“ஜெடூசி” திரைப்பட விமர்சனம்”

நட்ராஜ் ஏகாம்பரம் இயக்கத்தில் ஶ்ரீதர், ஸ்வேதா ஸ்ரிம்ப்டன் ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “ஜெடூசி” (கொண்டை ஊசி). மர்மக் கொலைகளை மையமாகக் கொண்டு தொடங்கி, மனித வாழ்க்கையின் வலிகளையும் சமூகத்தில் நிலவும் அவலங்களையும் பேசும் படமாக உருவாகியுள்ளது. தொடர்ச்சியாக நடைபெறும் மர்மக் கொலைகள், அவற்றைச் சுற்றி எழும் சந்தேகங்கள், காவல்துறையின் தீவிர விசாரணை என ஆரம்பத்திலேயே கதைக்குள் பார்வையாளர்களை அழைத்துச் செல்கிறது திரைக்கதை. ஒவ்வொரு சம்பவத்திற்குப் பின்னாலும் ஒளிந்திருக்கும் உண்மையைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தைத் தூண்டும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. படம் முழுவதும் குற்றச் சம்பவங்களையும் மர்மங்களையும் மட்டுமே முன்னிறுத்தவில்லை. இரண்டாம் பாதியில் மலைக்கிராமத்தின் இயற்கைச் சூழலுக்குள் பயணிக்கும் கதை, அங்குள்ள மனிதர்களின் வாழ்க்கை, குடும்ப உறவுகள், அன்பு, பாசம் என முற்றிலும் வேறொரு உணர்வைத் தருகிறது. இந்த மாற்றம் படத்தின் முக்கியமான சிறப்பம்சமாக அமைகிறது. சக்தி கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஸ்ரீதர், கதையின் மையத்தைத் தாங்கிச் செல்லும் வகையில் தனது நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். கோபம், வேதனை, பாசம், மன உளைச்சல் என ஒவ்வொரு உணர்வுக்கும் ஏற்ற நடிப்பை வழங்கி கவனம் ஈர்க்கிறார். காவேரியாக நடித்துள்ள ஸ்வேதா ஸ்ரிம்ப்டன், கதாபாத்திரத்தின் இயல்பையும் உணர்ச்சிகளையும் அழகாக வெளிப்படுத்தியுள்ளார். அவரது எதார்த்தமான நடிப்பு கதைக்கு வலு சேர்க்கிறது. அனு கதாபாத்திரத்தில் நடித்துள்ள சினி யுதனும் தனது பங்கைச் சிறப்பாகச் செய்துள்ளார். சின்னா கதாபாத்திரத்தில் பிளாக் பாண்டி தனது இயல்பான நடிப்பால் காட்சிகளுக்குத் தேவையான கலகலப்பையும் உயிரோட்டத்தையும் கொடுத்துள்ளார். கொம்பனாக வரும் பாவா செல்லதுரை, வள்ளியாக வரும் ஜெயந்திமாலா ஆகியோர் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களை அனுபவமிக்க நடிப்பால் சிறப்பித்துள்ளனர். வில்லன் ஜெயப்பி காஷ் கதாபாத்திரத்தில் ஏ.வெங்கடேஷ் தனது நடிப்பால் கவனம் பெறுகிறார். டி.எஸ்.பி. விக்ரமாக அருவி மதனும், கண்ணபிரானாக அசோக் பாண்டியனும் கதையின் ஓட்டத்திற்கு ஏற்ற வகையில் தங்களது பங்களிப்பை வழங்கியுள்ளனர். இயக்குநரும் தயாரிப்பாளர்களில் ஒருவருமான நட்ராஜ் ஏகாம்பரம், கதையை மர்மம், உணர்வு, சமூகச் சிந்தனை என மூன்று தளங்களில் பயணிக்கச் செய்துள்ளார். குறிப்பாக, முதல் பாதியின் பரபரப்புக்கும் இரண்டாம் பாதியின் உணர்ச்சிகரமான அணுகுமுறைக்கும் இடையே வித்தியாசத்தை உருவாக்கியிருப்பது கவனிக்கத்தக்கது. இசையமைப்பாளர் விக்னேஸ்வரன், கதையின் சூழலுக்கு ஏற்ற இசையின் மூலம் காட்சிகளின் உணர்வுகளை மேலும் வலுப்படுத்தியுள்ளார். ஒளிப்பதிவாளர் நாகஅர்ஜுன் மலைப்பகுதிகளின் இயற்கை அழகையும் கிராமப்புற வாழ்க்கையின் எதார்த்தத்தையும் அழகாகத் திரையில் பதிவு செய்துள்ளார். மர்மம் நிறைந்த காட்சிகளிலும் இயற்கை எழில் கொஞ்சும் பகுதிகளிலும் அவரது ஒளிப்பதிவு தனித்துவமாகத் தெரிகிறது. கதை, திரைக்கதை, வசனம் மற்றும் இயக்கம் எனப் பொறுப்பேற்றுள்ள நட்ராஜ் ஏகாம்பரம், வித்தியாசமான கதைக்களத்தைத் தேர்ந்தெடுத்து அதைத் திரையில் கொண்டு வந்துள்ளார். சில இடங்களில் திரைக்கதையின் வேகத்தில் தொய்வு ஏற்பட்டாலும், கதையின் அடிப்படை நோக்கமும் உணர்ச்சிகரமான முடிவும் படத்தைத் தொடர்ந்து கவனிக்க வைக்கின்றன. மக்கள் தொடர்புப் பணிகளைச் சரண் மேற்கொண்டுள்ளார். ஜெடூசி’ ஒரு சாதாரண கொலை மர்மத் திரைப்படமாகத் தொடங்கினாலும், அதன் பின்னணியில் மனிதர்களின் வாழ்க்கை, அவர்களுக்கு ஏற்படும் அநீதிகள், மனதில் தேங்கும் வலிகள் மற்றும் சமூகத்தின் மீதான கேள்விகள் எனப் பல விஷயங்களைப் பேசுகிறது. படம் ஆரம்பம் முதல் இறுதிவரை ஒரே நேர்கோட்டில் திரைக்கதை பயணிப்பது படத்தை ரசிக்க வைக்கிறது