“ஜென்டில்வுமன் ” திரைப்படம் மார்ச் 7 ல் வெளியீடு

கமலா ஹரி மற்றும் ஒன் ட்ராப் அக்கன் பிக்சர்ஸ்  தயாரிப்பில்,  ஜோஷ்வா சேதுராமன் இயக்கத்தில், லிஜோமோல் ஜோஷ், லாஸ்லியா, ஹரி கிருஷ்ணன் முதன்மைப் பாத்திரங்களில் நடிக்க, சமூகத்தில் குடும்ப அமைப்பை பெண்களின் பங்களிப்பை கேள்வி கேட்கும், சமூக அக்கறை மிக்க படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் “ஜென்டில்வுமன் ”. மார்ச் 7ல்  திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை மற்றும் காணொளி வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் இயக்குநர் ஜோஷ்வா சேதுராமன் பேசியதாவது: சினிமா மீது நான் வைத்த காதல்தான் இந்தத் திரைப்படம். 19 நாளில் படத்தை முடிக்க முடியும் எனத்  திட்டமிட்டது நான் அல்ல, அது என் திட்டம் அல்ல,  அது நடக்கக் காரணம் என்னுடைய படக் குழுவினர் தான், எனக்காக என்னை நம்பி உழைத்தார்கள். அதனால் தான் இது நடந்தது. சென்சாரின் போது, ராஜுமுருகன் அண்ணன் தான் அறிவுரை சொன்னார், அவர் அறிவுரையால் தான் சென்சார் முடித்தேன். *******

இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தாவைப் பற்றிச் சொல்ல வேண்டும், அவரது இசை இந்த படத்திற்கு மிகப்பெரிய பலமாக இருக்கும், கிட்டத்தட்ட 20 நிமிட காட்சிகள் வெறும் இசையில் மட்டுமே நகரும். அற்புதமாக இசையமைத்துள்ளார்.  ஆர்ட் டைரக்டர் அமரன் 20 நாட்களும் என்னுடன் இருந்தார். எடிட்டர் இளையராஜா சேகர், அவரை நான் நிறைய டார்ச்சர் செய்துள்ளேன், ஆனால் அதைத்தாண்டி என்னுடன் நின்றார். இந்தக்கதை  எழுதியவுடன் இதை லிஜோ மோலிடம் சொல் என்றார் யுகபாரதி அண்ணன். அவரிடம் இந்த கதையைச் சொன்ன போது, அவர் ஒரு கேள்வி கேட்டார் அந்த கேள்விதான் படம் பார்க்கும்போது ரசிகர்கள் கேட்பார்கள், அதன் பதில் சொன்னவுடன் அவர் ஒத்துக்கொண்டார்.  லாஸ்லியா எனக்குப் பழக்கம். நான் இந்தக்கேரக்டர் சொல்லி அனுமதி எல்லாம் கேட்காமல், நடிக்கக் கூப்பிட்டேன், அவர் என்னை நம்பி வந்தார். ஹரியைப்  படப்பிடிப்பிற்கு மூன்று நாட்கள் முன் தான் கூப்பிட்டேன், எனக்காக வந்தார். தயாரிப்பாளர்கள் பற்றி சொல்ல வேண்டும், என்னிடம் இந்தப்படத்தில் காமெடி கமர்ஷியல் இருக்கிறதா? என எதுவும் கேட்கவில்லை நான் கேட்ட அனைத்தும் தந்தார்கள். நேதாஜி அண்ணன் மூலம் தான் தயாரிப்பாளர்கள் அறிமுகம், அவருக்கு நன்றி. இந்தப்படம் கண்டிப்பாக உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் நன்றி.

தயாரிப்பாளர் லியோ பேசியதாவது.. ஜென்டில்வுமன் கதையை ஜோஷ்வா சொன்ன போது, இப்படத்தில் அழுத்தமான கதை இருப்பது புரிந்தது. மிகத் தெளிவாக சமூகம் தெரிந்து கொள்ள வேண்டிய கருத்து கதையிலிருந்தது. இந்தக்கதை பிடித்து எதையும் யோசிக்காமல் தயாரிக்க முன் வந்த தயாரிப்பாளர்கள் ஹரி பாஸ்கர், கோமளா மேடம் இருவருக்கும் நன்றி. இப்படத்தைப் புரிந்து கொண்டு, உழைப்பைத் தந்த கலைஞர்கள், நடிகர்கள் லிஜோமோல் ஜோஷ், லாஸ்லியா, ஹரி கிருஷ்ணன் அனைவருக்கும் நன்றி. லிஜோமோல் ஜெய்பீமில் பார்த்ததை விட, மிகச்சிறப்பாக நடித்துள்ளார். லாஸ்லியாவுக்கு மிக அழுத்தமான பாத்திரம், ஒரு காட்சியில் லிஜோமோல், லாஸ்லியா இருவரும் கலக்கியிருக்கிறார்கள். வசனம் பாடல் வரிகள் யுகபாராதி அண்ணா, அவர் இப்படத்திற்குக் கிடைத்தது வரம். எந்த சாதியிலும் ஆணாதிக்கம் இன்றும் இருக்கிறது, அதைச் செருப்பால் அடித்த மாதிரி மிக அழுத்தமாகச் சொல்லியுள்ளார் இயக்குநர். ஹரி பிரதர் என்ன கேரக்டர் கொடுத்தாலும் தனித்துவமாகச் செய்வதைப் பார்த்து வியந்திருக்கிறேன். இப்படத்தில் கண்ணிலேயே நடித்துள்ளார். படத்திற்காக உழைத்த அனைத்து கலைஞர்களுக்கும் , படத்தை வெளியிடும் உத்ரா புரடக்சனுக்கும் நன்றி. அனைவருக்கும் நன்றி.