ஆர்.ரவிந்திரன் தயாரிப்பில் கிஷோர் குமார் இயக்கத்தில் சனத், மடோனா செபஸ்டியான், இமயா, மணி ஆகியிரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “ஹார்ட்டின்”. பெரும் செல்வந்தரின் மகளான இமயாவை நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த சனத் காதலிக்கிறார். இமயா மீது அளவு கடந்த்க பாசத்தை பொழிகிறார் சனத். அதிக இனிப்பே உயிரைக் கொல்லும் என்பதுபோல, சனத்தின் அளவு கடந்த பாசத்தால் இமயா மற்ற வேலைகளில் கவனம் செலுத்த முடியவில்லை. அதனால் தற்காலிகமாக காதல் உறவை முறித்த்குக் கொண்டு இமயா ஊட்டிக்கு சென்றுவிடுகுறார். சனத் சென்னைக்கு வந்து விடுகிறார். சென்னையில் சனத்துக்கு அவரின் பெற்றோர்கள் மடோனாவை நிச்சயம் செய்து விடுகிறார்கள். இருவரும் ஒருவருக்கொருவர் நட்பாக பழகி கோயிலில் திருமணமும் செய்து கொள்கிறார்கள். இருவரும் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு வரும்போது விபத்து நடக்கிறது. அந்த விபத்தில் மனைவி மடோனாவை சனத் மறந்து விடுகிறார். அவரின் நியாபகத்தில் இப்போது இமயாவுடன் பழகிய அந்த காதல் நாட்கள்தான் இருக்கிறது. இமயாவை சனத் சந்தித்துப்பேசினால்தான் பழைய நிலைக்கு சனத் திரும்புவார் என்று மருத்துவர்கள் கூறிவிடுகிறார்கள். ஆதலால் இமயாவை பார்க்க சனத்தும் மடோனாவும் ஊட்டிக்கு செல்கிறார்கள். ஊட்டியில் என்ன நடந்தது. இமயா சனத்தை திரும்பவும் ஏற்றுக் கொண்டாரா? இல்லையா? மடோனாவின் திருமணம் என்ன ஆனது என்பதுதான் கதை.
நாயகனுக்கு, இரண்டு நாயகிகள் இரண்டுவிதமான காதல்களை செய்யும் வேடம்.எனவே நாயகன் சனத்,உற்சாகமாக நடித்திருக்கிறார். கலகலப்பு, உற்சாகம், சோகம் ஆகிய எல்லா உணர்ச்சிகளையும் வெளிப்படுத்தக்கூடிய வேடமேற்று சரியாகச் செய்திருக்கிறார். நாயகி இமயாவுக்கு முதல் படத்திலேயே கனமான வேடம் அமைந்திருக்கிறது. அனுபவ நடிகைபோல் நடித்திருக்கிறார். அவருக்கு நல்ல எதிர்காலம் காத்திருக்கிறது. மடானோ செபஸ்டியனுக்கு எதார்தத்துக்கும் உணர்வுப்பூர்வத்துக்கும் இடையே சிக்கித் தவிக்கும் வேடம். நன்றாக நடித்து நல் வரவேற்புப் பெறுகிறார். நாயகனின் நண்பராக நடித்திருக்கும் வாட்ஸ்-அப் மணி குணச்சித்திர வேடத்துடன் நகைச்சுவையாகவும் நடித்திருக்கிறார். அங்கங்கே சிரிக்க வைக்கிறார். அவரது மனைவியாக நடித்திருக்கும் டெப்னிதாவும் நன்று. ஒளிப்பதிவாளர் முகேஸ்வரன்.வி, ஜெய்ப்பூர் மற்றும் ஊட்டி ஆகிய மாறுபட்ட களங்கள் அமைந்ததால் உற்சாகமாகப் பணியாற்றியிருக்கிறார். அதனால் காட்சிகள் இதமாக அமைந்திருக்கின்றன.
ராஜேஸ் முருகேசனின் இசையில் மெல்லிசைப் பாடல்கள் எல்லாம் நல்லிசைப் பாடல்களாக அமைந்திருக்கின்றன. பின்னணி இசையும் காதல் உணர்வுகளை வெளிப்படுத்துகின்றன. இதுவரை எந்த இயக்குநரும் யோசிக்காத ஒரு கதையை தேர்ந்தெடுத்து திரையில் தன் கற்பனையை ஓடவிட்டிருக்கிறார் இயக்குநர் கிஷோர்குமார்.

