கவிதாலயா சரவணன் கிரியேசன்ஸ் தயாரிப்பில், ராம் தேவ் இயக்கத்தில் இயக்குநரும், நடிகருமான ரவி மரியா கதாநாயகனாக நடித்திருக்கும் ‘மக்கள் தலைவா’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு நிகழ்வு சென்னையில் நடந்தது. இந்நிகழ்வில் இயக்குநர்கள் கே. பாக்யராஜ், ஆர். கே. செல்வமணி, ஆர். வி. உதயகுமார், எழில், நந்தா பெரியசாமி, பிருந்தா சாரதி, லியாகத் அலிகான், சி. ரங்கநாதன், ஏ. ஆர். வெங்கடேஷ் வசனகர்த்தா வி. பிரபாகர், இசையமைப்பாளர் தீனா, விநியோகஸ்தர் ஸ்ரீதர், தொழிலதிபர் சுப்புராஜ் உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். இத்திரைப்படத்தில் ரவி மரியா, அக்சரா விஜய், ராதா ரவி, பழ. கருப்பையா, நாஞ்சில் சம்பத், இயக்குநர் பேரரசு, கஞ்சா கருப்பு, கவிதாலயா சரவணன், அக்னி எஸ்.வருண் மற்றும் பலர் நடித்துள்ளனர். கார்த்திக் எஸ். நாயர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு துளசி ராமன் இசையமைத்திருக்கிறார். நகைச்சுவை அரசியல் பொழுதுபோக்கு படமாக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை தயாரிப்பாளர் கவிதாலயா சரவணன் தயாரித்திருக்கிறார். இவருடன் எஸ். வெங்கடேசன், சந்திரசேகரன், ராம்குமார் ஆகியோர் இணை தயாரிப்பாளர்களாக உள்ளனர். விரைவில் இத்திரைப்படம் வெளிவரயுள்ளது.*******
இந்நிகழ்வில் நடிகர் ரவி மரியா பேசியதாவது: ”என்னுடைய அன்பிற்காக, நட்பிற்காக இங்கு வருகை தந்திருக்கும் அனைவருக்கும் நன்றி. வழக்கமாக நான் அனைத்து படங்களிலும் வில்லனாக நடித்தாலும் நகைச்சுவையாளனாக நடித்தாலும் குணச்சித்திர வேடத்தில் நடித்தாலும் நிறைய பேசுவேன். ஆனால் இந்த படத்தில் கதாநாயகன் என்பதால்.. நிறைய பேசவில்லை. இருந்தாலும் இந்தப் படத்தை அனைவரும் திரையரங்குகளில் பார்த்து ரசித்து ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.
தயாரிப்பாளர் கவிதாலயா சரவணன் பேசுகையில், ” இந்தப் படத்தின் மூலம் முதன்முதலாக திரையுலகில் அடியெடுத்து வைத்திருக்கிறேன். இப்படத்தில் நடித்திருக்கும் நட்சத்திரங்கள் அனைவரும் என்னுடைய இல்லத்திற்கு வருகை தந்தனர். இதனையே நான் பெரிய வெற்றியாக கருதுகிறேன். இந்த மேடைக்கு சிறப்பு விருந்தினர்களாக வருகை தந்திருக்கும் பலரையும் திரையில்தான் நான் பார்த்திருக்கிறேன். அவர்களுடன் இணைந்து ஒன்றாக இந்த மேடையில் இருப்பது பெருமிதமாக இருக்கிறது. திரையுலகத்தை சார்ந்த ஒருவர் தமிழக முதல்வராக பொறுப்பேற்றிருக்கிறார். இதன் மூலம் சிறிய முதலீட்டு தயாரிப்பாளர்களுக்கு ஆதரவு கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறேன். இந்தப் படத்தில் நடித்த நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் கடுமையாக உழைத்து தங்களுடைய ஒத்துழைப்பை அளித்துள்ளனர். இந்தப் படம் அரசியல் சார்ந்த காமெடி படம். இந்த படத்தை அனைவரும் திரையரங்குகளில் பார்த்து ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.
இயக்குநர் ராம் தேவ் பேசுகையில், ‘மக்கள் தலைவா’ என்ற இந்தப் படத்தின் கதையை முதன்முதலாக இயக்குநர் சி ரங்கநாதன் மூலமாக இயக்குநர் எஸ். ஏ . சந்திரசேகரிடம் சொன்னேன். இந்தப் படத்தின் கதை பாட்டிலுக்கு பத்து ரூபா வாங்குவது பற்றியது. அவருடன் நீண்ட நேரம் கதையைப் பற்றி விவாதித்தேன். அதில் ஒரு கட்டத்தில் கதாநாயகனுக்கு எதிராக அரசியலில் இரு துருவங்கள் ஒன்றிணைவது போன்று வரும். அப்போது இது எப்படி சரியா வரும்? எனக் கேட்டேன். அரசியலில் அதெல்லாம் வரும் என்றார். அதனைத் தொடர்ந்து இந்தப் படத்திற்கு ‘மக்கள் தலைவா’ என்ற தலைப்பையும் அவர்தான் தேர்வு செய்தார். அவருக்கு இந்த தருணத்தில் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால் பகிர்ந்து கொள்ள முடியாத சில காரணங்களால் அவரால் நடிக்க முடியவில்லை. அதன் பிறகு இந்த கதையில் யாரை நடிக்க வைக்கலாம் என்று பட்டியலிட்டபோது ராதாரவி இடம் பெற்றார். கதையைக் கேட்ட அவர் எனக்கு அரசியல் நன்றாகத் தெரியும் ஆனால் எனக்குத் தெரியாத பல விசயங்களை நீ தெரிந்து வைத்திருக்கிறாய். அதை எப்படி நீ யோசித்தாய்..! என கேட்டுவிட்டு, நடிக்க சம்மதம் தெரிவித்தார். படப்பிடிப்பு தளத்தில் அவர் எதிர்பார்த்ததை விட சிறப்பாக நடித்தார்.

