துல்கர் சல்மானின் ‘ஏ.ஓ.டி’ படத்தின் பாடல் வெளியீடு

நடிகர் துல்கர் சல்மானின் பிறந்தநாளை முன்னிட்டு “ஏ ஒ டி” திரைப்படக் குழுவினர்  அப்படத்தில் இடம்பெறும் முதல் பாடலான ‘மிட்டாய் மழை’ என்ற பாடலை வெளியிட்டுள்ளனர்.‌ ஜீ. வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள ‘மிட்டாய் மழை’ பாடல் கதையின் உணர்வு பூர்வமான சாராம்சத்தை அழகாக வெளிப்படுத்தும் ஒரு இனிமையான மெல்லிசை பாடல் ஆகும். கதாநாயகியின் பார்வையில் அமைக்கப்பட்ட இந்தப் பாடல்… நட்சத்திரங்களை தொடும் அவளது கனவையும், அவளை முன்னேற்ற தூண்டும் ஆணின் அமைதியான ஊக்கத்தையும் சித்தரிக்கிறது. காதலுக்கான வழக்கமான வரையறைகளை கடந்த ஒரு தனித்துவமான பிணைப்பிற்கு இது ஒரு நெகிழ்ச்சியான சமர்ப்பணமாக அமைந்துள்ளது.******

பாடலாசிரியர் பாலாஜி வேணுகோபாலின் வரிகளில்… பின்னணி பாடகி ரம்யா பெஹாரா பாடியுள்ள இந்தப் பாடல்… விடா முயற்சி- நம்பிக்கை மற்றும் ஒவ்வொரு கனவையும் முன்னெடுத்துச் செல்லும் அமைதியான ஆற்றல் – ஆகியவற்றை உணர்த்தும் கவித்துவமான உவமைகளால் மெருகூட்டப்பட்டுள்ளது.‌

துல்கர் சல்மான், சாத்விகா வீரவள்ளி,  ஸ்ருதிஹாசன் ஆகியோர் முதன்மையான வேடத்தில் நடித்துள்ள ‘ஆகாசம்லோ ஒக தாரா- திரைப்படத்தை பவன் சடினேனி இயக்கியுள்ளார். லைட் பாக்ஸ் மீடியா நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்கள் சந்தீப் குன்னம் மற்றும் ரம்யா குன்னம் ஆகியோர் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர். ஸ்வப்னா சினிமா மற்றும் கீதா ஆர்ட்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை வழங்குகின்றன.‌