ஈரட் குமார தயாரிப்பில், மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் சூரி, மகிமா நம்பியார், சத்யராஜ், சுகாஸ், பாலசரவணன் ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “மண்டாடி”. ராமநாதபுரம் கடலில் பாய்மரக்கப்பல் போட்டி நடக்கிறது. இதில் நடிகர் சூரியின் முகவை அணியும், சுகாசின் சுனாமி அணியும் போட்டியில் மோதுகிறது. கடலில் 8 மைல் தூரத்திற்கு சென்று ஒரு குறிப்பிட்ட எல்லையை சுற்றி திரும்ப கரைக்கு வந்துசேர வேண்டும். முதலில் வருபவர் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார். அவருக்கு அந்த கிராமக்கள் கட்டுப்பட்டு நடக்க வேண்டும். இதுதான் விதிமுறை. இதற்குமுன் இதே கிராமத்தில் சத்தியராஜ் நடத்திவந்த “மண்டாடி” அணியில்தான் இப்போது எதிரிகளாக இருக்கின்ற சூரியும் சுகாசும் நண்பர்களாக இருந்தார்கள். பிற்காலத்தில் இவ்விருவர்களும் எதிரிகளாக மாறிவிட்டார்கள். அது ஏன்? என்பதுதான் கதை.
நகைச்சுவை நடிகராக அறியப்பட்ட சூரி, கடந்த மூன்று படங்களில் கதாநாயகனாக நடித்திருந்தார். இப்படத்தின் மூலம் அவர் உச்ச நட்சத்திர நடிகராக பரிணாம வளர்ச்சி பெற்றிருக்கிறார். அவரின் கடின உழைப்பு திரையில் நன்கு தெரிகிறது. துரோகத்த்கின் விரக்தியில் தவிக்கின்ற காட்சியிலும், மகிமாவிடம் மன்னிப்புக் கேட்கின்ற காட்சியிலும் பார்வயாளர்களின் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்க்கிறார். அனைத்துக்கும் முத்தாய்ப்பு வாய்த்ததுபோல் அமைந்திருப்பது உச்சக்கட்ட காட்சிதான். காட்டில் தனித்து வேட்டையாடும் சிங்கம் போல் சூரி நடித்து உச்சத்தை தொட்டிருக்கிறார். கடலில் காற்றின் வேகத்திற்கேற்ப பாய்மரத்தை சுழற்ற தனது அணியினருக்கு கட்டளையிடும் காட்சி கைத்தட்டவைக்கிறது. இப்படத்தில் மற்றோரு கதாநாயகன் ஒளிப்பதிவாளர் எஸ்.ஆர்.கதிர். கடல் காட்சிகளை தன் உயிரை பணையம் வைத்து படம் பிடித்திருக்கிறார். அதற்கு ஈடுகொடுத்து நடித்திருக்கிறார் சூரி. ஜி.வி.பிரகாசின் பாடல் தன்னையும் அறியாமல் தாளம்போட வைக்கிறது. கடல் காட்சிகளுக்கு உயிரோட்டமாக இருப்பது ஜி.வி.பிரகாசின் பின்னணி இசைதான். மொத்தத்தில் உச்சக்கட்ட காட்சி ரசிகர்களை சிலிர்க்க வைக்கிறது. வில்லத்தனத்தின் எல்லைவரை சென்றிருக்கிறார் தெலுங்கு நடிகர் சுகாஸ். சத்தியராஜ் அசால்ட்டாக வந்து நடித்துக் கொடுத்துவிட்டு போய்விட்டார். மகிமா நம்பியார், பாலசரவணன் நடிப்பில் குறையேதுமில்லை. கடலில் 8 மைல் தூரத்தில் நடக்கும் போட்டியை கரையிலிருந்து வர்ணனை செய்யும் சினிமாத்தனமும், கறுப்புச் சாயத்தில் குளித்தவர்கள் போல் இருக்கும் அரிதாரப்பூச்சும் படத்துக்கு பலவீனமாக இருந்தாலும், அதை உச்சக்கட்ட காட்சி மூலம் மறக்கடித்த இயக்குநர் மதிமாறன் புகழேந்தியின் தனித்துவ ஆற்றலை பாராட்டத்தான் வேண்டும். பழைய கதையொன்றை புதிய பாதையில் பயணிக்க வைத்திருக்கிறார் இயக்குநர் மதிமாறன் புகழேந்தி. அத்துடன் சூரிக்கு மணிமுடி சூட்டியிருக்கிறார்.

