மாரி செல்வராஜ் வழங்கும் புதிய திரைப்படம் ‘மாகாளி’. இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது. அமீர் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தை, மாரி செல்வராஜின் இணை இயக்குநரான எஸ்.பி.அரவிந்த் எழுதி இயக்குகிறார். சமூகத்தின் முக்கியமான ஒரு பிரச்சினையை அழுத்தமாகவும் தாக்கமிக்க வகையிலும் பேசும் படைப்பாக ‘மாகாளி’ உருவாகி வருகிறது. இப்படத்தை ஐங்கரன் இண்டர்நேஷனல் சார்பாக கே.கருணாமூர்த்தி – நவ்வி ஸ்டுடியோஸ் சார்பாக திவ்யா மாரி செல்வராஜ் மற்றும் மாரி செல்வராஜ் இணைந்து தயாரிக்கின்றனர். இப்படத்தில் அமீர், சுவாசிகா, அனிஷ்மா அனில்குமார், ஹரிஹரன், அஸ்வின் ராம் மற்றும் லெனின் பாரதி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.*******
மனித வாழ்வின் வலி, எல்லைகள் மற்றும் ஒரு ஆழமான சமூக அக்கறை கொண்ட அழுத்தமான கதைக்களத்தில் ரசிகர்களை நெகிழச் செய்யும் படைப்பாக உருவாகி வருகிறது. தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டிருக்கும் முதல் பதாகையில் விலங்கின் எலும்புக்கூட்டுக்குள் தனிமையில் நடந்து செல்லும் அமீரின் தோற்றம் மற்றும் இரண்டாம் பதாகையில் எங்கும் சிதறிக் கிடக்கும் விலங்குகளின் எலும்புக்கூடுகளுக்கு நடுவே ‘மாகாளி’ என்ற தலைப்பு இடம்பெற்றுள்ளது. இந்த பதாகைகளின் படத்தின் இருண்ட மற்றும் ஆழமான பின்னணியை வெளிப்படுத்துகிறது. வெறுமை, அழிவு, இயற்கையின் வலி மற்றும் சமூகத்தின் ஒரு மறைக்கப்பட்ட யதார்த்தம் போன்ற பல அடுக்குகளை உணர்த்தும் இந்தக் காட்சியமைப்பு, படத்தின் மீது கூடுதல் ஆர்வத்தையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இப்படத்திற்கு செல்வரத்தினம் பிரதீபன் ஒளிப்பதிவு செய்கிறார். செல்வா RK படத்தொகுப்பையும், ஜஸ்டின் பிரபாகரன் இசையையும் கவனிக்கின்றனர். ராமு தங்கராஜ் கலை இயக்கத்தையும், திலீப் சுப்பராயன் சண்டைப் பயிற்சியையும், வர்ஷினி சங்கர் ஆடை வடிவமைப்பையும் மேற்கொள்கின்றனர். சுரேன் ஜி மற்றும் அழகிய கூத்தன் ஒலி வடிவமைப்பிலும், கபிலன் விளம்பர வடிவமைப்பிலும், ஜெய்குமார் வைரவன் நிழற்படத்திலும், நாகேந்திரன் ஒப்பனையிலும் பணியாற்றுகின்றனர். வெங்கட் ஆறுமுகம் நிர்வாகத் தயாரிப்பாளராகவும், சதிஷ் மக்கள் தொடர்பு அதிகாரியாகவும் பணியாற்றுகிறார்.

