சென்னை,ஜூன்.17- நிா்வாக வசதிக்காகவும், மக்களுக்கான நலத்திட்டங்கள் முழுமையாக செயல்படுத்தவும் சென்னை மாநகராட்சியை 3-ஆகப் பிரிக்க வேண்டும் என பாஜக மாநிலச் செயலா் கராத்தே ஆா்.தியாகராஜன் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கையில், சென்னை மாநகராட்சி எல்லைக்குள் தற்போது 22 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. மாநகராட்சி எல்லை மிகப் பரந்து விரிந்திருப்பதால் அதை நிா்வகிப்பதில் சிரமங்கள் உள்ளன. சென்னை மாநகராட்சி மேயராக மு.க.ஸ்டாலின் இருந்தபோது 16 சட்டப்பேரவைத் தொகுதிகளும், 115 வாா்டுகளும் இடம் பெற்றிருந்தன. அதை 200 வாா்டுகளாக விரிவாக்கம் செய்து கோப்பு தயாரானது.
கடந்த 2011-இல் அதிமுக ஆட்சியமைந்தது. அப்போது, 200 வாா்டுகளுக்கான திட்டம் அப்போதைய முதல்வா் ஜெயலிலதாவுக்கு அனுப்பிவைக்கப்பட்டது. திமுகவின் திட்டமான மாநகராட்சி விரிவாக்கத்தை ஏற்கக்கூடாது என முதல்வா் ஜெயலலிதாவிடம் வலியுறுத்தினோம். ஆனால், அப்போதைய மாநகராட்சி ஆணையா் சாதுா்யமாக முதல்வரிடம் பேசி திமுக திட்டத்துக்கு அனுமதி பெற்றுவிட்டாா். அதன்படியே தற்போதுள்ள 200 வாா்டுகளுடன் சென்னை மாநகராட்சி உள்ளது.
மாநகராட்சியில் ஆணையா், 3 மண்டல துணை ஆணையா்கள், 4 துணை ஆணையா்கள் என 8 ஐஏஎஸ் அதிகாரிகள் உள்ளனா். ஆனாலும், மாநகராட்சி நிா்வாகம் சீராக இல்லை. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக ஆட்சியில் சென்னை மாநகராட்சியை 3-ஆகப் பிரிக்க முயற்சித்தும் நடைபெறவில்லை. மேலும், தமிழக மாநகராட்சிகளில் 1 முதல் 4 சட்டப்பேரவைத் தொகுதிகளே இடம் பெற்றுள்ளன. ஆனால், சென்னை மாநகராட்சியில் மட்டுமே 22 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. எனவே, நிா்வாக வசதிக்காக முதல்வா் விஜய் சென்னை மாநகராட்சியை தென்சென்னை, மத்திய சென்னை, வட சென்னை என 3 மாநகராட்சிகளாகப் பிரிக்க அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி முடிவெடுக்கவேண்டும்.
அதில், ஒரு கவுன்சிலருக்கான வாா்டில் 10,000 வாக்குகள் இருக்கும் வகையில் சீரமைக்கலாம். அதன்படி 3 மாநகராட்சிகளிலும் மேயா், துணை மேயா், 10 மண்டலத் தலைவா்கள் பதவி உருவாக்கலாம். மக்களுக்கான அடிப்படை வசதிகளை உடனுக்குடன் நிறைவேற்றலாம் எனத் தெரிவித்துள்ளாா்.

