புதிய சிந்தனைகளுடன் உருவாகிறது ‘மந்திரா ஸ்டுடியோஸ்’

தமிழ் திரையுலகில் புதிய முயற்சிகளையும், புதுமையான கதை சொல்லும் முறைகளையும் ஊக்குவிக்கும் நோக்கில், தயாரிப்பாளர் ஆர்.டி. ராஜா புதிய தயாரிப்பு நிறுவனமான ‘மந்திரா ஸ்டுடியோஸ்’ குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த நிறுவனத்தின் மூலம் வழக்கமான திரைப்பட உருவாக்க முறைகளைத் தாண்டி, புதிய தொழில்நுட்பங்களுடன் தனித்துவமான படைப்புகளை உருவாக்கத் திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். 33 ஆண்டுகால அனுபவம் கொண்ட கலை இயக்குநரான டி. முத்துராஜ், தற்போது இயக்குநர் மற்றும் தயாரிப்பாளராகத் தனது புதிய பயணத்தைத் தொடங்கியுள்ளார்.*******

அவர் இயக்கி, தயாரிக்கும் ஹைப்பர் ரியலிஸ்டிக் டிஜிட்டல் ஹைப்ரிட் ஃபீச்சர் ஃபிலிம் (HYPER – REALISTIC DIGITAL -HYBRID FEATURE FILM), மெய்நிகர் தொழில்நுட்பத்தையும் புதுமையான காட்சியமைப்பு முறைகளையும் இணைத்து உருவாகி வருகிறது. இந்நிலையில், டி. முத்துராஜின் இந்தப் புதிய முயற்சி குறித்துப் பேசிய தயாரிப்பாளர் ஆர்.டி. ராஜா, அவருடன் கடந்த ஏழு ஆண்டுகளாக இணைந்து பணியாற்றி வருவதாகவும், அவரது இந்தப் புதிய முயற்சி தனக்குப் பெருமகிழ்ச்சி அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

‘மந்திரா ஸ்டுடியோஸ்’ என்பது வெறும் திரைப்படத் தயாரிப்பு நிறுவனம் மட்டுமல்ல. புதிய சிந்தனைகளுக்கும், புதுமையான கதை சொல்லும் முயற்சிகளுக்கும், எல்லைகளைக் கடந்து கற்பனை செய்யும் படைப்பாளிகளுக்கும் வாய்ப்பளிக்கும் தளமாக இது அமையும். வழக்கமான திரைப்படம் உருவாக்கும்   முறைகளைத் தாண்டி, தனித்துவமான சிந்தனைகளை ஊக்குவிப்பதும், புதிய காட்சியுலகை உருவாக்குவதும் இந்நிறுவனத்தின் முக்கிய நோக்கமாக இருக்கும் என ஆர்.டி. ராஜா குறிப்பிட்டுள்ளார்.