திவ்ய சேத்ரா பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பில் நிர்மலா ராஜன் வழங்க சி.ஆர்.ராஜன் தயாரிப்பில், இயக்குனர் அருள் கிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் “அமரம்”. இப்படத்தில் தேஜஸ் ராஜன் கதாநாயகனாக நடித்துள்ளார். கதாநாயகியாக ஐரா அகர்வால் நடித்துள்ளார். மற்றும் ஜார்ஜ், சாய் தீனா, நாகிநீடு, கல்கி ராஜன், ஹரிஷ் பெராடி, வாசுதேவன் முரளி ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தின் இசை வெளியீட்டு நிகழ்வில் இயக்குநர் அருள் கிருஷ்ணன் பேசியதாவது: “என்னுடைய திரைப்பயணம் என்பது மிக நீண்ட பயணம். நான் சினிமாவில் நீண்ட காலமாக இருந்து வருகிறேன். என்னுடைய ஊரிலிருந்து இதுவரை யாரும் சினிமாவிற்குள் வந்ததில்லை. எனது ஊருக்கு சினிமா என்பது புதிதான விஷயம். நான் கே.எஸ். ரவிக்குமார், ஷங்கர் சார் போன்றவர்களைப் பார்த்துதான் படத்துறைக்குள் வந்தேன். அவர்களைப் போல் படங்களை உருவாக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை.*******
தமிழ் சினிமா இந்திய அளவில் பல்வேறு துறைகளிலும் சிறந்து வருகிறது. தேசிய விருதுகள் பெறுவதிலும், எமோஷனல் படங்களை உருவாக்குவதிலும் நாம் முன்னணியில் இருக்கிறோம். ஆனால் ஆக்ஷன் படங்களைப் பொறுத்தவரை சில விஷயங்களை நாம் தவறவிட்டு வருகிறோம். அதனால், ஆக்ஷன் படத்தை மையமாக வைத்து, ‘கே.ஜி.எஃப்’ போன்ற படங்களைப் பார்த்து, அதனால் இன்ஸ்பயர் ஆகி, அதுபோன்ற ஒரு மிகச்சிறந்த திரைக்கதையை உருவாக்க வேண்டும் என்று நினைத்தேன். ஆக்ஷன் படங்களுக்கு மிகச்சிறந்த திரைக்கதை மிகவும் முக்கியம். ஆனால் அந்தப் படத்தை உருவாக்குவதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டதால் அந்த முயற்சியில் இருந்து விலக வேண்டிய சூழல் ஏற்பட்டது. பின்னர் என்னுடைய மேனேஜர்கள் மூலம் வேறு சில கதைகளைச் சொல்லியிருந்தேன். அப்போதுதான் இந்தப் படத்தின் தயாரிப்பாளர் இந்தக் கதையைக் கேட்டு, ‘இதை நாம் தயாரிக்கலாமே’ என்று கூறினார்.
இந்நிகழ்வினில் தயாரிப்பாளர் C.R. ராஜன் பேசியதாவது.. ‘அமரம்’ திரைப்படத்தை வாழ்த்த வந்த அனைவருக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். எல்லோரும் ஒரு நல்ல படத்தை உருவாக்க வேண்டும் என்றுதான் ஆசைப்படுவார்கள். ஆனால் அதற்கு கலைஞர்களின் உழைப்பும் அர்ப்பணிப்பும் அமைய வேண்டும். அது சில படங்களுக்கு மட்டுமே அமையும். அந்த வகையில், ‘அமரம்’ படத்திற்கு அத்தகைய சிறப்பான உழைப்பும் அர்ப்பணிப்பும் அமைந்துள்ளது. இயக்குநர் அருள் கிருஷ்ணன், இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர், எடிட்டர் என ஒவ்வொரு துறையிலும் பணியாற்றிய அனைவரும் பணத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் மிகுந்த அர்ப்பணிப்புடன் உழைத்துள்ளனர். அவர்களுடைய உழைப்பினால்தான் இந்தப் படம் சாத்தியமாகியுள்ளது.

