ஜிஎம் மோர்கன் பிலிம்ஸ் தயாரிப்பில், ஆர். ராகவ் மிர்தாத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘டிரோன்ஸ்’ திரைப்படம் அக்.16ல் திரையரங்குகளில் வெளியாகிறது. சித்தி இத்னானி, அஞ்சலி நாயர், தேவதர்ஷினி, டிராவிட் செல்வம், குரேஷி, சினிமாவாலா சதீஷ், சசி செல்வராஜ், ஆர்.ஜே. தீபக் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படம், ஹாரர், ஃபேண்டஸி, சயின்ஸ் ஃபிக்ஷன் மற்றும் நகைச்சுவை அம்சங்களை உள்ளடக்கிய வித்தியாசமான படைப்பாக உருவாகியுள்ளது. வரும் அக்டோபர் 16-ம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது. ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் 2 படம் திரைக்கு வருகின்ற அதே நாளில் ‘டிரோன்ஸ்’. படமும் வெளிவருவதைக் குறித்து அப்படத்தின் கதாநாயகி சித்தி இத்னானி கூறியதாவது: “எங்கள் படத்தைப் பற்றிப் பேசுவதற்கு முன்பு, உங்கள் மனதில் ஒரு கேள்வி இருக்கும் என்று நினைக்கிறேன். இந்த ஆண்டின் மிகப்பெரிய வெளியீடுகளில் ஒன்றாக எதிர்பார்க்கப்படும் ரஜினிகாந்த் சாரின் படத்துடன், எங்களுடைய சிறிய படத்தை ஏன் வெளியிடுகிறார்கள் என்பதுதான் அந்தக் கேள்வி. ஆனால், உண்மையில் தலைவரின் படத்துடன் எங்களுடைய படமும் வெளியாவது எங்களுக்குப் பெருமையும் கௌரவமும் அளிக்கிறது. அவருடைய படத்திற்கு முன்னால் எங்களுடைய படம் ஒரு சிறிய புள்ளியாக இருந்தாலும், அதுவே எங்களுக்கு மிகப்பெரிய விஷயம். இது நவராத்திரி உள்ளிட்ட பண்டிகைகள் நிறைந்த காலம். குடும்பத்துடன் அமர்ந்து ரசிக்கக்கூடிய சிறிய, சுவாரஸ்யமான பொழுதுபோக்குப் படமாக ‘டிரோன்ஸ்’ இருக்கும் என்பதை உறுதியாகச் சொல்வேன்.********

எங்கள் தயாரிப்பாளர் ஜி. எம். மோர்கன் சார், ஒன்று முதல் நான்கு படங்கள் வரை மட்டுமே பணியாற்றியுள்ள எங்களைப் போன்ற புதிய கலைஞர்களை நம்பி இவ்வளவு பெரிய முதலீட்டைச் செய்திருக்கிறார். இந்த நவராத்திரியில் நான் கடவுளிடம் வேண்டிக்கொண்ட ஒரே விஷயம், அவர் முதலீடு செய்த பணத்தைத் திரும்பப் பெறுவதோடு லாபமும் சம்பாதிக்க வேண்டும் என்பதுதான். எங்களைப் போன்ற சிறிய படங்களுக்கு உங்கள் ஆதரவு மிகவும் அவசியம். பெரிய நட்சத்திரங்களின் படங்கள் வெற்றி பெறுவது வழக்கமான ஒன்றுதான். ஆனால், இயக்குநர் ராகவ் போன்ற படைப்பாளிகளுக்கும், ஜி. எம். மோர்கன் போன்ற தயாரிப்பாளர்களுக்கும் வாய்ப்பளித்து, அவர்கள் கடினமாக உழைத்துச் சம்பாதித்த பணத்தைப் புதிய திரைப்படங்களில் முதலீடு செய்ய ஊக்கமளிப்பதில் பத்திரிகையாளர்களுக்கும் ஊடக நண்பர்களுக்கும் முக்கியப் பங்கு இருக்கிறது.
இந்தப் படத்தில் என்னுடன் பணியாற்றிய தீபக், சதீஷ் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி. சினிமாவாலா சதீஷுடன் இணைந்து பணியாற்றியது மகிழ்ச்சியாக இருந்தது. அஞ்சலியுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை. இரண்டு நடிகைகள் நல்ல நண்பர்களாக இருக்க முடியும் என்பதற்கும் எங்கள் நட்பு ஓர் உதாரணம். ராகவ் மிகவும் திறமையான இயக்குநர் என்பது அனைவருக்கும் தெரியும். அவர் சூர்யா சாரின் படத்திற்கும் எழுதி வருகிறார். குரேஷி விஜய் தொலைக்காட்சியில் சிறப்பான பணிகளைச் செய்திருக்கிறார்; தற்போது பல படங்களிலும் நடித்து வருகிறார். நகுல், சதீஷ் உள்ளிட்ட பலரும் இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ளனர். சமூக வலைதளங்களில் பிரபலமானவர்களும் இந்தப் படத்தில் இணைந்திருப்பது சிறப்பு. இங்கே இருக்கும் ஆர்.ஜே. தீபக்கிற்கு இரண்டு மில்லியனுக்கும் அதிகமான பின்தொடர்பாளர்கள் இருக்கிறார்கள். இது போன்ற உண்மையான, இயல்பான மனிதர்களை ரசிகர்கள் பார்க்க விரும்புகிறார்கள் என்பதையே இது காட்டுகிறது.
இறுதியாக, இங்கு வந்திருக்கும் அனைவருக்கும் நன்றி. எங்கள் ‘டிரோன்ஸ்’ திரைப்படத்திற்கு நீங்கள் அனைவரும் ஆதரவு கொடுக்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். உங்கள் ஆதரவு எங்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியைத் தரும். மிக்க நன்றி”.

