“ப்ளாஸ்ட்” திரைப்பட விமர்சனம்

ஏ.ஜி.எஸ் திரைப்பட நிறுவனம் தயாரிப்பில், சுபாஷ் கே. ராஜ் இயக்கத்தில், அர்ஜூன், அபிராமி, பிரித்தி முகுந்தன், விவேக் பிரசன்னா, ஜான் கொக்கேன், அர்ஜூன் சிதம்பரம், பவண், பாலா ஹாசன், வினோத் சாகர் ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “ப்ளாஸ்ட்”. அர்ஜூன் ஒரு பாடசாலையில் கராத்தே பயிற்சியாளராக இருக்கிறார். அவரது மகள் பிரித்திக்கு சிறுவயது முதலே கராத்தே கற்றுக் கொடுத்து தப்பு எங்கு நடந்தாலும் அதை தட்டிக் கேட்க வேண்டும் என்ற சமூக அக்கறையுடன் வளர்த்து வருகிறார். பிரித்தி பெரியவளாக ஆனதும் ஒரு தொழில் நுட்ப அலுவலகத்தில் வேலை பார்க்கிறார். அந்த அலுவலகத்தில் உயர்பதவியிலிருக்கும் பெண்ணாசை பிடித்த அதிகாரிகளை கராத்தே பாணியில் பந்தாடுகிறார். இதனால் அந்த அலுவலகத்தில் வேலை பார்க்கும் இளம் பெண்கள் நிம்மதியடைகிறார்கள். அர்ஜூனனின் மனைவி அமிராமி குடும்பத்தலைவியாக இருப்பதால் திருமண வயதிலிருக்கும் தன் மகள் பிரித்தி பொதுமக்களின் நலனுக்காக சண்டையிடுவதை விரும்பவில்லை. அதனால் மகளுக்கு மாப்பிள்ளை தேடுகிறார். இது ஒருபுறம் இருக்க,  ஒரு மலைக்கிராமத்தில் பூமிக்கடியில் 1500 அடிக்கு கீழ் இருக்கும் கனிமவளங்களை தோண்டி எடுக்க ஜான் கொக்கேன் ஒரு அமைசாரின் உதவியுடன் முயற்சி செய்கிறார். அப்படி பூமிக்குள் 1500 அடி தோண்டினால் பூமி அதிர்ந்து மண் சரிந்து அந்த கிராமமே பூமிக்குள் புதைந்துவிடும் அபாயமும் இருக்கிறது. இதுபற்றி கவலை படாமல் அதற்கு அனுமதி வழங்க, ஆயிரம் கோடி ரூபாயை  வனத்துறை அமைச்சரின் அந்தரங்க வங்கிக் கணக்குக்கு அனுப்ப, சட்டவிரோத பணப்பரிவர்தினை செய்பவருக்கு அந்த ஆயிரம் கோடி பணம் அனுப்பி வைக்கப்படுகிறது. ஆனால் அந்த பணம் அமைச்சரின் வங்கிக் கணக்குக்கு வந்துசேரவில்லை. ஏன் பணம் வந்துசேரவில்லை? அந்த பணம் என்னானது?. என்பது மறுபுரமிருக்க, இதில் எதிலும் சம்பந்தப்படாமலிருக்கும் அர்ஜூன், அவரின் மனைவி அபிராமி, மகள் பிரீத்தி ஆகியோர் ஜான் கொக்கேனின் அடியாடகள் ஐந்து பேர்களை கொலை செய்கிறார்கள்? இவர்கள் ஏன் அடியாட்களை கொலை செய்யவேண்டும்? அந்த கொலைக்குற்றத்திலிருந்து அர்ஜூன் தப்பித்தாரா? இல்லையா? என்பதுதான் மீதிக்கதை. படம் ஆரம்பம் முதல் இறுதிவரை விறுவிறுப்பாக இயக்கியிருக்கிறார் இயக்குநர் சுபாஷ் கே.ராஜ். இப்படத்துக்கு இவர் ஒரு அறிமுக இயக்குநர் என்ற அடையாளமே தெரியாத அளவுக்கு கோலிவுட் தரத்தில் படத்தை இயக்கியிருக்கிறார். திரைக்கதை ஓட்டத்திற்கு படத்தொகுப்பாளர் பிரதீப் இ ராகவ்வின் திறமை முக்கிய காரணமாகும். மேடு பள்ளம் இல்லாத சாலையில் வாகனம் ஓடுவதுபோல் படத்தை ஓட வைத்திருக்கிறார் படத்தொகுப்பாளர். அர்ஜுனனின் நடிப்புக்கு அளவு சொல்லிவிட முடியாது. ஜெண்டில்மேன் படத்தில் நடித்த அதே சுறுசுறுப்பு குறையாமல் இப்படத்திலும் காணமுடிகிறது. கராத்தேயின் இலக்கணம் பிரீத்தியும் அபிராமியும் எதிரிகளோடு மோதும்  கராத்தே சண்டையில் மிளிர்கின்றன. ஒளிப்பதிவாளர் அருண் ராதாகிருஷ்ணனும் இசையமைப்பாளர் ரவி பாஸ்ரூரரும் ஒருவர்கொருவர் குறைவின்றி படத்துக்கு வேலை செய்திருக்கிறார்கள். படத்தின் இரண்டாம் பாகத்திற்கு வேலை வைத்திருக்கிறார் இயக்குநர் சுபாஷ் கே.ராஜ். கராத்தே வீரர்களுக்கு இப்படம் ஒரு தெம்பையும் உந்துதலையும் கொடுக்கும்.