ஜீவாவின் ‘தகப்பன்’ பட பதாகை வெளியீடு

ஜீவா நடிப்பில் லார்க் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் உருவாகி வரும் ‘தகப்பன்’ திரைப்படத்தின் முதல் பதாகை வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. ரா. வெங்கட் இயக்கத்தில் உருவாகும் இந்தப் படம், மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளை பின்னணியாகக் கொண்டு, அப்பா – மகன் உறவு, குடும்ப பாசம் மற்றும் மனித உணர்வுகளை மையமாகக் கொண்ட ஒரு ஆழமான குடும்பக் கதையாக உருவாகி வருகிறது. முழுக்க முழுக்க கிராமத்து பின்னணியில் ஜீவா நடிக்கும் திரைப்படமாக ‘தகப்பன்’ உருவாகி வருகிறது. இந்தப் படத்தில் நடிகை ரஜிஷா விஜயன் கதாநாயகியாக நடிக்கிறார். மார்ஷல் ராபின்சன் இசையமைக்கிறார். கே.குமார் தயாரிக்கும் இப்படத்திற்கு எம்.சுகுமார் ஒளிப்பதிவு செய்கிறார்.*******

வலுவான கதைக்களம், திறமையான நடிகர்கள், அனுபவமிக்க தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் தரமான தயாரிப்புடன் உருவாகி வரும் ‘தகப்பன்’, ஜீவாவின் திரைப்பயணத்தில் முக்கியமான மைல்கல் படமாக மட்டுமல்லாமல், தமிழ் சினிமாவில் பேசப்படும் குடும்ப உணர்வுப் படங்களில் ஒன்றாகவும் அமையும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும் ‘தகப்பன்’ திரைப்படத்தை இந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.