“டோரதி” திரைப்பட விமர்சனம்

1980 ஆம் ஆண்டுகளில் மதுரையில் நடக்கும் கதை.ரிஷிகாந்த், சனந்த் ஆகிய இருவரும் சிறுவயதிலிருந்தே நண்பர்கள்.வயதுவந்த பிறகு அடிதடி, ஆர்ப்பாட்டம் என இருக்கிறார்கள். ஒருகட்டத்தில் பிரிகிறார்கள். பிறகு இருவரும் சந்திக்கும் சூழல் வருகிறது. அது அனைவருக்கும் அதிர்ச்சி தரக்கூடியதாக இருக்கிறது. அது என்ன?அதன்பின் என்ன? என்பதைச் சொல்வதுதான் டோரதி.

நாயகர்களாக நடித்திருக்கும் ரிஷிகாந்த், சனந்த் ஆகிய இருவரும் கோபம், வேகம், ஆக்ரோசம் என எல்லாவற்றையும் நன்றாக வெளிப்படுத்தியிருக்கிறார்கள். இருவரில் சனந்த்துக்கு ஏற்படும் உடல் மற்றும் உளரீதியான மாற்றங்களும் அவற்றை அவர் நடிப்பில் வெளிப்படுத்தியிருக்கும் விதமும் நன்றாக் உள்ளது. மாற்றத்துக்கு உள்ளான நண்பனை எதிர்கொள்ள முடியாமல் தவிக்கும் வேடத்தை ரிஷிகாந்த்தும் சிறப்பாகச் செய்துள்ளார்.
டோரதியாக நடித்திருக்கும் கீர்த்தி சுரேஷ், நாயகன் சனந்த்துக்கு அண்ணியாக அந்த குடும்பத்துக்குள் வருகிறார். அவருடைய காட்சிகள் குறைவு என்றாலும் தனது பங்களிப்பை
நிறைவாக செய்துள்ளார். சனந்த்தின் அப்பாவாக நடித்திருக்கும் முத்துக்குமாரின் வேடமும் அவர் நடிப்பும் மிக இயல்பாக இருக்கிறது. ராமச்சந்திரன்துரைராஜ், கஜராஜ். ராம்ஸ், ஜீவா, செளந்தரராஜா ஆகியோரும் தங்கள் பங்கை நிறைவாகச் செய்திருக்கிறார்கள். எண்பதுகளில் நடக்கும் கதை என்பதால் அக்காலகட்டத்தைத் திரையில் கொண்டுவர பாடுபட்டிருக்கிறார் ஒளிப்பதிவாளர் திரு. அவருடைய உழைப்பால் படம் பலம் பெற்றிருக்கிறது. இளையராஜா இசையமைத்திருக்கிறார். பாடல்கள் சுகம். பின்னணி இசை எப்படி இருக்கவேண்டும் என்கிற பாடத்தை இவரிடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்கிற கருத்தை வலுப்படுத்தும் விதமாக, காட்சி நடக்கும் களத்தின் சூழலையே பயன்படுத்தி பின்னணி இசைத்து வியக்க வைத்திருக்கிறார்.
படத்தைத் தொகுத்திருக்கும் கணேஷ் சிவாவுக்கு மிகவும் சவாலான பணியை திறம்படச் செய்து படத்தை குழப்பமின்றி கொண்டு சென்றிருக்கிறார். இப்படத்தின் கதையை சரவணன் சந்திரனும் கார்த்திக் சுப்புராஜும் இணைந்து எழுதியிருக்கிறார்கள். ஆணாதிக்கம், ஆணவக்கொலை ஆகியனவற்றிற்கு எதிராகப் பேசியிருக்கும் இயக்குநர்,அதை இன்று உலகளாவிய பேசுபொருளாக இருக்கும் ஒரு இயற்கைச் சிக்கலுடன் கலந்திருக்கிறார். இயக்குநரின் கற்பனைக் குதிரை கரடுமுரடான பாதையில் ஓடியிருக்கிறது.