ஜனநாயகன் திரைப்பட விமர்சனம்

வெங்கட் கே. நாராயணா தயாரிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே , பாபி தியோல், மமிதா பைஜீ , கெளதம் வாசுதேவன் மேனன், பிரகாஷ் ராஜ் , பிரியாமணி, நரேன். சுனில். ரேவதி. நிழல்கள் ரவி , ஜி.எம்.சுந்தர் , ஷரத் ரவி , அர்ஷத் ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் ஜனநாயகன் . அம்மா ரேவதியின் சாட்சியத்தால் சிறையில் அடைக்கப்பட்டிருந்த விஜய், சிறை கண்காணிப்பாளர் வாசுதேவ மேனனின் உதவியால் அம்மா ரேவதியின் இறப்புக்கு வெளியே வருகிறார். இதனால் வாசுதேவமேனன் இடைநீக்கம் செய்யப்படுகிறார். பிறகு ஒரு விபத்தில் சிக்கிய வாசுதேவமேனனை மருத்துவமனையில் சேர்கிறார் விஜய். அப்போது தனது மகள் பைஜியை வளர்த்து பெரியவள் ஆனதும் இராணுவ அதிகாரியாக வேலை பார்க்க வேண்டும் என்ற தனது இறுதி ஆசையை விஜய்யிடம் சொல்கிகிறார் . அதை நிறைவேற்றி வைப்பதாக வாசுதேவமேனனுக்கு சத்தியம் செய்து கொடுக்கிறார் விஜய். ஆனால் மமிதா பைஜி பெரியவளானதும் திருமணம் செய்துகொண்டு
குடும்பத் தலைவியாக வாழ ஆசைபடுகிறாள். சத்தியம் செய்து கொடுத்தபடி மமிதா பைஜியை விஜய் இராணுவ அதிகாரியாக மாற்றினாரா? இல்லையா” காவல்த்துறை அதிகாரியாக இருந்த விஜய் ஏன் சிறையில் அடைக்கப்பட்டார்? காவல்த்துறை உயர் அதிகாரியாக இருந்த பாபி தியோல் ஏன் வில்லனாக மாறினார்? என்பதை செல்கின்ற படம்தான் ஜனநாயகன்.

படத்தின் ஆரம்பத்தில் விஜய் சிறைக்குள் இருக்கிறார். அப்போது வெளியிலிருந்து ரவுடிகள் சிறைக்குள் புகுந்து அங்கு இருக்கும் ஒரு தொழில் அதிபரை கொலை செய்ய வருகிறார்கள் அந்த ரவுடிகளை விஜய் விரட்டியடிக்கும் காட்சி புதுமையாக இருக்கிறது . படத்தில் அளவுக்கு மீறிய சினிமாத்தனம் இருக்கிறது.விஜய்யின் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் விதமாகவே படம முழுவதும் சித்தரிக்கப்பட்டிருக்கிறது . விஜய்யின் நடிப்பு மெச்சத்தகுந்தது . சண்டைக் காட்சிகளில் அவரின் சுறுசுறுப்பு சற்றும் குறையவில்லை. அவர் வரும் காட்சிகள் அனைத்தும்
அவரது ரசிகர்ளையும் த.வெ.க.வின் கொள்கைகளையும் பறைசாற்றுகின்றது . மமிதா பைஜி விஜய்யை பற்றி கூறும்போது அதை ஒட்டு கேட்கிறார் விஜய் . அப்போது அவரது கண்கள் கலங்கி அழும் காட்சியில் பார்வையாளர்களின் கண்களும் ஈரமாகின்றது. அவ்வளவு தத்ரூபமாக தனது நடிப்பை வெளிப்படுத்தினார் . படம் முழுக்க கொலை கொலை கொலையை தவிர வேறு எதுவும் இல்லை. இது பார்வையாளர்களை சோர்வடைய செய்கிறது . ஆனால் பாடசாலையில் குழந்தைகளை பாலியில் சீண்டல்களிலிருந்து எப்படி பாதுகாப்பது என்பதை தாய்மார்களுக்கு ஒரு வகுப்பே நடத்தி பார்வையாளர்களின் கைத்தட்டலை வெகுவாக பெற்றுவிட்டார் விஜய். அத்துடன் பாலியல் தொல்லையிலிருந்து தங்களின் பாதுகாப்புத் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டுமென்று கூறுவது பாராட்டத்தக்கது . அரசியல்வாதியாக வரும் பிரகாஷ்ராஜ் வயலில் வேர்கடலை செடியை பிடிங்கி மண்ணுக்குள் இருக்கும் வேர்கடலையை தின்றுவிட்டு அதே செடியை வயலில் புதைத்து விட்டு திரும்பும் காட்சி மூலம் இன்றைய அரசியலின் அந்தரங்க சூழ்ச்சியை அம்பலபடுத்தியிருக்கிறார் இயக்குநர் வினோத். இதில் கதாநாயகி மமிதா பைஜிதான். உச்சக்கட்ட காட்சி சண்டையில் பார்வையாளர்களின் மனதில் தங்கிவிடுகிறார்.
பூஜா ஹெக்டே விஜய்யுடன் சேர்ந்தே பயணிக்கிறார் ஆனால் அவருக்கு அழுத்தம் இல்லாத கதாபாத்திரம். பிரியாமணி, நரேன். சுனில். ரேவதி. நிழல்கள் ரவி , ஜி.எம்.சுந்தர் , ஷரத் ரவி , அர்ஷத் அனைவரும் சிறிது நேரமே வந்தாலும் சிறப்பாக செய்து முடித்திருக்கிறார்கள். படத்துக்கு பக்கபலமாக இருந்தவர் இசையமைப்பாளர் அனிரூத்துதான் . பாடலும் பின்னணி இசையும் அரங்கத்தை அலற வைக்கின்றன. படத்தொகுப்பாளரின் கவனக்குறைவு படத்தில் தெரிகிறது. எங்கவீட்டுப் பிள்ளை படத்தின் எம்ஜிஆர் பாணியில் விஜய் சாட்டையை சுழற்றி நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால் இங்கு ஏழைகள் வேதனை படமாட்டார் என்ற பாட்டை பாடி எம்ஜிஆர் ரசிகர்களையும் கவர்ந்துவிட்டார் விஜய். குடும்ப அரசியலான மன்னர் ஆட்சி என்பதை பிரகாஷ்ராஜ் மூலம் பேசவைத்து அரசியல் சதுரங்கம் ஆடியிருக்கிறார் விஜய்.
————————————