மட்டை பந்தாட்ட போட்டியை கண்டு களித்தார்களா? இல்லையா? என்பதுதான் கதை.

வைபவ் கிராமத்தில் நடக்கும் மட்டைப் பந்தாட்ட வீரராகவே திரையில் வாழ்ந்திருக்கிறார். அவரின் சுறுசுறுப்பும் பந்தை அடிக்கும் வேகமும் ரசிகர்களை கவர்கிறது. மட்டைப் பந்தாட்ட ரசிகர்களுக்கு

இப்படத்த்கை காணிக்கையாக்குகிறார் இயக்குநர் சவிர் சுதாகர். பெண்களுக்குறிய தனிதன்மையை விடுத்து, ஆண்களுக்கு சமமான ஒரு வாழ்க்கையை எப்படி வாழ்வதென்பதை, சூதாட்ட க் களத்தில் லாவண்யாவின் நடிப்பு வெளிப்படுத்த்குகிறது. (பெண்கள் அதிகம் வெறுப்பது சூதாட்டத்தைதான். ஆதலால் பெண்களை பெண்களாகவே காட்டுங்கள் இயக்குநரே). மட்டைப் பந்தாட்ட வீரர்களின் மீது

வெறித்தனமான பிரியம் வைப்பதிலிருந்து இளஞர்கள் மீளவேண்டுமென்பதை உச்சக்கட்ட காட்சியில் இயக்குநர் சவிர் சுதாகர் சொல்லியிருப்பது பாராட்டத்தக்கது. படத்தின் முதல் பகுதி கிராமத்து மட்டைப் பந்தாட்ட ரசிகர்களுக்கு விருந்து படைத்திருக்கும் இயக்குநர். இரண்டாம் பகுதியில் மட்டை பந்தாட்ட சூதாட்டத்துக்குள் இளைஞர்களை தள்ளியிருக்கிறார். அதை தவிர்த்திருக்கலாம். ஆனால் உச்சக்கட்ட காட்சியில்  மனசாட்சி பேசுகிறது. அதை வரவேற்க வேண்டும்.