வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கையாக ஆற்றுப்படுகையை செங்கல்பட்டு ஆட்சித் தலைவர் டாக்டர் மு.வீரப்பன், செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் சௌ.தியாகராஜன் முன்னிலையில், நந்திவரம்- கூடுவாஞ்சேரி நகராட்சி, மண்ணிவாக்கம், ஊரப்பாக்கம், முடிச்சூர், தாம்பரம் மாநகராட்சி ஆகிய பகுதிகளில் அடையார் ஆறு செல்லும் வழிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதை தடுக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகளை நேரில் ஆய்வு செய்தார். அடையாறு ஆறு, சென்னை மாநகரின் முக்கியமான வடிகால் நீர்வழிகளில் ஒன்றாகவும், இந்த ஆற்றின் நீர்பிடிப்பு பகுதி செங்கல்பட்டு மாவட்டத்தில் பெருமளவில் உள்ளதால் வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு, செங்கல்பட்டு மாவட்டத்திற்குட்பட்ட அடையாறு ஆறுசெல்லும் வழிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு மேற்கொண்டார். அவ்வாறாக, நந்திவரம்- கூடுவாஞ்சேரி நகராட்சிக்குட்பட்ட அடையாறு ஆறு துவங்கும் பகுதியில் கூடுவாஞ்சேரி ஏரியின் உபரிநீர் வெளியேற்றும் தடுப்பணை மற்றும் சிற்பி நகரில் அடையாறு ஆறு செல்லும் வழியில் சிற்பி நகர் சிங்காரம் நகரினை இணைக்கும் வகையில் ரூ.1.20 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலம் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்து, பணியினை விரைந்து முடித்து அடையாற்றில் மழை நீர் சேரும் வகையில் சிற்பி நகர் மற்றும் சிங்காரம் நகர் பகுதிகளில் மழை நீர் வடிகால் கட்டமைப்பை ஏற்படுத்திட நகராட்சி அலுவலருக்கு உத்தரவிட்டார்.
தொடர்ந்து, மண்ணிவாக்கம் ஊரப்பாக்கம் கிராம எல்லை தொடங்கும் பகுதியில் செல்லும் அடையாறு ஆற்றில் மேற்கொள்ளப்பட்டுள்ள வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை பணிகள், மண்ணிவாக்கம், அண்ணா நகர் பகுதி வழியாக செல்லும் அடையாறு ஆற்றில் தூர் வாருதல் பணி, முடிச்சூர், இராயப்பா நகர் வழியாக செல்லும் அடையாறு ஆற்றில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை பணிகள், கிஷ்கிந்தா சாலையில் பாப்பன் கால்வாய் அடையாறு ஆற்றில் சந்திப்பாகும் பகுதி மற்றும் திருநீர்மலை பகுதியில் உள்ள அடையாற்றில் செம்பரம்பாக்கம் ஏரி, உபரி நீர் இணையும் பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்த மாவட்ட ஆட்சித் தலைவர் கடந்த காலங்களில் இப்பகுதிகளில் ஏற்பட்டுள்ள வெள்ளபாதிப்புகள் குறித்தும், அதன் தொடர்பாக மேற்கொள்ள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை பணிகளையும் நீர்வளத்துறை அலுவலர்களிடம் கேட்டறிந்து ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வுன்போது, அடையாறு ஆறு செல்லும் வழிகளில் ஆற்றில் வளர்ந்துள்ள களைகள் மற்றும் புதர்களை அகற்றுதல், கழிவுப்பொருட்களை அகற்றுதல், நீர்வழிப்பாதையில் உள்ள தடைகளை நீக்குதல், மழைக்காலத்தில் வெள்ளநீர் தடையின்றி செல்ல வழிவகை செய்தல் உள்ளிட்ட பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டுமென நீர்வளத்துறை அலுவலர் மற்றும் நகராட்சி அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின்போது நகராட்சி ஆணையர் லதா, நகராட்சி பொறியாளர் கோவிந்தராஜ், செங்கல்பட்டு பாசனப் பிரிவு நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் பாஸ்கரன், உதவி பொறியாளர்கள் விஷ்ணு பிரபு,.மகேஸ்வரன் வட்டாட்சியர் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

