பனோரமா ஸ்டுடியோஸ் நிறுவனம், லோகோமோட்டிவ் குளோபல் நிறுவனத்துடன் இணைந்து, தமிழ் திரையுலகில் தனது முதல் திரைப்படத்தை தயாரிக்கிறது. ராஜா கிருஷ்ண மேனன் இயக்கும் இந்தப் புதிய உளவியல் திகில் திரைப்படத்தில் நடிகைகள் திரிஷா கிருஷ்ணன், ராதிகா சரத்குமார் மற்றும் அபர்ணா பாலமுரளி ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இன்னும் தலைப்பிடப்படாத இப்படம், டார்க் சைக்கலாஜிக்கல் ஜானரில் உருவாகிறது. இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.*******
தமிழ், மலையாளம் மற்றும் இந்தி திரையுலகில் தங்களது திறமையான நடிப்பால் கவனம் ஈர்த்த மூன்று முன்னணி நடிகர்கள் இப்படத்தில் ஒன்றிணைந்துள்ளனர். ‘96’, ‘விண்ணைத்தாண்டி வருவாயா’, ‘கில்லி’, ‘பொன்னியின் செல்வன்’ உள்ளிட்டப் பல படங்களில் தனது நடிப்பு திறனை நிரூபித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார் திரிஷா. ரசிகர்களால் ‘கலையரசி’ என அன்போடு அழைக்கப்படும் நடிகை ராதிகா சரத்குமார் பல தசாப்தங்களாக தனது சிறப்பான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். ’கிழக்கு சீமையிலே’, ’பசும்பொன்’, ’தங்க மகன்’, ’தெறி’ உள்ளிட்ட பல படங்களில் மறக்க முடியாத கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். அதேபோல் ‘சூரரைப் போற்று’, ’மகேஷிண்டே பிரதிகாரம்’, ’8 தோட்டாக்கள்’ உள்ளிட்ட படங்களில் தனது சிறப்பான நடிப்பை அபர்ணா பாலமுரளி பதிவு செய்துள்ளார்.
பனோரமா ஸ்டுடியோஸ் வழங்கும் இப்படம், லோகோமோட்டிவ் குளோபலுடன் இணைந்து ஃபியூஷன் பிலிக்ஸ் மற்றும் லோகோமோடிவ் குளோபல் புரொடக்ஷன் சார்பில் உருவாகிறது. இப்படத்தை குமார் மங்கத் பதக், அபிஷேக் பதக், சுந்தர் ஆரோன், விகாஸ் சர்மா மற்றும் அமித் தல்மியா ஆகியோர் தயாரிக்கின்றனர். ராஜேஷ் மேனன் மற்றும் ஜார்ஜ் கேமரூன் இணைத் தயாரிப்பாளர்களாகவும், அபினவ் மெஹ்ரோத்ரா கிரியேட்டிவ் தயாரிப்பாளராகவும் பணியாற்றுகின்றனர்.

